Saturday 30 April 2016

பெருந்திரளை (Humphead Wrasse)

 அரிய, பெரிய வகை பார்மீன் இது. ஆறடி நீளமுள்ள இந்த மீன்தான் Wrasse குடும்ப மீன்களில் மிகப்பெரியது. நெற்றியில் முடிச்சு போன்ற சதை உள்ள இந்த மீன் 30 ஆண்டுகாலம் வாழக்கூடியது.
வளர்ந்த பெருந்திரளை தடித்த உதடுகளைக் கொண்டிருக்கும். இளம் மீன்களை அவற்றின் வெளிர்ப்பச்சை நிறத்தாலும், விழிகளுக்குப் பின்னால் ஓடும் இரு கரிய கோடுகளைக் கொண்டு அறியலாம்.
மாவோரி (Maori Wrasse), நெப்போலியன் மீன் என்றெல்லாம் ஆங்கிலத்தில் இது அழைக்கப்படுகிறது.
வளர்ந்த ஆண்மீன் எப்போதும் தனியாகவே திரியும். பார்களைச் சுற்றிசுற்றி வந்து விட்டு, இரவில் தனது குகையை இது அடையும்.
பலமான பற்களால் பெருந்திரளை மீன், கடினமான ஓடுகள் கொண்ட நட்சத்திரம் போன்ற முட்தோலிகளை உணவாக்கிக் கொள்ளும்.
ஒரா (ஓட்டா) போன்ற நஞ்சுமீன்கள், கடமாடு, கூர்ப்பல் உள்ள அஞ்சாலை மீன், போன்றவையும் இதன் உணவு.
பார்களை வெகு விரைவாக அழிக்கக் கூடிய முள்முடி (Crown of Thorn) நட்சத்திர உயிர், பெருந்திரளை மீனின் முதன்மை உணவு. இதன்மூலம் பவழப்பாறைகள் அழிந்துவிடாமல் பெருந்திரளை காக்கிறது.
மனிதர்களுக்கு ஆபத்தற்ற இந்த மீன், கடலுக்குள் முக்குளிப்பவர்களை அருகில் வந்து மிக உன்னிப்பாக க் கவனிக்கும். மனிதர்கள் தடவிக் கொடுப்பதையும் இது விரும்பும்.
மானின் கிளைக்கொம்பு போன்ற பவழப்பாறை அடர்த்திகளில் அடிக்கடி இந்தமீன் காணப்படும். முதிர்ந்த காலத்தில் பெருந்திரளை மீனில், பெண்மீன், ஆணாக மாறக் கூடியது.
மன்னர்களுக்கு வழங்கப்படும் உயரிய மீன் இது. பழங்காலத்தில் இந்தமீனைப் பிடித்த பரதவர்கள் தங்களால் மதிக்கப்படும் மிக உயர்ந்தவர்களுக்கு இதை பரிசாக வழங்கியுள்ளனர்.

Cheilinus undulatus என்பது பெருந்திரளையின் அறிவியல் பெயர்.

Thursday 28 April 2016

ஆனைத்திருக்கை (Manta Ray)


