Wednesday, 18 December 2019


பிலால் (Indian lemon Shark) (Negaprion acutidens)

பிலால் சுறா
தமிழகத்தின் சில கடலோரப் பகுதிகளில் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட சுறாக் களுக்கு பிலால் என்றொரு சிறப்புப் பெயர் உண்டு.
ஆனால், தமிழில் பிலால் என்ற பெயரில் தனியாக ஒரு சுறா இனமும் உள்ளது. அதுதான் எலுமிச்சைச் சுறா என அழைக்கப்படும் லெமன் சுறா. (Indian lemon Shark).
பிலால் வகை சுறாக்களில் 3 வகைகள் இருந்தன. அதில் ஒருவகை சுறா மறைந்து விட்ட நிலையில் தற்போது இருவகை சுறாக்கள் உயிர்வாழ்கின்றன.
அதில், ஒருவகை பிலால், Negoprion brevirostris என்ற அறிவியல் பெயர் கொண்டது. மற்ற சுறா Negoprion acutidenes என்ற அறிவியல் பெயருடன் விளங்குகிறது.
பின்னர் குறிப்பிட்ட சுறா, அரிவாள் போன்ற முதுகுத்தூவி உடையது. கூரிய பற்களைக் கொண்டது. இப்போது நாம் காணப்போவது இந்த வகை Negoprion acutidenes பிலால் சுறாவைத்தான்.
பிலால் சுறா, எலுமிச்சை நிறத்தில் அதாவது வெளிர்மஞ்சள் நிறமாகத் திகழும். உடலின் அடிப்பாகம் வெளிறி மங்கலாகக் காணப்படும். எலுமிச்சை நிறத்தில் இருப்பதால்தான் ஆங்கிலத்தில் இது லெமன் சுறா என அழைக்கப்படுகிறது என தனியாகச் சொல்லத் தேவையில்லை.
பிலால் சுறா 14 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் முதுகில் தனித்தனியாக இரண்டு பெரிய தூவிகள் காணப்படும். மழுங்கலான தாடை கொண்ட சுறா இது. இதன் இரு தாடைகளிலும் கூர்மையான வளைந்த பற்கள் உண்டு. வழுக்கிச் செல்லக் கூடிய மீன்களை இரையாகப் பிடிக்க இந்த வளைந்த பற்கள் மிகவும் பயன்படுகின்றன.
பிலால் சுறா பொதுவாகத் தனித்துத் திரியக் கூடியது கடல்மட்டத்துக்கு மிக அருகில் முதுகுத் தூவி வெளியே தெரிய இது உலா வரும். 180 முதல் 250 கிலோ வரை எடையுள்ள இந்த சுறா, நீர்ப்பரப்பையொட்டியே அதிகம் காணப்படும்.
பகல்வேளைகளில் இது கடல்தரையில் உராய்ந்த நிலையில் ஓய்வெடுக்கும். பிலால் சுறா மஞ்சள் நிறமாக இருப்பதால் மணலோடு மணலாக இந்த சுறா படுத்திருந்தால் இதை இரையாக்க வரும் பெரும்சுறாக்களின் கண்களில் படாது. அதேவேளையில் இரைமீன்களும் பிலால் இருப்பது தெரியாமல் அருகில் வந்து சிக்கிக் கொள்ளும். பிலால் சுறாவின் மஞ்சள் நிறம் இப்படி உரு மறைப்பு செய்து வாழ்க்கையை நடத்த உதவுகிறது.
அரிவாள் போன்ற முதுகுத்தூவி
பிலால் சுறா, பாறைகள் கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள், அடர்ந்த பவழப்பாறை பகுதிகளில் காணப்படும். கற்குகைகள், பாறையின் மேல் பகுதிகள், கடலடி மணல் பீடபூமிகளிலும் இது தங்கும். அந்தி மாலையிலும், அதிகாலை வேளையிலும் இது சுறு சுறுப்பாக இயங்கி இரை தேடும்.
பிலால் சுறாவின் தீனிப்பட்டியல் மிகப்பெரியது. கெழுது, பாரை, மடவை, பேத்தா, கடமாடு, உழுவை, திருக்கை, நண்டு, சிறு சுறாக்கள், கடற்பறவைகள் பிலால் சுறாவின் இரைகளாகும். பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்காத எளிய இரைகளையே பிலால் வேட்டை யாடும். சிறிய பிலால் சுறாக்கள், மற்ற வகை பெரிய சுறாக்களுக்கு இரையாக மாறும். பிலால் சுறாவால் பலநாள்கள் இரை உண்ணாமலும் வாழ முடியும்.
