மீன் வயிற்றில் மனிதன்!
பிருதெஸ் திமிங்கிலம் |
கிறிஸ்துவர்களின் புனித நூலான விவிலியத்தில் யோனா (Jonah) என்ற இறைதூதரை பெரிய மீன் ஒன்று
விழுங்கியதாக ஒரு பதிவு உள்ளது. அந்த கடல்மீனின் வயிற்றில்
மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் யோனா உயிருடன் இருந்து
பின்னர் உயிருடன் மீண்டதாக விவிலியத்தில் பதிவுகள் உள்ளன.
யோனாவை விழுங்கிய மீன் திமிங்கிலமாக(?) இருக்கலாம் என்று கருதப்பட்டாலும் அது எந்த
வகையான மீன் என்பது பற்றி பைபிளில் தெளிவாக எதுவும்
குறிப்பிடவில்லை என்றாலும், யோனாவை விழுங்கிய மீன் குறைந்தது
2 மீட்டர் நீளமுள்ள மீனாக இருந்திருக்க வேண்டும். கடலில் 2 மீட்டர் நீளத்துக்கும் மேற்பட்ட பலவகை மீன்கள் உள்ளன.
அதுபோன்ற பெரிய மீன்களில் ஒன்று, மீன் இனத்தில் உலகிலேயே மிகப்பெரிய மீனான அம்மணி உழுவை (Whale
Shark). மற்றொன்று மேய்ச்சல் சுறா (Basking Shark). இந்த இரு மீன்களும் மிக நீளமான பெரிய வகை மீன்கள். இவற்றில்
ஏதாவது ஒன்று யோனாவை விழுங்கியிருக்க கூடும் என்று கருதப்பட்டாலும், இந்த இருவகை மீன்களும், பிளாங்டன் எனப்படும் கடல்
கவுர்களையும் சிறு மீன்களையும் உண்ணக்கூடியவை. இவற்றால் ஒரு
மனிதனை முழுதாக விழுங்க முடியுமா என்பது ஐயம்தான்.
அம்மணி உழுவையின் உணவுக்குழாய் (Oesophagus)
சில அங்குல குறுக்களவு மட்டுமே கொண்டது.
அம்மணி உழுவையின் வாய்க்குள் சோற்றையோ கடல்பாசியையோ நாம் வீசி எறிந்தால், சுவரில் அடித்த
பந்து போல அவை வெளியே வந்து விழுந்துவிடும். அதாவது அம்மணி
உழுவை அவற்றை வெளியே துப்பிவிடும். எனவே முழு மனிதன் ஒருவனை
அம்மணி உழுவையோ, மேய்ச்சல் சுறாவோ விழுங்க வாய்ப்பில்லை.
அப்படியும், அழையா விருந்தாளியாக மனிதன்
அவற்றின் வாய்க்குள் புகுந்தாலும் மறுபொழுதே அவை மனிதனை வெளியே துப்பி விடும்.
அம்மணி உழுவை, மேய்ச்சல்
சுறாவுக்கு அடுத்தபடியாக பெரும் வெள்ளைச்சுறா எனப்படும் பெருவஞ்சுறா (Great
White Shark) களவா (Grouper) போன்ற மீன்கள்
மனிதனை முழுதாக விழுங்கும் அளவுக்குப் பெரியவை.
ஸ்பெர்ம் (Sperm) எனப்படும்
விந்து திமிங்கிலங்களாலும் மனிதனை முழுதாக விழுங்க முடியும். இந்த வகை
திமிங்கிலங்கள் மிகப்பெரிய கணவாய்களையும், பதினைந்து அடி நீள சுறாவையும்
சிலவேளைகளில் முழுதாக விழுங்கக் கூடியவை.
அப்படி ஒரு முழு மனிதனை ஸ்பெர்ம் திமிங்கிலம் விழுங்கினால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
ஸ்பெர்ம் (Sperm) திமிங்கிலத்துக்கு
பசுவுக்கு இருப்தைப்போல நான்கு வயிறுகள் உண்டு. உணவை செரிக்க
வைக்கக் கூடிய அமிலங்களும், சாறுகளும் இந்த வயிறுகளில்
நிறைந் திருக்கும். ஸ்பெர்ம் (Sperm) திமிங்கிலத்தின்
செரிமான பாதையில் காற்றை இழுத்து மூச்சுவிட போதிய வசதியிருக்காது
என்பதுதான் துயரம். மனிதன் ஒருவன் ஐந்து மணித்துளிகள் மூச்சு
விட காற்றில்லாமல் இருந்தால் அவன் இறந்து விடுவான். எனவே மனிதர்கள்
உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் ஸ்பெர்ம் (Sperm) திமிங்கிலத்தின்
வயிற்றில் இல்லை.
ஆஸ்திரேலியாவில் ஒருமுறை பெரிய வெள்ளைச்சுறா (பெருவஞ்சுறா) (Great White Shark) ஒன்று 2.1 மீட்டர் நீளமும், 80 கிலோ எடையும் உள்ள சாம்பல்நிற சுறா ஒன்றை முழுதாக விழுங்கியது. அப்படியானால் வெள்ளைச்சுறாவால் இதுபோல ஒரு மனிதனையும் முழுதாக விழுங்க
முடியும் என்பதுதான் உண்மை.