திருக்கை இன மீன்களில் மிகப்பெரியது யானைத்திருக்கை. உலகம் முழுவதும் அனைத்து வெப்பக் கடல்களிலும் காணப்படும் மிகபிரம்மாண்டமான கடல்உயிரினம் இது.
சுறாக்கள், திருக்கைகள், வேளா, இழுப்பா, உழுக்கு போன்ற மீனினங்கள் அனைத்தும் குருத்தெலும்பு கொண்டவை. ஆனைத்திருக்கையும் எலும்பற்ற, குருத்தெலும்பு கொண்ட ஒருகடல்மீன். அந்தவகையில் சுறா இனத்தைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவை, யானைத்திருக்கைக்கு ஒருவகை யில் உறவுக்கார மீன்.
ஆனைத்திருக்கைகளில் மொத்தம் 7 வகைகள் உள்ளன. இதில் மிகப்பெரிய திருக்கை பெருங்கடல்களில் சுற்றித்திரிவது. இதில் மிகவும் சிறியது, பார்ப் பகுதிகளில் வாழ்வது. பெருங்கடல் ஆனைத்திருக்கை 23 அடி அகலமும், 2 ஆயிரம் கிலோ எடையும் இருக்கலாம்.
பார்க்கடல்களையே தனது இருப்பிடமாகக் கொண்டு, பார்களைச் சுற்றிச்சுற்றி வந்து நெடுந்தொலைவுக்கு வலசை போகாமல் இருக்கும் சிறிய ஆனைத்திருக்கை, 11 அடி அகலமாகவும், ஆயிரத்து 400 கிலோ எடையும் இருக்கலாம்.
யானைத்திருக்கை எனப்படும் இந்த மாணப்பெரிய திருக்கை இனத்தின் மேல்பகுதி கறுப்பாகவும், அடிப்பகுதி வெண்மையாகவும் விளங்கும். உடலின் அடிப்பகுதியில் யானைத்திருக்கைக்கு செவுள்கள் இருக்கும். கடல்நீரில் மூழ்கி நீந்தும்போது கடல்நீரை செவுள்கள் வழியாக உள்ளேஇழுத்து அதில் உள்ள உயிர்க்காற்றைப் பயன்படுத்தி யானைத்திருக்கை மூச்சுவிடுகிறது.
ஆனைத்திருக்கை தொடர்ந்து இப்படி கடல்நீரை காற்றாக்கி மூச்செடுக்க வேண்டுமானால் அது ஓரிடத்தில்கூட நிற்காமல் போய்க்கொண்டே இருந்தாக வேண்டும். ஆகவே ஆனைத்திருக்கை நிற்பதோ, தூங்குவதோ, கடலடியில் ஓய்வெடுப்பதோ இல்லை. யானையைப் போலவே எப்போதும் அசைந்து கொண்டே நகர்ந்து கொண்டே இருக்கும் உயிர் இது.
மீன் இனங்களில் மிகப்பெரிய மூளை கொண்ட மீன் யானைத்திருக்கைதான். மூளையின் உதவியால், தன் உடலை இது வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளும். யானைத்திருக்கையால் பின்னோக்கி நீந்த முடியாது. ஆகவே பெரிய வலைகளில் சிக்கினால் மூச்செடுக்க முடியாமல் யானைத்திருக்கை இறக்க நேரிடலாம்.
யானைத்திருக்கைமீன், பறவை பறப்பதுபோல மிகவும் திறமையாக நீந்தக்கூடியது. சிறகுபோன்ற அமைப்பால் இது நீரைப் பின்னுக்குத் தள்ளி நீந்தும். யானைத் திருக்கையின் கீழ்த்தாடையில் மட்டுமே உள்ள பற்கள் இரையை சவைக்க பயன்படுகிறது. மற்றபடி, திருக்கை மீன்களுக்கு இருப்பதுபோன்ற நஞ்சுள்ள கொடுக்குமுள் எதுவும் யானைத்திருக்கையிடம் கிடையாது.
யானைத்திருக்கையின் முக்கிய உணவு கடலில் உள்ள பிளாங்டன் எனப்படும் கவுர்கள்தான்.
கண்ணுக்குத் தென்படா விதத்தில் கடல்நீரில் கலந்திருக்கும் சின்னஞ்சிறு நண்டு, கணவாய், இறால் போன்ற ஒளியுமிழக்கூடிய கவுர் என்ற நுண்ணிய உயிர்களே இதன் இரை.
பார்வையாலும், மோப்பத்தாலும் கவுர்களை தேடிப்பிடித்து யானைத்திருக்கை அவற்றை உணவாக்கும். இதன் பிரம்மாண்டமான வாய் ஒரு கடல்நீர் வடிகட்டி. கவுர்களைச் சுற்றிச்சுற்றி வந்து அவற்றை ஒன்றுதிரட்டி இறுக்கமான பந்தாக்கி தனது வாயைத் திறந்து யானைத்திருக்கை அந்த உணவுப்பந்தை உள்ளே வரவைக்கும். பின்னர் அந்த கடல்சூப்பை அது சுவை பார்க்கும். தனது உடல் எடையில் 13 விழுக்காடு அளவு உணவை ஒரே வாரத்தில் யானைத் திருக்கை உண்ணக்கூடியது.

