Thursday 12 July 2018


ஓடு கழற்றும் நண்டு

பாம்பு அதன் மேல்தோலை உரிப்பதை சட்டை உரிப்பது என்பார்கள். பாம்பு மட்டுமல்ல, வெட்டுக்கிளி, கரப்பான், சிலவகை வண்டுகளிடம் கூட சட்டை உரிக்கும் வழக்கம் உண்டு.
அதுபோல நண்டுகளும் காலத்துக்கு காலம் தங்கள் மேல்தோடுகளை கழற்றிக் கொள்ளும். புதிய மேல்தோட்டை தங்கள் மீது உருவாக்கிக் கொள்ளும். இப்படி நண்டு அதன் ஓட்டைக் கழற்றுவது அதன் வளர்ச்சியில் ஓர் அங்கம்.
நண்டு வளரும்போது கூடவே அதன் ஓடும் வளராது என்பதால், ஓடு மிகவும் இறுகிவிடும்போது, மேற்கொண்டு வளர்ச்சியடைய அந்த ஓடை கழற்றி விடுவது காலத்தின் தேவையாகிறது. நாம் வளரும் போது பழைய சட்டை இறுக்கமானால் அதை கைவிட்டுவிட்டு புதிய சட்டை அணிந்து கொள்கிறோம் இல்லையா? அதைப்போல.
நண்டுக்கு அதன் எலும்புக்கூடு (Skeleton) உடலுக்கு வெளிப்புறத்தில் இருக்கிறது. வளரும் நண்டுக்கு இந்த ஓடு, ஒரு கட்டத்தில் இடைஞ்சலாக உருவெடுக்கும். தகுந்த கால இடைவெளியில் இந்த ஓட்டை அகற்றினால் தான் நண்டு மேற்கொண்டு வளர முடியும். அதனால் நண்டு அதன் மேற்கூட்டை கழற்றுகிறது.
நண்டின் ஓடு கால்சியம் கார்பனேட்டால் ஆனது. பழைய சட்டையைத் தூக்கி எறியும் முன் அதில் உள்ள பொத்தான்கள், சட்டைப்பையில் உள்ள பணம் போன்றவற்றை நாம் எடுத்துக்கு கொள்வது போல, நண்டு அதன் ஓட்டை கழற்றும் முன் ஓட்டிலுள்ள சில சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும்.
அதன்பின் ஒருவகை நொதியை (Enzyme) நண்டு சுரக்கச் செய்யும். இந்த நொதி மூலம் ஓட்டின் அடியில் புதிதாக காகிதம் போன்ற மென்மையான புதிய ஓடு தோன்றும்.
இப்போது ஓடு கழற்றும் படலம். நண்டு கடல்நீரை குடித்து உடலை பலூன் போல வீங்கச் செய்யும். இதன்மூலம் நண்டின் மேல் ஓடு கழன்று கொள்ளும். இப்படி நண்டு அதன் ஓட்டை கழற்ற வெறும் 15 நிமிட நேரம் போதும். நண்டின் புதிய உடற்கூடு ஆரம்பத்தில் மென்மையாக இருக்கும். போகப்போக அது கடினமாகும்.
நண்டு இப்படி ஓட்டைக் கழற்றும்போது அதன் எதிரிகள் நண்டைத் தாக்கி உணவாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, பத்திரமான ஒரு மறைவிடத்தில் வைத்துதான் நண்டு ஓடைக் கழற்றும். இப்படி ஓடு கழற்றிய நண்டு உண்பதற்கு சுவையானது அல்ல. ஓடு கழற்றிய நண்டு, அந்த காலகட்டத்தில், உடலில் அதிக நீருடன் சுவைகுன்றி காணப்படும்.
நண்டுகள் புதிய ஓடு மாற்றிக் கொள்வதன் மூலம் அவற்றுக்கு வேறு சில நன்மைகளும் இருக்கின்றன. பழைய ஓட்டில் இருந்த நுண்ணுயிர் பாதிப்பு, கொட்டலசு போன்ற ஒட்டுண்ணிகளின் தொல்லை ஒட்டைக் கழற்றி விடுவதால் நீங்குகிறது. கழற்றப்பட்ட ஓடு. அச்சு அசலாக நண்டு போலவே தோற்றம் தரும்.
கால் உடைந்த நண்டுகளும் கூட பழைய ஓட்டைக் கழற்றி புத்தாடை போடும்போது அவற்றின் கால்கள் புதிதாக முளைத்துவிடும். மிக முதிய வயது நண்டுகளுக்கு உடைந்த கால் மீண்டும் வளரத் தொடங்கினாலும், ஓடு மாற்றும் பழக்கத்தை அவை விட்டுவிடுவதால் உடைந்த கால் ஒரு கட்டத்தில் வளர்ச்சியை நிறுத்தி, குட்டைக் காலாகி விடும்.
நண்டு அதன் வாழ்நாளில் ஏறத்தாழ 20 முறை ஓடு கழற்றும். 2 வயது நண்டாக இருந்தால் ஆண்டுக்கு 3 முறையும், 3 வயது நண்டாக இருந்தால் ஆண்டுக்கு 2 முறையும், 4 வயது நண்டாக இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறையும் ஓடு கழற்ற வாய்ப்புண்டு. ஆண் நண்டுகள் வயதாக வயதாக ஓடு கழற்றுவதைக் குறைத்துக் கொள்ளும்.
ஆனால், பெண் நண்டுகள் அப்படியல்ல. ஓடு கழற்றினால்தான் பாலுறவு கொள்ள முடியும் என்பதால் வாழ்நாள் முழுவதும் அவை ஓடு கழற்றியே ஆக வேண்டும்.

