Saturday 25 June 2016

எக்காள மீன் (Cornet Fish)

மிக நீண்ட குழாய் போன்ற தோற்றமுடைய பல வண்ணம் கொண்ட ஒரு பார் மீன் இது. குழாய் போன்ற வாயும், வாலடியில் தனித்து தெரியும் சாட்டை போன்ற அமைப்பும், நீள்வட்ட கண்களும் எக்காளத்தின் தனித்துவமான அடையாளம். முரல்களுக்கு இருப்பது போலவே எக்காளத்தின் வால் அருகே ஒரே மாதிரியான ஒரே அளவிலான முதுகு மற்றும் அடித் தூவிகள் அமைந்திருக்கும். இந்த தூவிகள் ஊடுருவிப் பார்க்க கூடிய அளவுக்கு

கண்ணாடி போன்றவை. மீனின் வாலும் கிட்டத்தட்ட தூவி போன்ற அமைப்புடையது. வாலுக்கு அப்பால், உடலின் தொடர்ச்சி போல நீண்டு நிற்கும் சாட்டை போன்ற அமைப்பு உண்டு. இந்த சாட்டையால் இரை மீன்களை இது உணர்வதாக கருதப்படுகிறது. இதன் சாட்டை, உணர்வு உறுப்புப் போல பயன்படுவதாக நம்பப்படுகிறது..
பார் அடுத்த மணல்வெளி, கடல்தாழை, பவளப்பாறைப் பகுதிகளில் வாழும் எக்காளம், தனியாகவும், சிறு கூட்டமாகவும் திரியும். இரை மீனைப் பிடிக்கப்போகும்போதும், எதிரிமீன் துணுக்குற செய்யும் போதும் இது வேகமாக நிறம் மாறக்கூடியது. இரவில் இந்த மீனின் உடலில் வரிகள் தென்படலாம்..
குழாய் போன்ற வாயால் எக்காளம், சிறுமீன்களை உறிஞ்சக் கூடியது. சேவல்கோழி மீன் இதன் முக்கிய இரை. செதிள்கள் அற்ற எக்காளம் மீன் கடல்குதிரைகளின் உறவுக்கார மீன்.
எக்காளம் ஏறத்தாழ 6 அடி நீளம் கூட வளரக்கூடியது. மிகநீண்ட மெல்லிய உடல் இருப்பதால், என்னதான் ஆறடி நீளம்வரை இருந்தாலும் இந்த மீனின் எடை பிறந்த குழந்தையின் எடையைவிட குறைவுதான்.
இந்த மீன் நீந்தினாலும்கூட நீந்துவது போல தெரியாமல், நீரோட்டத்தில் வழிந்து செல்வது போலவே தோன்றும். மனிதர்களுக்கு ஆபத்தற்ற மீன் எக்காளம். முக்குளிக்கும் மனிதர்களை இந்த மீன் கண்டுகொள்ளாது.
எக்காளத்தில் சிவப்புநிற எக்காளம் இந்திய பசிபிக் பெருங்கடல்களுக்கு உரித்தான மீன்.
டிரம்பட் (Trumpet) மீன், ஏறத்தாழ எக்காளம் போலவே இருந்தாலும் இந்த இரு வகை மீன்களுக்கும் இடையில் சில வித்தியாசங்கள் உள்ளன.
டிரம்பட் மீன்களுக்கு எக்காளத்துக்கு இருப்பதுபோல வால்நுனியில் சாட்டை கிடையாது. டிரம்பட் மீன்களின் முதுகில் 12 வரை முட்கள் காணப்படும். டிரம்பட் மீன் சிறியது. மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்த மீன் இரண்டுஅடி நீளம் வரை வளரலாம்.
டிரம்பட் மீன்கள் பழுப்பு, வெளிர் பழுப்பு, மஞ்சள் நிறமாகக் காணப்படலாம்.
எக்காளத்தைப் போல இந்த வகை மீனால் நிறம்மாற முடியாது. ஆனால் மிக அழகாக உருமறைப்பு செய்ய முடியும்.