யானைத்திருக்கையால் 50 முதல் நூறாண்டுகாலம் வரை வாழமுடியும். 20 வயதில் இது பருவமடையும். இனப்பெருக்கக் காலத்தில் ஒரு பெண்மீனை 30 ஆண்மீன்கள் வரை பின்தொடரும். கடலில் 400 மீட்டர் ஆழம் வரை மூழ்கியும் சட்சட்டென்று திரும்பியும், முக்குளித்தும் பெண் மீன் போக்குக் காட்டி, தன்னைப் பின்தொடர்ந்து வரும் மீன்களில் மிகச்சிறந்த, திறமையான ஓர் ஆண் மீனை தேர்வு செய்து உறவு கொள்ளும்.
உறவின்போது இரு வயிறுகளும் இணையும். அப்போது பெண்மீனிடம் இருந்து பிடிநழுவாமல் இருக்க, அதன் இடப்பக்க இறக்கையை, ஆண்மீன் கடித்துப் பிடித்துக் கொள்ளும். மனித பெண்ணைப்போலவே வயிற்றுக்குள், தனது சாயலில் குட்டியைக் கருவாக சுமந்து யானைத்திருக்கை பெறக்கூடியது. ஒன்று அல்லது 2 குட்டிகளை இது ஈனும்.
ஒருவகையில் மனிதர்களுக்கு எந்தவகையிலும் ஆபத்தற்ற மீன் யானைத்திருக்கை. ஆனால் சீண்டினால் ஒருவேளை இது மனிதர்களைத்  தாக்கக்கூடும்.
கடல்மேல் பாய்ந்து தொப்பென விழுவது யானைத்திருக்கையின் பழக்கம். தன் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளையும், தன்னுடன் ஒட்டிக் கொண்டு உடன்வரும் உருவு மீன்களையும் கழற்றிவிட யானைத்திருக்கை இப்படி கடல்மேல் இறைந்து விழலாம். அல்லது வேடிக்கைக்காகவோ, மற்ற மீன்களுடன் தகவல் தொடர்புக்காகவோ, பெண் மீனைக் கவரவோ யானைத்திருக்கை இப்படிச் செய்யலாம்.
கடலில் யானைத்திருக்கையின் எதிரி சிலவகை சுறாக்கள்தான். யானைத் திருக்கையின் உடல்களில் அங்கங்கே சுறாக்கள் கடித்த காயங்களை அடிக்கடி காணமுடியும். ஆனால், அந்த காயங்கள் விரைவில் ஆறி, மீண்டும் தன் அன்றாட வாழ்க்கையைப் புத்தம்புதிதாகத் தொடங்கிவிடும் யானைத்திருக்கை.


Tuesday 26 April 2016

நாய் அடல்மீன் (எருமை நாக்கு) (Indian haliput)

மீன்களில் புதுமையான அமைப்பு கொண்ட மீன் அடல்மீன். முட்டையில் இருந்து பிறக்கும்போது வழக்கமான மீன்உருவத்தையே அடலும் கொண்டிருக்கும். சில நாட்கள் கழித்து அதன் ஒரு கண் இடம்பெயர்ந்து, மேல் நோக்கி பயணமாகி, மறுபக்க கண்ணின் மேலாக, முதுகுத் தூவிமுனையில் போய் அமர்ந்து கொள்ளும்.
நீள்வட்டமான இந்த தட்டை வடிவ அடல்மீனுக்கு இருகண்களும் ஒரே பக்கம் அமைந்திருப்பதுதான் சிறப்பு.
அடல்மீன்களில் ஒன்று நாய்அடல். இதுவும் தட்டையானதுதான் என்றாலும் சற்று சதைப்பற்றுள்ள மீன் இது. நாய் அடலின் பெரிய வாயில் பலமான ஈரடுக்குப் பற்கள் காணப்படும்.
அடல்மீனின் மேல்புறம் பழுப்பு சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெண்மை நிறமாகவும் விளங்கும். Benthic எனப்படும் கடலடி வகை மீனான அடல், கடல் தரையில் மணல் அல்லது மண்டியில் (சகதியில்) பதிந்து மறைந்திருக்கும். பகல்முழுக்க மறைந்து கிடக்கும் அடல், இரவானது இரை தேட வெளிக்கிளம்பும். படுக்கை வசமாக நீந்தும் அடல்மீன், முழுக்க முழுக்க மீன்களை மட்டுமே உண்ணும் கடல்உயிர் ஆகும். மெதுவாக நீந்துவதைப் போல தோற்றம் தரும் அடல், இரையை விரைந்து பிடிக்கவும் வல்லது.
உண்பதற்கு மிகவும் சுவையான மீன் அடல். இதன் தசை மாவாகவும் மாற்றி உண்ணப்படுகிறது.
அடல்கள் பொதுவாக கையில் பிடித்தாலோ காலால் மிதித்தாலோ வழுக்கக் கூடியவை.  
Psettodes erumai என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் நாய் அடலின், எருமை என்ற பெயர் தமிழில் இருந்து வந்தது. ஆங்கிலத்தில் Sole fish,அடலா எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்த அடலாவும், தமிழின் அடல் என்ற பெயரில் இருந்து வந்ததுதான்.

