கொடுவா கண்கள்
சுட்டும் விழிச்சுடர்... |
கொடுவா (Bass) மீனின் கண்கள் இருட்டில் பூனையின் கண்களைப் போல
ஒளிவீசும் என்பது ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். மீன்களில் சற்று
வியப்பான கண்களைக் கொண்ட மீன் கொடுவா.
கொடுவா மீனின் முதன்மைத் திறனே அதன் கண்பார்வைதான். கடலில்
கண்முன் உலவும் இரை, தூண்டில், கயறு இவற்றுடன் கடல்மட்டத்துக்கு மேலே படகில்
இருக்கும் ஒரு மீனவரையும் கூட கொடுவா மீனால் பார்க்க முடியும். இந்த விடயத்தில்
சீலா மீனைப்போன்ற பார்வைத் திறன் கொண்டது கொடுவா.
கொடுவா மீனுக்கு கண்ணிமைகள் இல்லை. குமிழ் வடி நீள்சதுர கண்கள்
சற்றுமுன்னோக்கி துருத்தியபடி இருப்பதால் கொடுவா மீனால் 180 பாகையில் பார்க்க
முடியும். கண் தசைகளை அசைத்து பார்வையைக் குவியப்படுத்தவும் கொடுவாவால் முடியும்.
இந்த திறமை காரணமாக நாம் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கக்
கூடிய ஓர் உயிரியை கொடுவா மீனால் அதன் வெறும்கண்களால் பார்க்க முடியும். அது
மட்டுமல்ல, 4 அங்குல பொருள் ஒன்றை 50 முழ தொலைவில் வைத்தே கொடுவா மீனால் பார்த்து
விட முடியும்.
மிக நல்ல பார்வைத்திறன் இருந்தாலும்கூட கொடுவா மீன் ஒளியில்
இருந்து சற்று மறைந்து வாழவே விரும்பும். ஒளி இதன் கண்களைப் பாதிக்காது என்றாலும்கூட
கொடுவா மீன் மறைவுகளைத் தேடும். கடலில் போதுமான அளவு உயிர்க்காற்று உள்ள நல்ல
தட்பவெப்ப நிலை உள்ள இடத்தை தேடி குடியிருக்கும்.
மின்னிடும் கண்கள்... |
கொடுவா மீனால் 180 பாகையில் பார்க்க முடிந்தாலும் கூட பின்னால்
வரும் ஆபத்தையோ, தனக்கு நேர்கீழே உள்ள பொருளையோ கொடுவாவால் பார்க்க முடியாது.
பின்னால் இருந்து ஆபத்து வருவதுபோல உணர்ந்தால் கொடுவா மறைவிடம் தேடி ஒளிந்து
கொள்ளும்.
கடலில் கொடுவா மீன் சரியாக இதுவரை வகைப்படுத்தப்படவில்லை. கடலில்
பலவகை மீன்களையும் கொடுவா என அழைப்பார்கள். சிலர் களவா (Grouper) மீனையும் கொடுவா
என்பர். முப்பரிணாம பார்வைத்திறன் கொண்டிருந்தாலும் கொடுவா மீன் அசையாமல்
இருக்கும்போது 5 முதல் 12 அங்குல தொலைவுக்கு அதனால் பார்வையைக் குவியப்படுத்த
முடியாது.
கொடுவாவின் கண்கள் மட்டுமல்ல, பொதுவாக மீனின் கண்கள் அனைத்துமே
சுவை மிகுந்தவை. சத்து நிறைந்தவை.
No comments :
Post a Comment