Sunday 23 June 2019


கோலம் போடும் மீன்!

கடலடியில் கண்கவர் கோலம்!
‘அட! இது யார் பார்த்த வேலை?’
கடலடியில் மணல்தரையில் கண்கவர் கோலம் ஒன்றைப் பார்த்தபோது நீர்மூழ்கி வீரர்கள் கேட்ட கேள்வி இது.
ஜப்பான் பக்கம் அமாமி ஒசிமா தீவு அருகே 20 ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு கடலடி கோலத்தைக் கண்டு முக்குளிப்பு வீரர்கள் வியப்பில் மூழ்கிப் போனார்கள்.
ஒருவேளை விண்வெளியில் இருந்து வந்த வேற்றுலக உயிர்கள் எதுவும் இந்த மாதிரி விந்தைக் கோலங்களைப் போட்டிருக்குமோ என்ற கேள்வியும் கடல் ஆய்வாளர்களிடம் எழாமல் இல்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக மணல் தரையில் மேடு பள்ளங்கள், வரிகளுடன் ஆறரை அடி அகலத்தில் அந்த கோலம் உருவாக்கப்பட்டிருந்தது.
கடலடியில் எந்த கோலமாவு கோகிலா வந்து இப்படி கோலம் போட்டிருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளையில் இந்த மர்மம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
இந்த மாதிரி கோலங்களைப் போடுவது பேத்தா (Puffer fish) இனத்தைச் சேர்ந்த ஒருமீன் என்பது தெரிய வந்தபோது அனைவருக்கும் அப்படியொரு ஆச்சரியம். அதிலும் ஆண் பேத்தா மீன், பெண் மீனைக் கவரத்தான் இப்படி கோலம் போடுகிறது என்பது தெரிய வந்த போது இன்னும் வியப்பு.
இந்த வரிப்பள்ளங்களும், வரிமேடுகளும் உண்மையில் அந்த பேத்தா மீனின் கூடு. இப்படி ஒரு கலக்கலான கூட்டை கட்டியெழுப்ப அந்த மீனுக்கு பத்து நாள்கள் வரை ஆகும்.
வெறும் ஐந்தங்குல நீளம் உள்ள ஒரு மீன், கடலடி குருத்து மணலில் தன்னுடைய உடலையே கருவியாக்கி, இப்படி சின்னஞ்சிறிய சிகரங்களையும், பள்ளத்தாக்குகளையும் ஏற்படுத்துகிறது என்றால் அது வியப்புதானே?
கடலடி கோலக் கலைஞர்!
சரி. வீடு உருவாகி விட்டது. வீடு என்றால் அலங்காரப் பொருள்கள் வேண்டாமா? அதனால், இந்த கோலத்தின் வெளிவட்ட உச்சிகளில் சின்னஞ்சிறிய சிப்பிகள், பவழப்பாறைத் துண்டுகளை அந்த மீன் அலங்காரத்துக்காக வைக்கிறது.
இப்போது ஏதாவது ஒரு பெண் மீன் வந்து அழகான இந்தக் கூட்டைப் பார்வையிடும். அப்போது ஆண்மீன் வட்டக்கோலத்தின் உள்வட்டத்தில் இருந்தபடி மணலைக்கிளறி பெண் மீனைக் கவர முயற்சிக்கும். பெண் மீனுக்கு வீடு பிடித்து விட்டால் நடுப்பகுதியில் வந்து அது முட்டைகளையிடும்.
சரி! எதை வைத்து ஒரு கூடு சிறந்த கூடு என்று பெண் மீன் முடிவு செய்கிறது? கூட்டின் அழகிய வளைவு நெளிவுகள், அலங்காரப் பொருள்களை விட கூட்டின் அகலமே பெண் மீனை அதிகம் கவருகிறது. பெரிய அளவில் இப்படி கோலமிட்டு கூடு கட்டும் ஆண் மீன் பலமான திறமை வாய்ந்த மீனாகவே இருக்கும் என பெண் மீன் நம்புகிறது.
பெண் மீன் இடும் முட்டைகளில் இருந்து 6 நாள்களில் குஞ்சுகள் பொரித்து வெளிவரும்.
பெண் மீன் ஒருவேளை முட்டையிட்டு விட்டு தன்பாட்டில் போய்விட்டால், அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகளைப் பாதுகாப்பது இனி ஆண்மீனின் வேலை.
அதன்பின் ஆண்மீன் மீண்டும் பெண் மீனைக் கவர வேறு ஓரிடத்தில் இதுபோல கடலடி கண்கவர் கைவண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிடும்.
ஏன் அந்த மீன் பழைய கோலத்தையே புதுப்பிப்பதில்லை? இது நல்ல கேள்விதான். ஆனால் அந்தக் கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. அந்த மீனைத்தான் கேட்க வேண்டும்.