அடல்மீன் வகைகளில் ஒன்று மண்அடல். நீள்வட்டவடிமான மண் அடலுக்கு வால் ஊசியாக போய் முடியும். தலை முதல் வால் வரை மேலும், கீழும் பூரானின் கால்களைப் போல மண் அடலுக்கு மயிர்க்கற்றை போன்ற தூவிகள் அமைந்திருக்கும். இந்த முதுகுத்தூவியும், அடிப்புறத்தூவியும் வால்முனையில் ஒன்றுகூடி முடிவடையும். நாய் அடல் போல முழுக்க மீன்களை உண்ணாமல் கடலடி சிறு உயிர்களை உண்பது மண் அடலின் வழக்கம்.

Tuesday 19 April 2016

கட்டா (Queen Fish) 

வெப்பக் கடல் மீன்களில் ஒன்று கட்டா. இதன் அறிவியல் பெயர் Scomberoides Commersonnienus. இது சூரை இனத்தைப் போன்றது என்று சொல்லாமல் சொல்கிறது கட்டாவின் இந்த அறிவியல் பெயர்.

கட்டாக்களில பலவகைகள் உள்ளன. புள்ளிக் கட்டா, மஞ்சள் கட்டா, ஓமலி கட்டா, ஆரியக் கட்டா, செல் கட்டா, அம்முறிஞ்ச கட்டா என தமிழில் 12 வகையான கட்டாக்களின் பெயர்களைச் சொல்லலாம். கட்டாவில் பெரியது ஓங்கல் கட்டா.
புள்ளிக்கட்டாவின் இருபக்கங்களிலும் நேர் வரிசையில் 7 வெள்ளிநிறப் பொட்டுகள் அமைந்திருக்கும், கட்டா உயிருடன் இருக்கும்போது வெள்ளியாக மின்னும் இந்தப் பொட்டுகள், கட்டா இறந்ததும் கருஞ்சாம்பலாக மாறுவது அதிசயம்தான்.
கட்டாவின் முதுகு முன்புறம் கம்பி வேலி முள்கள் போல 7 முதல் 8 முள்கள் அமைந்திருக்கும், அதைத் தொடர்ந்து 19 முதல் 21 மென்தூவிகள் அமைந்திருக்கலாம். அதுபோல கீழ்ப்புற அடித் தூவிஅருகே  3 முள்களும், 16 முதல் 19 மென்தூவிகளும் காணப்படலாம்.
பார்களின் அருகே சிறுகூட்டமாகத் திரியும் கட்டாக்களுக்கு இதர மீன்களே உணவு. சிறுபற்களால் தூண்டில் கயிறைத்துண்டித்து இது தப்பக்கூடியது.
கட்டாவின் இறைச்சி வெண்மையானது. எனினும்  குழம்பில் இடுவதைவிட கருவாடாக மாற்றி உண்பதற்கே கட்டா ஏற்றது. இதை குழம்பில் இட்டு சாப்பிட்டால் பிளைவுட் பலகையை உண்பது போல இருக்கும் என்பது அனுபவம் மிக்கவர்களின் கருத்து.
சுட்டாலும் மணக்காது கட்டா என்பது கட்டா பற்றி தமிழில் வழங்கும் பழமொழி.
கிரேக்க பழங்கதைகளில் ஹிரா என்ற பெண்தெய்வம்தான் மயிலுக்கு புள்ளிகளை வைத்தது என்பதைப் போல,சீனப் பழங்கதைகளில் துவா பெ கோங் (Tua Peh Gong) என்ற பெண் தெய்வம்தான் கட்டா மீனின் உடலில் பொட்டுகளை வைத்ததாக நம்பப்படுகிறது. இதனால் சீனர்கள் கட்டாவை உண்ண மாட்டார்கள்.



