கூரல் கத்தாளை
விலை உயர்ந்த மீன்! |
மராட்டிய மாநிலத்தின் பாலகார்
கடற்கரைப் பகுதி. அந்தப் பகுதியைச் சேர்ந்த மகேஷ் மெகர், பாரத் என்ற அண்ணனும், தம்பியும்
அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். வழக்கம் போல வாவல் மீன்களைப் பிடித்த அவர்கள்
கூடவே கூரல் கத்தாளை (Black Spotted Croaker) எனப்படும் கூரல் மீன் ஒன்றையும் பிடித்தனர்.
அதன் எடை 30 கிலோ. அவர்கள் மொழியில் அந்த மீனின் பெயர் கோல் (Ghol)
மீன்பிடித்து விட்டு அவர்கள்
கரை திரும்பும்முன் அவர்கள் கூரல் மீனைப் பிடித்த தகவல் காற்றோடு காற்றாக கரைப்பகுதிக்கு
வந்து விட்டது. அவ்வளவுதான் அவர்கள் கரை திரும்பும் முன் அவர்களை எதிர்பார்த்து மீன்
வணிகர்களின் கூட்டம் கூடிநின்றது. அவர்கள் வந்து இறங்கியதும் பத்தே மணித்துளிகளில்
பரபரப்பாக ஏலம் முடிந்தது. அந்த 30 கிலோ கூரல் மீனுக்கு கிடைத்த தொகை ஐந்தரை லட்சம்
ரூபாய். பாலகார் பகுதியில் மீன் ஒன்று இவ்வளவு விலைக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை.
கூரல் கத்தாளை (Black
Spotted Croaker) எனப்படும் கூரல் மீனின் அறிவியல் பெயர் Protonibea diacanthus. இந்திய-பசிபிக்
கடல் பகுதிக்கே உரித்தான விலையுயர்ந்த மீன் இது.
கத்தாளை இனத்தைச் சேர்ந்த கூரல்
மீன் சிலவேளைகளில் கூரல் கத்தாளை எனவும் அழைக்கப்படும். கத்தாளை, பன்னா மீன்கள் கடலின்
அடியாழத்தில் வாழ்வதால் அவற்றுக்குத் ‘தாழ்ந்த மீன்கள்’ என பேருண்டு. கூரல் மீனும்
கத்தாளை இனத்துக்குரிய பழக்கத்தின் படி கடலடியில் சகதி மண்டிய இடங்களிலும் பாறைமிகுந்த
பவழப்பார்கள் நடுவிலும் 100 மீட்டர் ஆழத்தில் இது காணப்படும்.
கூரல் மீனின் உடலில் உள்ள ஓர்
உறுப்புக்கு ‘கடல் தங்கம்’ என்றொரு பெயர் உண்டு. அது கூரல் மீனின் பள்ளை (Swim
Bladder). மிக விலை உயர்ந்த பொருள் இது. இந்த பள்ளை என்ற காற்றுப்பை உறுப்பு காரணமாக
கூரல் மீன் கடலின் மிக விலை உயர்ந்த மீன்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. விலைமிகுந்த
பொருள்களுக்குப் பல பெயர்கள் இருக்கும் இல்லையா? அதுபோல இந்த பள்ளைக்கும், பன்னா, நெட்டி
(மெட்டி) என்ற பெயர்கள் உள்ளன. நீப்பு என்ற பெயரும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
உறுதி செய்ய வேண்டும். இந்த பள்ளை என்ற காற்றுப்பையின் உதவியினால்தான் கூரல் உள்பட
கத்தாளை மீன்களால் கடலின் அடியாழத்தில் வாழ முடிகிறது.
கூரல்களில் ஆண்மீனின் பள்ளை
அடர்த்தியாகவும், பெண்மீனின் பள்ளை அடர்த்தி குறைந்தும் இருக்கும். இதனால் ஆண்மீனின்
விலையே அதிகம். இந்த பள்ளை மட்டும் அதன் அளவைப் பொறுத்து 5 முதல் 6 லட்சத்துக்கு விலைபோகும்.
கூரல் மீனின் தலையில் உள்ள ஒருவகை கல்லுக்கும் விலை உண்டு. இதுபோக கூரல் மீனின் சதை
மிகச் சுவையானது. அதனால் இந்த மீனின் இறைச்சி ஒரு கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விலை
போகும். போதாக்குறைக்கு கூரல் மீனின் தோலும் கூட அதிக விலை போகக் கூடியது. ஆக மொத்தத்தில்
மொத்த மீனும் ஏதோ ஒருவகையில் மதிப்பு உடையது. அடிமுதல் முடி வரை விலை போகக் கூடியது.
பிடிபட்ட மீன் |
சரி! கூரல் மீனின் பள்ளைக்கு
ஏன் இப்படியொரு விலை? இந்த மீனின் பள்ளை மருத்துவக் குணங்கள் நிறைந்தது. குறிப்பாக
ஆண்மைக் குறைவுக்கு இது அருமருந்தாக உதவும் என நம்பப்படுகிறது. இது போதாதா? கூரல் மீனின்
பள்ளை பிறகு ஏன் லட்சக்கணக்கில் விலை போகாது?
கூரல் மீனின் சதையில் அயோடின்,
ஒமேகா-3, இரும்பு, டாரைன், மெக்னீசியம், ஃபுளோரைட், செலினியம், DHA,
EPA போன்ற பல பொருட்கள் உள்ளன. கூரல் மீனில் அடங்கியுள்ள
வைட்டமின்கள், புரொட்டீன்கள், தாதுச்சத்துகள் கண் பார்வையைக் கட்டிக்காக்கக் .கூடியவை.
கூரல் மீனின் தோலில் உள்ள வைட்டமின் சி நமது தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் காத்து
தோலைப் பளபளப்பாக்கக் கூடியது. தசைகளுக்கு
வலுவூட்டக் கூடியது.
சரி! கூரல் மீன் கடலில் அதிகம் அகப்படுமா? க்கும். ‘ இனிய
நீருள்ள கிணறு எப்போதும் காலியாகவே இருக்கும்’ என்ற எகிப்து நாட்டு பழமொழிக்கேற்ப
இந்த கூரல் மீன் அதிகமாக அகப்படாது. தென் கடலோர மொழியில் சொல்வதானால் மிக
அருந்தலான அரியவகை மீன் இனம் இது.
கூரல் மீன் பாரைபோல கட்டுமுட்டான உடல் கொண்டது. இதன் செதிள்
சிவப்பு நிறமானது. இதன் முதுகுத்தூவி இருபிரிவுகளாக இருக்கும். கூரல் மீன் 2
ஆண்டுகளில் இரண்டடி நீளம் வளரக்கூடியது. 4 ஆண்டுகளில் மூன்றடி நீளம் வரை வளர்ந்து
இது பருவம் அடையும்.
கடலில் சிறுமீன்களையும் மெல்லுடலிகளையும் இது இரை கொள்ளும். விலைஉயர்ந்த
மீன் என்பதுடன் கூரல் மீன் மிகச் சுவையான மீனும் கூட.
No comments :
Post a Comment