சீலா (Barracuda)
சீலா |
பெருங்கடலின் பெரிய வேட்டையாடி மீன்களில் ஒன்று சீலா
(Barracuda). சீலா என்பது குறிப்பிட்ட ஒரு மீனைக் குறிக்காது. சீலா என்பது
உண்மையில் Sphyraena என்ற இனத்தைச் சேர்ந்த பலவகை மீன்களைக் கூட்டாகக் குறிக்கும்
பெயர்.
சீலா மீன், கடலுக்கடியில் பாய் ந்து சென்று இலக்கைத் தாக்கும்
டார்பிடோ (Torpedo) ஆயு தத்தைப் போன்ற உடலமைப்பைக் கொண்டது. கடல்நீரை
வெட்டிக்கிழித்துக் கொண்டு முன்னேற சீலாவின் இந்த டார்பிடோ உடல்வாகு மிகவும்
பயன்படுகிறது.
சீலாவின் உடல், இருமுனைகளிலும் சற்று ஒடுங்கி, நடுப்பகுதி சற்று
தடிமனாகவும் அமைந்திருக்கும். தலை சற்று நசுங்கியதைப்போல தோற்றம் தந்து முன்னோக்கி
நீண்டிருக்கும். வாயின் கீழ்முனை மேல்முனையைவிட சற்று பயமுறுத்தும்படி நீண்டிருக்கும்.
சீலா மணிக்கு 35 மைல் வேகத்தில் நீந்தக்கூடியது. வேகத்தில் மாகோ
(Mako) சுறாவுடன் சீலா போட்டிபோடக் கூடியது. மிகநீண்ட தொலைவுக்கு வேகம் குறையாமல்
சீலாவால் நீந்த முடியும்.
கடலில் மிகமெதுவாக நீந்தி இரைதேடும் சீலா, இரையைக் கண்டதும்
திடீர் வேகம் எடுக்கும். சீலாவுக்கு மிகக் கூரிய கண்பார்வை உண்டு. கண்பார்வையை நம்பியே
சீலா கடலில் வேட்டையாடுகிறது.
கூரிய பார்வை |
பெரிய மீன்களை விட வெள்ளிநிற சிறிய மீன்களே அதிக அளவில் ஒளியை
எதிரொளிப்பு (பிரதிபலிப்பு) செய்து சீலாவின் கண்களில் எளிதாகப் படும். இரையை
நோக்கி பாயும்போது வாயைத் திறந்து கொண்டு பற்கள் பளிச்சிட சீலா பாயும்.
சீலாவின் தாடையில் ஈரடுக்குப் பற்கள் உள்ளன. வெளிவரிசையில் உள்ள
பற்கள் சிறிய ஆனால் கூர்மையான பற்கள். இரையைத் துண்டுதுண்டாகக் கிழிக்க இந்தப் பற்கள்
உதவு கின்றன. உள்வரிசைப் பற்கள் நீளமானவை. இரை தப்பிச் செல்லாமல் பிடித்துக் கொள்ள
இந்தப் பற்கள் உதவி புரிகின்றன.
சிறிய சீலாக்கள் பொதுவாக இரையை அப்படியே விழுங்கிவிடும். பெரிய
சீலாக்கள்தான் இரையைக் கடித்து உண்ணும். சீலாவின் வாய் நாம் நினைப்பதை விட
பெரியதாக விரியக் கூடியது. ஒரு களவா மீனைக் கூட சீலாவால் விழுங்கிவிட முடியும்.
சீலாக்கள் பசிபிக், அட்லாண்டி, இந்தியப் பெருங்கடல், செங்கடல்,
கரிபியன் கடல்பகுதிகளில் காணப்படுகின்றன. பெரிய இன சீலா 14 ஆண்டுகள் வரை
உயிர்வாழக்கூடியது.
சீலா, மின்னுகிற பொருளால் கவரப்படும் என்பதை முன்பே பார்த்தோம்.
கடலில் முக்குளிப்பவர்கள் உலோகப் பொருள்கள் எதையும் வைத்திருந்தால் அல்லது
அணிந்திருந்தால் சீலா அதனால் கவரப்படும். ஒரு மாதிரிக்காக அதுபோன்ற பொருளை சீலா
கடித்துப் பார்ப்பதுண்டு. கடித்த பொருள் உணவாகப் பயன்படாது என்று தெரிந்தால் ஒரு
கடியுடன் சீலா நிறுத்திக் கொள்ளும்.
மின்னுகிற பற்கள்.. |
சீலாக்கள் வேட்டையாடும் கொல்லுண்ணிகள் என்றா லும், கடலில் சிந்திச்சிதறும்
இரைகளைத் தின்னும் பழக்கமும் சில இன சீலாக்களுக்கு உண்டு. முக்குளிக்கும்
மனிதர்களைக் கண்டால், அவர்களை பெரியதொரு மீனாகக் கருதி, அவர்களிடம் இருந்து ‘சிந்தும்’
இரையைத் தின்ன சீலா முக்குளிப் பாளர்களைப் பின்தொடர்வதுண்டு.
சீலா அரிதாக மனிதர்களைத் தாக்கும். கடலுக்குள் இறங்கி நின்று குத்தீட்டியால்
குத்தி மீன் பிடிப்பவர்கள் சிலரை சீலா தாக்கியதுண்டு. அப்போது சீலா குறிவைத்து
கடிக்க முயன்றது மனிதர்களை இல்லை. அவர்கள் பிடித்து மடியில் இறுக்கி வைத்திருந்த
மீன்களை!
(சீலா பற்றிய பதிவுகள்
நமது வலைப்பூவில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 8, 2016, ஏப்ரல் 10. 2019)
No comments :
Post a Comment