Saturday 16 April 2016

பேத்தா மீன் (பலாச்சி) (Puffer Fish)

பேத்தா மீன்களில் ஏறத்தாழ 120 வகைகள் உள்ளன. முரடான கடினத் தோல் உடைய மீனினம் இது. சிலவகை பேத்தாக்கள் உடல் முழுக்க முள்கள் சூழ்ந்தவை.  பருத்து விரிந்த முள்ளுப் பேத்தா, பார்வைக்கு பலாப்பழம் போல இருப்பதால் பலாச்சி என்ற பெயரும் அதற்கு மிகவும் பொருத்தமானது.
பேத்தாவுக்கு செதிள்கள் கிடையாது. மிக மெதுவாக நீந்தும் மீன் இது. தேவைப்படும் போது வெடிக்கும் வேகத்திலும் இது நீந்தக்கூடியது. எல்லா திசையிலும் பேத்தாவால் எளிதாகத் திரும்ப முடியும். கூரிய கண்பார்வை கொண்ட பேத்தா, பின்பக்கமாகவும் நீந்த வல்லது.
 பெரிய மீன்கள் தன்னைத் தின்ன முயன்றால், அல்லது மிரட்டினால், பேத்தா நொடிப்பொழுதில் நீரையோ அல்லது காற்றையே உள்ளிழுத்து, பந்து போல பலமடங்கு தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளும். இதன்மூலம் பகை மீன்களிடம் இருந்து இது தப்பவும் முடியும்.
பேத்தாவின் மேல்தாடை, கீழ்த்தாடைகளில் இரண்டிரண்டு பற்கள் இருக்கும். பற்கள் மிகவும் வளர்ந்து விடாமல் தடுக்க பவளப்பாறைகள் அல்லது சிப்பிகளைக் கொரித்து, தனது பற்களை  குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளராமல் பேத்தா  அவ்வப்போது சரிசெய்து கொள்ளும். சிப்பி, சிறுமீன்கள், பவளப் பாறை, பார்ப்பாசி போன்றவை பேத்தாவின் உணவு.
கிட்டத்தட்ட எல்லா பேத்தாக்களுமே நஞ்சுள்ளவை. பேத்தாவின் உடலில் உள்ள டெட்ராடாக்ஸின் நஞ்சு, சயனைடைவிட 1200 மடங்கு சக்தி வாய்ந்தது. ஒரே ஒரு பேத்தாவில் உள்ள நஞ்சு 30 பேர்களைக் கொல்லக்கூடியது.
ஆனால், ஏமாந்த நேரத்தில் பேத்தாவை இரையாக்கிக் கொள்ளும் சுறாமீன்களை  இந்த நஞ்சு ஒன்றும் செய்வதில்லை என வியப்பானது.
பார்க்க அழகான இந்த பலூன் மீன்களில் சில, பச்சோந்தி போல நிறம் மாறவும் கூடியவை.

Friday 8 April 2016

சீலா (Barracuda) 