Wednesday 4 July 2018


அம்மணி உழுவை (Whale Shark)

நமது புவிக்கோளத்தின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவையைப் பற்றி ஏற்கெனவே நமது வலைப் பதிவில் பதிவு செய்திருக்கிறோம். இருப்பினும் உலகின் மிகப்பெரிய மீனாயிற்றே? அதுபற்றி புதிய தரவுகளுடன் மீண்டும் பதிவிடுவது தானே சரி? அதன்படி இந்த புதிய பதிவு.
வடதமிழக கடற்கரையில் பெட்டிச்சுறா எனவும், ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழ்ப்‘படுத்தி‘ திமிங்கிலச்சுறா எனவும் தமிழில் அழைக்கப் படும் ஒரு மீன் அம்மணி உழுவை. 
அம்மணி உழுவை 46 அடி நீளம் வரை வளரக் கூடியது. ஆனால், சராசரியாக ஒரு அம்மணி உழுவை 18 முதல் 32 அடி நீளம் வரை வளரும். அம்மணி உழுவையின் எடை ஏறத்தாழ 12 டன் (அதாவது 12 ஆயிரம் கிலோ!)
அம்மணி உழுவையின் தலை தட்டையானது. மூக்கு மொண்ணையானது. கெழுது (கெளிறு) மீனுக்கு இருப்பதைப் போல அம்மணி உழுவைக்கும் மீசை கள் (Barbell) துருத்திக் கொண்டு நிற்கும்.
அம்மணி உழுவையின் உடல் முழுவதும் வெள்ளைநிறப் புள்ளிகளும், மங்கலான கோடுகளும், பட்டைகளும் காணப்படும். நமது கைரேகை ஆளுக்கு ஆள் வேறுபடுவது போல, ஒர் அம்மணி உழுவையின் உடலில் இருப்பது போன்ற புள்ளிகள், வரிகள் இன்னொரு அம்மணி உழுவையின் உடலில் இருக்காது.
அம்மணி உழுவையின் வாய் ஐந்தடி அகலம் கொண்டது. ஒரு வரிசையில் 300 பற்கள் வீதம், அம்மணி உழுவைக்கு மொத்தம் மூவாயிரம் பற்கள். அரிசிமணி போன்ற இந்த சிறுபற்கள் வெறும் 6 மில்லி மீட்டர் நீளமானவை. இந்தப் பற்களைக் கொண்டு அம்மணி உழுவை கடிக்கவோ, சவைக்கவோ செய்யாது.
அம்மணி உழுவை அதன் செவுள்கள் (Gills) மூலம், கடலில் உள்ள கவுர்களை (பிளாங்டன்களை) (சிறு மிதவை நுண்ணுயிர்களை) வடிகட்டி உண்ணும். கடல் நீரை செவுள்களுக்குள் பாய்ச்சி, இரையை மட்டும் வடிகட்டி, எஞ்சிய நீரை வெளியே விடும். கவுர்கள் குறைவாகும் காலத்தில் பாசி, கூனிப்பொடி, இறால், நெத்தலி, சாளை, கணவாய் ஏன் சிறிய சூரை மீன்களைக் கூட இது உணவாக விழுங்கும்.
பார்க்கடல்களில் மீன்கள் முட்டையிடும் காலத்தைத் தெரிந்து கடலில் பரவும் மீன் முட்டைகளை 14 மணிநேரம் வரை காத்திருந்து அம்மணி உழுவை இரை யாக்கும். கடலில் அருகில் நீந்திவரும் மனிதர்களைக்கூட இது தாக்குவதோ, கடிப்பதோ இல்லை.
அம்மணி உழுவை, பெருஞ்சுறாவைப் (White Shark) வாலைப் பயன்படுத்தி நீந்தாமல், உடலை இருபுறமும் அசைத்து அசைத்து நீந்தும்.
பெண் அம்மணி உழுவை 300 குட்டிகள் வரை போடும். ஆனால், இவற்றில் சில குட்டிகள்தான் கடைசிவரை உயிர்பிழைத்திருக்கும். அம்மணி உழுவை 25 வயதில் பருவமடையும். ஒரு நூற்றாண்டு முதல் ஒன்றரை நூற்றாண்டு காலம் உயிர்வாழும்.