பிலால் சுறாவுக்கு மற்ற இனச் சுறாக்களைப் போல இரைஉயிரின் உடலில் இருந்து வெளிப்படும் மின்துடிப்பை கண்டறியும் திறன் உண்டு. இதனால் மணலுக்குள் பதுங்கியிருக்கும் திருக்கை மீன்களைக் கூட கண்டுபிடித்து மணலைக் கிளறி இது இரையை வெளியே கொண்டு வந்து விடும்.
பிலால் சுறாவின் மூக்கில் காந்த உணர்வுத்திறன் இருப்பதுடன் வாசனை அறியும் திறனும் அதிகம். இத்தனைத் திறமைகள் இருப்பதாலோ என்னவோ பிலால் சுறாவுக்கு கண்பார்வை குறைவு. எனினும் இதன் விழித்திரையில் கிடைமட்டமான ஒரு சிறப்புப் பட்டை உண்டு. இந்த சிறப்புப் பட்டை, கண்களைக் கூசவைக்கும் ஒளியைத் தடுப்பதுடன் வண்ணங்களை இனம் காணவும் உதவுகிறது. இதன் காரணமாக, கலங்கிய கடலில் கூட பிலால் சுறாவால் இரையைப் பிடிக்க முடியும். எதிரியிடம் இருந்து தப்பவும் முடியும்.
பிலால் சுறா தனித்துத் திரியும் சுறா என்றாலும் சில வேளைகளில் 20 மீன்கள் கொண்ட கூட்டமாக இது திரியும். பெண் சுறாக்கள் குட்டி போடக் கூடியவை. ஓர்  ஈற்றில் 1 முதல் 20 குட்டிகள் வரை பிறக்கும். பெண் சுறா, கடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது பிறந்த இடத்துக்குத் திரும்பிவந்து அங்கே குட்டி ஈனுவது சிறப்பு.
கடல்தரையில் ஓய்வு
பிலால் சுறா கடல்தரையில் ஓய்வெடுக்கும்போது அதன் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை சிலசிறிய மீன்கள் வந்து எடுக்க அனுமதிக்கும். ஆனால், அதேவேளையில் செவுள்கள் வழியாக கடல்நீர் சென்றால்தான் மற்ற சில சுறாக்களைப் போல பிலால் சுறாவாலும் மூச்செடுக்க முடியும். ஆகவே, இது தொடர்ந்து ஓய்வில் இருக்க முடியாது. கண்டிப்பாக நீந்தியாக வேண்டும்.
பிலால் சுறா தயக்கம் மிகுந்தது. தூண்டில் இரை யைக் கண்டால் கூட இது கவனமாகத்தான் இரையை அணுகும். அதுபோல முக்குளிக்கும் மனிதர்களை இது ஒன்றும் செய்யாது. சீண்டினால் மட்டுமே இது மனிதர்களைத் தாக்கும். பெரிய உடல் காரணமாக படகுகளையும் இதனால் தாக்க முடியும். ஆனாலும், பொதுவாக ஆபத்தற்ற சுறா இது.
சிலவகை சுறாக்களை மனிதர்களால் வளர்க்க முடியாது. வளர்க்க முயன்றால் கண்ணாடித் தொட்டியில் தலையை முட்டி முட்டி அவை உயிரை விட்டுவிடும். ஆனால், பிலால் சுறாவை மனிதர்களால் வளர்க்க முடியும். ஆகவே இந்த சுறாவைப் பற்றி இதுவரை நிறைய ஆய்வுகள் நடத்த முடிந்திருக்கிறது.
பிலால் சுறா மனிதர்களால் உண்ணப்படும் சுறா. இதன் உடல் உப்புக்கண்டமாக்கப்பட்டு விற்பனையாகிறது. இதன் தூவிகள் சூப் தயாரிக்கப் பயன்படுகின்றன. பிலால் சுறாவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிக சத்து மிகுந்தது.
எல்லா வகை சுறாக்களையும் போல பிலால் சுறாவும் அருகிவருகிறது. அழிவின் விளிம்பில் இது இருக்கிறது.

No comments :

Post a Comment