ஊசிப்பல் உடைய நீள்வடிவ வேட்டை மீன் இது. வெள்ளிநிற உடலும், கவடு போல பிளந்த வாலும், பெரிய கண்களும் சீலா மீனின் அடையாளம். சீலா மீனின் கீழ்த்தாடை, மேல் தாடையை விட சற்று நீண்டிருக்கும். தூவிகள் ஒவ்வொன்றும் தொடர்பற்று தனித்தனியே இருக்கும்.
சீலாவில் கட்டிச் சீலா, ஒரே சீலா, புள்ளிச்சீலா, தடியன் சீலா, கல் சீலா, நெய்ச் சீலா, நெட்டையன் சீலா, நெடுந்தலை சீலா என மொத்தம் 20 இனங்கள் உள்ளன.
குட்டியாக இருக்கும் போது கூட்டமாகத் திரியும், சீலா பெரிதானால் பொதுவாக தனியே நீந்தும். பார் அடுத்த சரிவுகளில் வழக்கமாக பகலில் திரியும் சீலாக்கள், இரவானதும் பார்நோக்கி வந்து பார் மீன்களை இரை கொள்ளும்.
சீலா பார் மீன் இல்லையென்றாலும் பொதுவாக பார்மீன்களே இதன் முதன்மை உணவு.
மின்னும் பொருளால் சீலா கவரப்படுவது வழக்கம். மினுங்கும் பொருளை நெருங்கிச் சென்று ஆராய்வது சீலாவின் தனிக்குணம். வெள்ளிநிற மீன்கள் இதன் முதன்மை இரை மீன்கள்.
கடலில் திரியும் மீன்களை மட்டுமின்றி படகில் நடமாடும் மனிதர்களையும் அவர்களது அசைவையும் கூட சீலாக்கள் கண்காணிக்கும்.
மினுக்கல் பொருள்கள் மட்டுமின்றி மஞ்சள் நிற பொருள்களும் சீலாவைக் கவரக்கூடும் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சுறாக்கள் மோப்பத்தை நம்பி இரை தேடுபவை, அவற்றுக்கு கண்பார்வை குறைவு. ஆனால் சீலா அதற்கு நேர் மாறு, பெரும்பாலும் கலங்கிய கடலிலும் கூட கண்பார்வையை நம்பியே சீலா வேட்டையாடும். குறி தவறாமல் அம்பு போல விரைந்து பாய்ந்து இரையைக் கவரும்.
இதன் வாய் நிறைய ரம்பம் போல் உள்ள கூரிய பற்கள், எதிரும் புதிருமானவை. வாயில் சிக்கும் மீன்கள் வழுக்கிச் சென்றுவிடாமல் பிடித்துக் கொள்ள, இந்த எதிர்புதிர் பற்கள் உதவுகின்றன.
சீலாக்களில் பொதுவாக பெண் மீனே ஆணை விட பெரியதாக இருக்கும். பசி என்று வந்து விட்டால் குட்டிசீலாக்களை இரை கொள்ளும் பழக்கமும் சீலாக்களுக்கு உண்டு.
இந்தியப் பெருங்கடலில் அதிகம் காணப்படும் சீலா கறுப்புநிற வால் உடையது. உடலின் பக்கங்களில் கருமை கலந்த வரிவரிப் பட்டைகள் இந்த வகை சீலாவில் காணப்படும். படத்தில் இருப்பது சீலாவின் ஒரு பிரிவான நெடுவா மீன்.
சுவைமிகுந்த கடல் மீன்களில் சீலாவும் ஒன்று .

Wednesday 6 April 2016

பன்மீன் கூட்டம்


குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தொகுத்தது 99 பூக்களின் பெயர்கள்தான். ஆனால், உலகின் முதல்மொழியான தமிழில் 1200க்கும் மேற்பட்ட மீன்களின் பெயர்கள் உள.
உலகில், மிக அதிக அளவில் மீன்பெயர்களைக் கொண்ட மொழி தமிழ் மொழியாகவே இருக்க வேண்டும்.
தற்போது மீன் பட்டியலின் தொடர்ச்சி..
1000. நாய்ப்பன்னா, 1001. ஓங்கல் சுறா (ஓங்கலை ஓங்கில் என்பவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை) 1002. வெள்ளை கோலாச் சுறா, 1003. தாழஞ்சுறா, 1004. கெடுத்தை, 1005. சுண்டு, 1006. பறவை முரல், 1007. கட்ட முரல், 1008. தூக்கல், 1009. இருங்கெழுது, 1010. வெறா (கடல் விரால்), 1011. மட்டக்கீச்சான், 1012. பளிங்கு கீச்சான், 1013. குடைக்கீச்சான், 1014. நாற்கோட்டுக் கீச்சான், 1015. மயிந்தன், 1016. கட்டி மீன், 1017. ஊசிக்கோல், 1018. கடு கொப்பரா, 1019. ஓட்டாமீன், 1020. ஓத்தொண்டை, 1021. சிலிந்தல், 1022. ஐதல், 1023. சள்ளல், 1024. செம்பாலை, 1025. ஊடகத் திரளி, 1026. நெடுந்திரளி, 1027. செம்பாரை, 1028. சுதுப்புனம் காரல், 1029. கொடுங்காரல், 1030. மஞ்சள்கீற்று நவரை, 1031. நெய்ச்சாளை, 1032. நச்சுப்பாரை, 1033. உறிப்பாரை, 1034. நீட்டுப்பாரை, 1035.
(படத்தில் இருப்பது வண்ணமிகு பார் மீன்களில் ஒன்று. இவ்வகை மீன்கள் வண்ணாத்தி என அழைக்கப்படுகின்றன)