Wednesday 12 June 2019


பூவாலி (Long finned Herring)

பூவாலி…. இந்தப் பெயரை பூவாலி என்று எழுதுவதா? அல்லது பூவாளி என்று எழுதுவதா என்பதுகூடத் தெரியவில்லை. பூவாலி என்ற பெயர் பூவைப்போன்ற வாலுடைய மீன் என்பதைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.
கடலின் பெருங்கூட்ட மீனினங்களான வெங்கணா, சாளை, நெத்தலி போன்றவை Clupeidae குடும்பத்தைச் சேர்ந்தவை. அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு மீன் இனம் பூவாலி. Opisthopterus tardoore என்பது பூவாலியின் அறிவியல் பெயர்.
இதில் Opisthe என்ற கிரேக்க மொழிச்சொல், பின்புறத்தையும்,  Pteron என்ற சொல் சிறகு அல்லது தூவியையும் குறிக்கிறது. ‘பின்புறமாக நீண்டதூவி கொண்ட மீன்என்று இதனைப் பொருள்படுத்திக் கொள்ளலாம்.
20 செ.மீ. வரை நீளம் கொண்ட பூவாலி மீன்கள் அவற்றின் பெயருக்கேற்ப, 51 முதல் 63 மென்கதிர்களைக் கொண்ட பின்அடிப்புற தூவியைக் கொண்டவை. இதனால் ஆங்கிலத்தில் இந்த மீன், ‘நீளத்தூவி வெங்கணா’ (Long finned Herring) என வழங்கப்படுகிறது.
பூவாலி மீனின் வயிற்றின் முன்பகுதி நன்கு வீங்கி குவிந்திருக்கும். அதில் 29 முதல் 35 முள்தகடுகள் இருக்கலாம்.
பூவாலியின் கீழ்த்தாடை அதன் மேல்தாடையை ஓவர்டேக் செய்து முன்னேறி வானத்தைப் பார்த்தவண்ணம் மேல்நோக்கியபடி இருக்கும். கன்னத்துத் தூவி தலையின் அளவுக்கு சமமாகவோ அல்லது தலையை விட நீளமாகவோ கூட இருக்கலாம்.
பூவாலியின் முதுகுத்தூவி மிகவும் சிறியது. முதுகின் நடுப்பகுதிக்கும் அப்பால் சற்று பின்புறமாக, இருக்கிறதா அல்லது இல்லையா என்று ஐயப்பாட்டை எழுப்பும் வண்ணம் முதுகுத் தூவி அமைந்திருக்கும்.
பூவாலி மீன் தட்டையான உடலும், பெரிய கண்களும் கொண்டது. செதிள்கள் எளிதாக கழன்று வந்து விடக்கூடியவை. செவுள் திறப்பின் அருகே கருப்புநிறத் திட்டு காணப்படும்.
இந்தியப் பெருங்கடலில் அரபிக்கடலின் தென்பகுதி, ஓமான் வளைகுடா, வங்கக் கடலில் சென்னை கடற்பகுதி, அந்தமான், மியான்மர், தாய்லாந்து, பினாங்கு தீவுப் பகுதிகளில் பூவாலி காணப்படுகிறது.
கரையோர மீனான பூவாலி, மீன் முட்டைகள், சிறுமீன்கள், இறால்கள், லார்வாக்களை உண்டு வாழ்கிறது.
மலையாள மொழியில் இந்த மீன் அம்பட்டா என அழைக்கப்படுகிறது.
பூவாலி மீன், தோட்டா மீனுக்கு மிகவும் நெருங்கிய உறவுக்கார மீன். தோட்டா மீன்களில் கருவாலன் தோட்டா, கருவத்தோட்டா, தாடித் தோட்டா, மீராக்கைத் தோட்டா, சென்னித் தோட்டா (சென்னித்தோட்டா), குணாத் தோட்டா என ஆறு வகைகள் உள்ளன. மென்மையான முதுகு கொண்ட குணாத் தோட்டா ஆங்கிலத்தில் Russel’s smooth back herring என அழைக்கப்படுகிறது.
தோட்டா மீன்கள் மனிதர்களுக்கு சிறிய அளவில் உணவாகவும், பெரிய அளவில் உரமாகவும் பயன்படுகின்றன.
தோட்டா மீன் பற்றி ஒரு சுவையான தகவல். கடற்கரை மணலில் ஆயிரம் வகை கருவாடுகள் காய வைக்கப்பட்டிருந்தாலும், காகம் தோட்டா கருவாட்டை குறிவைத்து தூக்கிச் செல்லும். முள்நிறைந்த தோட்டா கருவாட்டில் சுவையான  வயிற்றுப்பகுதியை  மட்டும் தின்றுவிட்டு மீதத்தை போட்டுவிடும்.