எக்காளம் போலவே டிரம்பட் மீன்களும் நீரோட்டத்தில் வழிந்து செல்வதைப்போலத் தோன்றும். இவற்றின் தூவிகளும் ஒளிஊடுருவக் கூடியவை. டிரம்பட் மீன் மிகவேகமாக நீந்தும்போது அதன் அசைவைக் கண்டுகொள்வது கடினம்.
டிரம்பட் மீன் சிலவேளைகளில் அதன் தாடையை பாரில் ஊன்றி ஓய்வெடுத்துக் கொள்ளும். இந்தவகை மீன் வேட்டையாடும் விதமும் தனித்துவமானது. பெரிய கிளிஞ்சான் மீனுக்குப்பின் மறைந்து கொண்டு தன் நீள உடல்வெளியே தெரியாமல் டிரம்பட் மீன் நகர்ந்து வரும். கிளிஞ்சான் ஆபத்தற்ற மீன் என்பதால் அதை இரை மீன் கவனத்தில் கொள்ளாது. இந்தவேளையில் கிளிஞ்சானுக்குப்பின்னால் அதை ஒட்டி உருமறைப்பு செய்தபடி வரும் டிரம்பட்மீன் உரியவேளையில் மறைவில் இருந்து வெளிவந்து இரையை கொள்ளும்.

Thursday 23 June 2016

முரல் (Gar fish)

மெலிதான நீலம் தோய்ந்த பச்சை வண்ண மீன் இது. உடல் வண்ணம் மட்டுமின்றி முரல் மீனின் எலும்புகளும் கூட பச்சை வண்ணம் தோய்ந்து காணப்படும், பகலில் பொதுவாக கடல் அடியில் பாசிகளுக்கு அடியில் இருந்து விட்டு, இரவில் கடல் மேற்பரப்பில் நீந்துவது இந்த வகை மீனின் பொதுவான பழக்கம். ஆரல் போன்ற சிறுமீன்கள் இதன் இரை.

முரலின் முதுகுத்தூவியும், வால் தூவியும் ஒரே மாதிரியானவை. இவ்விரு தூவிகளும் உடலின் பின்பகுதியில் வாலையொட்டி எதிரும்புதிருமாகக் காணப்படும். முரல் மீனின் வேகமாக உடல் அசைவுகளுக்கு இதுபோன்ற பின்தூவி அமைப்பு பெரிதும் பயன்படுகிறது.
வாலை தண்ணீர் மேற்பரப்பில் அசைத்தவண்ணம் நீர்மேல் வழுக்கியபடி விரைவது முரல் மீன்களின் இயல்பு. இரவில் வெளிச்சத்தை நோக்கி பாயும் பழக்கமும் முரலுக்கு உண்டு.
இதன் பற்கள் நிறைந்த நீண்ட அலகு காயத்தையும், சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது. உடலில் குத்திய முரலின் ஊசி போன்ற அலகு, உடைந்து துண்டுதுண்டாகவும் வாய்ப்புள்ளது.
முழுநிலா காலம், மற்றும் காற்று குறைந்த நிலாவெளிச்சக் காலங்களில் முரல்கள் கடற்பரப்பின் மேல் அதிக அளவில் மேயும். 
முரல்களில் வடிக்கிலி முரல், வாழியபோத முரல், வாளையா முரல் (வாளா முரல்), வரயி முரல், கருமுரல், பிள்ளை முரல், கோழியாமுரல், பாம்பு முரல், செல்ல முரல், இரங்க முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல், நெடு முரல், பாசி முரல், படுக்கா முரல், பரவை முரல், கட்ட முரல், பரவை முரல், கூறைமேதல் முரல், அலமுரல், வாடையா முரல் என பலவகைகள்..
இதில், கோழியா முரல், வடிக்கிலி முரல் போன்றவை Half beak என்ற அரை அலகு வகையைச் சேர்ந்தவை. இந்த வகை மீன்களில் கீழ்த்தாடை மட்டும் கூர்மையாக நீட்டிக் கொண்டு நிற்கும்.
முரல்களில் ஒருவகையான கலிங்கன் மீன்களுக்கு ஒரே அளவிலான கூரிய மூக்கு உண்டு. இந்த கூர் மூக்கு அலகுகளில் முதலைக்கு இருப்பது போல் கூரிய பற்களும் இருக்கும். உருளைக் கலிங்கன், கட்டைக் கலிங்கன் போன்ற மீன்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகை மீனுக்கும் ஒவ்வொரு வகை பெயர் புழங்குகிறது.
அதன்படி கீழ்த்தாடை நீண்ட முரல், பிள்ளை முரல், கட்டை முரல் என்றும், ஒரே அளவிலான ஊசிபோன்ற மூக்குடைய மீன் நெடுமுரல், வாளா முரல்,  என்றும் கருதப்படுவதுண்டு.
இதில் கலிங்கன் அல்லது பிள்ளை முரலுக்கு ஆள் பாய்ஞ்சான் முரல் என்ற பெயரும் உண்டு. கலிங்கனில் சிறியது சாத்தான் மீன். அனைத்து முரல்களிலும் மிகச்சிறியது பாச்சுவலை முரல். விரல் அளவே உள்ள சிறுமீன் இது.
அலகு நீண்ட முரல்கள், சிறிய மீன்களாக இருக்கும்போது நீண்ட அலகின்றி காணப்படும். வளர வளரத்தான் இவற்றில் அலகு தோன்றும்.
முரல்கள் பச்சை நிறமாக, பச்சை நிற எலும்புடன் காணப்படுவதால் பலர் அதை உண்ணத் தயங்குவார்கள். ஆனால் மனிதர்கள் உண்பதற்கேற்ற மிகச்சிறந்த மீன் முரல்.