சுறாக்கள் சிலவேளைகளில் அவற்றின் உணவை முழுதாக விழுங்கி
வைக்கும். அல்லது, கடித்து
சிறுசிறு துண்டுகளாக்கி உண்ணும். சுறாக்களின் வயிறு U
என்ற ஆங்கில எழுத்தைப் போன்றது. அவற்றில்
வலிமை வாய்ந்த அமிலங்களும், நொதிகளும் இருக்கும். தின்னும் இரையைக் கரைக்க இந்த அமிலங்களும், நொதிகளும்
பயன்படுகின்றன.
சுறாக்களின் வயிற்றுக்கும், குடலுக்கும் இடையே உள்ள பைலோரிக் (Pyloric) குழாய்
மிகவும் சிறியது. இவற்றின் வழியே திடஉணவு போக முடியாது
என்பதால், சுறா வயிற்றில் வந்து விழும் இரை, அமிலங்களால் கரைக்கப்பட்டு சூப் போல ஆக்கப்பட்டு, குடலுக்குப்
போய்ச் சேரும். செரிக்க முடியாத பெரிய எலும்புகள், ஊட்டச்சத்தற்ற பொருள்களை சுறா வாந்தி மூலம் வெளியேற்றி விடும். சுருக்கமாகச் சொன்னால் சுறாக்களின் வயிற்றுக்குள் போய் இரையாக விழுவது
எளிது. வெளியே வருவது கடினம்.
களவா (Grouper) மீன்களைப் பொறுத்தவரை அவற்றில்
மனிதனை முழுதாக விழுங்கக் கூடிய அளவுக்கு பெரிய மீன்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கோலியாத் களவா மிகப்பெரியது. ஒரு
கார் அளவுள்ளது.
ஆனால், களவா மீன்கள் கடித்துண்ணக்கூடிய
மீன்கள். மனிதர்களை சில வேளைகளில் அவை கொன்றிருப்பது தெரிய
வந்தாலும், மனிதர்கள் யாரையும் களவா முழுமையாக விழுங்கியதாக இதுவரை தகவல் வந்ததில்லை.
குகை அல்ல.. களவா மீனின் வாய் |
களவாக்கள் இரையை உறிஞ்சவும் செய்யும்.
சிலவேளைகளில் கடலடியில் முக்குளித்து வரும் மனிதர்களை நோக்கி அவை
உறிஞ்சும்போது முக்குளிப்பவரின் கை களவாவால் உறிஞ்சப்பட்டு அதன் வாய்க்குள்
சிக்கிய நிகழ்வுகள் உள்ளன. பின்னர்
அரும்பாடுபட்டு கை விடுவிக்கப்பட்டிருக் கிறது. இந்தநிலையில்,
களவா மீனால் முழுதாக ஒரு மனிதன் விழுங்கப்பட்டால் அதன்பிறகு என்ன ஆகும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே ஸ்பெர்ம் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்ட மனிதர்கள்
உயிர்பிழைத்த வரலாறும் உள்ளது. எடுத்துக்காட்டாக மார்ஷல் ஜென்கின்ஸ் என்பவர் 1771
ஆம் ஆண்டு ஸ்பெர்ம் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டு உயிர்பிழைத்திருக்கிறார்.
1891ஆம் ஆண்டு மற்றொரு நிகழ்வில், ஜேம்ஸ் பார்ட்லே என்பவர் தப்பிப்பிழைத்திருக்கிறார்.
ஸ்பெர்ம் திமிங்கிலம் ஒன்றை வேட்டையாட கடலில் முயற்சி நடந்தபோது
திமிங்கில வேட்டைக்காரர்களில் ஒருவரான பார்ட்லேயை திமிங்கிலம் விழுங்கிவிட்டு
அங்கிருந்து தப்பிச் சென்றது. வேட்டையர்கள் மறுநாள் அதை கண்டுபிடித்து கொன்றனர்.
அதன் உடலைப் பிளந்து பார்த்தபோது உள்ளே பார்ட்லே உயிருடன், ஆனால் மயக்கமாக
இருந்தார். திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த அமிலம் காரணமாக பார்ட்லேயின் தோல் வெளிறிப்போயிருந்தது.
சில வாரங்களாக நீடித்த மருத்துவ கண்காணிப்புக்குப் பின்
பார்ட்லே முழு உடல்நலத்தை அடைந்தார். ஆனால் அவரது கண்பார்வை போயிருந்தது. வாழ்நாள்
முழுவதும் அவர் பார்வை யற்றவராக வாழ்ந்தார்.
ஜேம்ஸ் பார்ட்லே தொடர்பான இந்த நிகழ்ச்சி பொய்யானது என்றும்,
இதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் திமிங்கிலம் அல்லது திமிங்கில அளவுள்ள
பெரிய வகை மீன்களால் மனிதர்கள் விழுங்கப்பட்டு உடனடியாக அவர்கள் துப்பப்பட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.
மற்றபடி, அறிவியலுக்குப் பொருந்தாவிட்டாலும், கடவுளின்
ஏற்பாட்டின்படி ஒருவர் மீனால் விழுங்கப்பட்டிருந்தால் அவர் மூன்று பகல்களும்,
மூன்று இரவுகளும் உயிரோடிருக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
No comments :
Post a Comment