Friday, 3 January 2020


எத்தனை மீன்கள்?

கடலில் எத்தனையோ வகை மீன்கள். ஆனால், தமிழ் மொழியில் மீன்களைக் குறிப்பிடும் சில சொற்கள் குறிப்பிட்ட ஒரு மீன் இனத்தைக் குறிக்காமல் சிலவகை மீன்களின் மொத்தத் தொகுப்பைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டாக வம்மீன்கள். இந்த சொல்லுக்கு வன்மையான மீன்கள் என்று பொருள். பாரை, கெழுது, கட்டா போன்ற மீன்களை வம்மீன் என்பார்கள். அதுபோல தேத்து வாளை என்பது தெளிவான கடல்நீரில் இருக்கும் வாளை மீனையும், கலக்கு வாளை என்பது கலங்கிய கடல்நீரில் இருக்கும் வாளை மீனையும் குறிக்கும்.
தாழ்ந்த மீன்கள் எனப்படும் வகையறாவில் மதனம், விளமீன் போன்றவை அடங்கும். கடலடி பார்களில் வாழும் மீன்கள் என்பதால் இவை தாழ்ந்த மீன்கள் என அழைக்கப் படுகின்றன. நெய் (எண்ணெய்) நிறைந்த மீன்களுக்கு நெச்சமீன்கள் என்பது பெயர். குழுவி மீன் என்பது சேனைப் பாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாடல்.
மீன் கூட்டங்களில் ஒழுங்கின்றி தாறுமாறாக ஓடும் மீன் கூட்டங்கள் உள்ளன. அவை மாப்பு மீன்கள். ஓர் ஒழுங்கோடு குறிப்பிட்ட இடைவெளியில் அழகாக ஓடும் மீன்கள் கூட்ட மீன்கள். இந்த வகை மீன்கள், ஆங்கிலத்தில் ஸ்கூல் பிஷ் (School Fish) என வழங்கப்படுகின்றன.
தமிழில் ஸ்கூல் (School) என்ற சொல்லுக்கு பள்ளி என்பது பொருள். ஒரே அளவிலான, ஏறத்தாழ ஒரே உருவிலான, ஒரே மாதிரி உடைகளுடன் கூடிய ஒரு கூட்டம் இருந்தால் அது பள்ளி.
கேரள மாநிலத்தில் போர்வீரர்களை கூட்டமாக ஏற்றிச் செல்லும் நீளமான படகுக்கு ‘பள்ளியோடம்’ என்ற பேர் உண்டு. மீன் கூட்டங்களிலும் ஒத்திசைவோடு, ஒரே சீரான தாளத்தப்படியோடு இயங்கும் கூட்ட மீன்களை ‘பள்ளி மீன்கள்’ (School Fish) என அழைக்கலாம். ஒன்றும் தப்பாகிவிடாது.
கடல் பரப்பில் அடிக்கடி புழங்கும் மற்றொரு வகை மீன்கள் ‘மோட்டு மீன்கள்’. இவற்றை உண்மையான மீன்கள் என்று நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள். மோட்டு மீன்கள் என்பது உயிருள்ள கடல் மீன்களைக் குறிக்காது, வானத்தில் உள்ள விண்மீன்களைக் குறிக்கும் சொல் இது.
வானத்தில் பளபளத்து ஒளிவீசும் வெள்ளிகளை மோட்டு மீன்கள் (முகட்டு மீன்கள்) என அழைப்பது மீனவர்களின் வழக்கம்.

No comments :

Post a Comment