Wednesday 15 June 2016

வேளா (வாள்சுறா) (Saw Fish)


சுறா போன்ற தோற்றத்தில், சுறாவின் உடல்வாகுடன் இருந்தாலும் வேளா, திருக்கை இன மீன்களுக்கு மிக நெருக்கமான மீன். திருக்கையைப் போல வேளாவும் கடலடியில் வாழும் மீன்.
ரம்பம் போன்ற, இருபக்கமும் கூரிய முள்கள் கொண்ட கொம்பு, வேளா மீனின் முக்கிய அடையாளம்.
இந்த முள்நிறைந்த கொம்பினால் மீன்கூட்டங்களை வேளா திரைய்க்கும். காயமடைந்து நீந்த முடியாமல் தத்தளிக்கும் மீன்களைப் பிடித்து உணவாக்கும். சிலவேளைகளில் கூரிய கொம்பு முள்களில் குத்துண்டு சிக்கிக் கொள்ளும் மீன்களை கடல்பாறைகளில் தேய்த்து அவற்றை நீக்கி இது உணவாக்கிக் கொள்ளும்.
வேளாவின் கொம்பு, கடலடி சகதியைக் கிளறி அங்கு மறைந்திருக்கும் கடல் உயிரினங்களை வேட்டையாடவும் உதவுகிறது.
பிரிஸ்டிடே (Pristidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த வேளா மீன், 6 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. வேளாவின் நிறம் பழுப்பு சாம்பல். இதன் இருபெரிய முதுகுத் தூவிகள் தலையோடு இணைந்திருக்கும். தடித்த வாலை, உடலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
உடலின் மேற்புறம் கண்களும், அடிப்புறம் வாயும் அதன் கீழே இரு வேறு பகுதிளாக சுவாசிக்க உதவும் செவுள் துளைகளும் வேளாவுக்கு அமைந்திருக்கும்.
திறந்த வெப்பக் கடல் மீனாக இருந்தாலும் வேளாவால் நல்லதண்ணீரிலும் வாழ முடியும். ஆப்பிரிக்க ஆறுகள் சிலவற்றிலும், நிகரகுவா நாட்டு ஏரியிலும் கூட வேளா மீன் காணப்படுகிறது.
வேளா கோபக்கார முரட்டு மீனாக இருந்தாலும் மனிதர்களை இது தாக்கியதாக பெரியஅளவில் பதிவுகள் எதுவுமில்லை. வலையில் சிக்கும் வேளா மீனைப் பிடிக்க வலைஞர்கள் அதன் கொம்பு முனையை மெதுவாகத் தொட்டு தடவி விடுவார்கள். இதனால் மெய்மறந்த நிலைக்குச் செல்லும் வேளாவை கயிறுகளால் பிணைத்து கைக்கொள்வார்கள். 
வேளாவின் முட்டைகள் உண்ணத்தகுந்தவை. யானையின் விட்டை அளவுக்கு பெரிய பொன்மஞ்சள் நிற வேளா முட்டைகள் கூழினால் நிறைந்தவை. இவற்றை மாவில் கரைத்து ஆப்பம் சுடும் பழக்கம் கடற்கரை ஊர்களில் உண்டு. வேளா முட்டை ஆப்பம், ஊர்முழுவதையும் மணமணக்க வைக்கும் ஆற்றல் உடையது.

Tuesday 7 June 2016

கவர் எழுப்பமும், கவர் அடக்கமும்

கடல் என்ற நீலநிற மேடையில் நாள்தோறும் அரங்கேறும் ஒரு நாடகம்தான் கவர் எழுப்பமும், கவர் அடக்கமும்.
அவையடக்கம் என்றால் தெரியும். கவர் அடக்கம் என்றால் என்ன என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
கடல்நீரில் வெறும் கண்களுக்குத் தெரியாத Diatom என்ற ஒருசெல் உயிரி உள்ளது. அகராதியில் Diatom என்றால் என்ன என்று தேடினால் இருகூற்று நுண்பாசி என்று வரும். சிறிய வட்டவடிவ பெட்டி மாதிரியான தோற்றத்தில் Diatom இருக்கும். (பெட்டி எப்படி வட்டவடிவில் இருக்கும் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏறத்தாழ வட்ட வடிவம்). இந்த நுண்பாசி, இதனுடன் சேர்ந்து Flagella என்ற இன்னொரு வகை நுண்பாசி ஆகியவை கடலில் மிதக்கும் தாவர நுண்உயிர்கள். கடலின் மிகப்பெரிய உயிர்அடிப்படை, உயிர் ஆதாரம் இந்த நுண்பாசிகள்தான். நிலத்துக்கு புல் எப்படியோ அப்படியே கடலுக்கு இந்த நுண்பாசி.
வெறும் கண்களால் காண முடியாத இந்த நுண்பாசிகளே கடலின் நிறமாற்றங்களுக்கு காரணம். உலகம் முழுவதும் இந்த நுண்பாசிப் படலம் எங்கே அதிகம் இருக்கிறதோ அங்கே மீன்வளம் அதிகம் இருக்கும். இவை பூத்துக்குலுங்கினால் மீன்வளம் பெருகும்.
Diatom என்ற நுண்பாசி, அது சார்ந்த தாவரங்களுக்கு பைட்டோபிளாங்டன் என்ற பெயரும் உண்டு. பிளாங்டன் (Plankton) என்றால் அலைந்துதிரிபவை என்று பொருள் கொள்ளலாம்.
Diatom அதனுடன் Flagella என்ற இன்னொரு வகை நுண்பாசி போன்றவை மளமளவென பிளந்து கோடிகோடியாகப் பெருகக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 300 முதல் 400 பில்லியன் Diatom,  நுண்பாசி உருவாகக் கூடும். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)
அலை, காற்று, நீரோட்டத்தின்படி அங்குமிங்கும் மிதந்தலையும் இந்த நுண்பாசிகள், உணவு உற்பத்திக்காக பச்சையம் தயாரிக்க சூரியஒளி தேவை. அதனால், இவை கடல் மேற்பரப்பில் மிதக்கின்றன. முடிஇறகு, ஒரு துளி எண்ணெய் இந்த ஏதோ ஒன்றைப் பயன்படுத்தி இவை மிதக்கின்றன.
பைட்டோபிளாங்டன் என்ற வகைப்பாட்டில் Diatom, Flagella மட்டுமின்றி பல ஆயிரம்வகை நுண்பாசிகள் அடக்கம். அதில் குட்டியான Dino Flagella என்ற உயிரி, சாட்டை போன்ற ஓர் உறுப்பின் உதவியுடன் நீந்தக்கூடச் செய்யும். நாள் ஒன்றுக்கு இது 65 அடி தொலைவு சென்றால் அதிசயம். ஆனாலும் அது ஒரு நுண்பாசிதான். இதைச் சுற்றி ஒளிஊடுருவக் கூடிய விதத்தில் கண்ணாடி போன்ற கூடு உண்டு. Dino Flagella நீந்தாதபோது நீரில் மூழ்கிவிடும்.
அதுபோல Diatomம்களுக்கும் கண்ணாடி போன்ற கூடு உண்டு. இதில் நாம் ஏற்கெனவே பார்த்த Flagellaவுக்கு செல்லுலஸ் போன்ற அடர்த்தியான நிறம் உள்ளது. கடலின் நிறத்தை மாற்றுவதில் இந்த நுண்பாசிக்கு நிறைய பங்கு இருக்கிறது. தவிர, இதற்கு ஒளிஉமிழக்கூடிய திறமையும் உண்டு. ஆயிரம் மின்மினிப்பூச்சிகள் போல இது ஒளிவிடும். வசந்தகாலத்தில் இது அதிகம் ஒளிவீசும்.
தரையில் வளரும் தாவரத்துக்கு எப்படி சூரிய ஒளியும், உரமும் தேவையோ, அதுபோல மிதந்தலையும் நுண்பாசிகளுக்கு சூரிய ஒளியுடன், இதர ஊட்டச் சத்துகளும் தேவை. இந்த ஊட்டச்சத்துகள் இறந்த மீன்கள் மூலம் கடலின் அடியில்  கிடைக்கக்கூடும்.
எனவே, சூரிய ஒளிக்காக கடலின் மேற்பரப்புக்கும், ஊட்டச்சத்துக்காக கடலின் கீழ்ப்பரப்புக்கும் நாள்தோறும் சென்றுவர வேண்டிய தேவை இந்த நுண்பாசிகளுக்கு உண்டு.

தமிழில் கவுர் என்று அழைக்கப்படும் இந்த நுண்பாசிகள், கடலின் மேலே ஒளிவீசியபடி வந்து சேர்ந்தால் அது கவர் எழுப்பம். கடல் அடியில் மீண்டும் அடங்கினால் அது கவர் அடக்கம்.


Sunday 5 June 2016

கீரிமீன் சாளை

நைல்நதியின் நன்கொடை எகிப்து நாடு. அதுபோல குளிர்காலத்தில் கடல் தரும் கொடை சாளை மீன். உலகில் பிடிக்கப்படும் மொத்த மீன்களில் நான்கில் ஒரு பாகம் சாளையும், அதன் உறவான நெத்தலியும்தான்.
சார்டின் (Sardin) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சாளைக்கு தமிழில் மத்தி, கவலை என்ற பெயர்களும் வழங்குகின்றன. கடலும் கிழவனும் நாவலில் சாளை சுநீர மீன் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
சாளையில் சற்று பருமனான ஒருவகை மீன் கீரிமீன்சாளை. சற்றுநீலம் தோய்ந்த உடலும், கூரிய மூக்கும், சிறுபுள்ளிகளும் இதன் அடையாளம்.
வயிறு உருண்டையானது. மென்மையானது. 
கீரிமீன்சாளையின் முதுகில் 13 முதல் 21 மென்மயிர்த்தூவிகளும், அடிப்புறம் வாலருகே 12 முதல் 23 மென்மயிர்த் தூவிகளும் காணப்படலாம்.
முள்ளுவாளையப் போலவே சதையில் முட்கள் கொண்டமீன் இது. இதன் செதிகள்கள் எளிதாக உதிர்ந்து விடும்.
ஏனைய சாளை இனங்களைப்போல கீரிமீன்சாளையும் திறந்தகடல் மீன்தான் என்றாலும் பார்களைச் சுற்றி இவை காணப்படலாம்.
சூரைமீன் பிடிக்க தூண்டில் இரையாகப் பெரிதும் பயன்படும் மீன் கீரிமீன் சாளை. Amblygaster clopeoides என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் இந்த மீன் இனத்தின் முக்கிய உணவு கடலில் மிதக்கும் கவுர்கள்தான்.