Monday, 30 December 2019


கூடு விட்டு கூடு..
முனிவன் நண்டு


கூடுவிட்டு கூடு பாய்தல் என்று சொல்வார்களே. அதுபோல அடிக்கடி கூடுவிட்டு கூடு மாறும் ஒரு கடலுயிர் இருக்கிறது. அதுதான் துறவி நண்டு, தவசி நண்டு என அழைக்கப்படும் முனிவன் நண்டு (Hermit Crab).

முனிவன் நண்டு அச்சுஅசலாக நண்டு இனத்தைச் சேர்ந்தது அல்ல. என்றாலும் கூட இது நண்டாகவே கருதப்படுகிறது. முனிவன் நண்டுகளில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 1,100 வகை நண்டுகள் உள்ளன. முனிவன் நண்டுகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தரைவாழ் நண்டு. மற்றொன்று நீர்வாழ் நண்டு.
நண்டு இனங்களுக்கு அவற்றின் உடலைச் சுற்றி வலிமையான கவசஓடு ஒன்று உண்டு. முனிவன் நண்டுக்கு இயற்கை ஏனோ அது போன்ற வலிய ஓட்டுடல் கவசம் ஒன்றை தர மறந்து விட்டது. முனிவன் நண்டின் வயிற்றுப் பாகம் மிக மென்மையான பகுதி என்பதால், கொல்லுண்ணி கடலுயிர்கள் எது வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் முனிவன் நண்டின் வயிற்றுப்பாகத்தைத் தாக்கி, அதை இரையாக்க முடியும். குறிப்பாக கணவாய்களால் எந்த நேரத்திலும் ஆபத்து உண்டு.
இந்த ஆபத்தில் இருந்து தப்ப, முனிவன் நண்டு தேர்ந்தெடுத்த வழிதான் கூடு தேடி அதற்குள் குடியிருக்கும் பழக்கம். தன் உடல் அளவுக்கு ஏற்ற சங்கு அல்லது நத்தைக்கூடு ஒன்றைத் தேர்வு செய்து அதற்குள் மறைந்து கொள்வதும், தேவைப்படும் நேரங்களில் அந்த கூடை நகர்த்திக் கொண்டு அங்குமிங்கும் திரிவதும் முனிவன் நண்டின் வழக்கம்.
‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பது பழமொழி. அதைப்போல கூடு இல்லா முனிவன் நண்டு பாழ் என்பது புதுமொழி. கூடு இல்லாத முனிவன் நண்டு, கவசத்தைத் தொலைத்த வீரன் போல ஆகி கணவாய்களுக்கு எளிதாகப் பலியாகிவிடும். எனவே கூடு தேடி. வாடகை பிரச்சினையின்றி அங்கே முனிவன் நண்டு குடியிருக்கிறது.
சிலவேளைகளில் முனிவன் நண்டு அதன் கூட்டைவிட சற்றுப் பெரியதாகி. 8  செ.மீ. அளவுக்கு வளர்ந்து விட்டால் வேறு பெரிய கூடு தேட வேண்டிய நெருக்கடி ஏற்படும். பெரிய கூடு ஒன்றைத் தேடி முனிவன் நண்டு அங்குமிங்கும் அலையத் தொடங்கும்.
உணவு வேளை...
வேறு முனிவன் நண்டுகள் குடியிருக்கும் கூடுகளில் போய் வீண் தகராறு செய்யாமல் கைவிடப்பட்ட காலியான கூடுகளைத் தேடிச் சென்று முனிவன் நண்டு குடிபுகுந்து கொள்ளும். சிலவேளைகளில் ஒரு கூட்டில் வாழ்ந்த முனிவன் நண்டு இறந்து விட்டால் அதன் உடலில் இருந்து வெளிப்படும் மணத்தை முகர்ந்து அந்த காலிக் கூட்டைக் கைப்பற்ற மற்ற முனிவன் நண்டுகள் அங்கே விரைந்து வருவது உண்டு. முனிவன் நண்டுக்கு முடிகளால் மூடப்பட்ட பலநூறு ’மூக்குகள்’ உள்ளன. அதன்மூலம் அழகாக அவற்றால் மோப்பம் பிடிக்க முடியும்.
முனிவன் நண்டுக்கும் உடல் ஓட்டை கழற்றும் பழக்கம் உண்டு. சட்டை சிறிதாகி உடலைப் பிடித்தால் நம் சட்டையைக் கழற்றிவிட்டு வேறு பெரிய சட்டையை அணிவோம் இல்லையா? அதுபோல முனிவன் நண்டும் அதன் மேல்ஓட்டைக் கழற்றி புதிய ஓட்டை பெற்றுக் கொள்ளும். மென்மையான இந்த புதிய ஓடு உறுதியாவதற்கு நாளாகும் என்பதால் அந்த கால கட்டத்தில் ஏறத்தாழ 4 முதல் 8 வாரங்கள் முனிவன் நண்டு மணலுக்குள் புதைந்து ஒளிந்து வாழும்.
இந்த ஓடு கழற்றப்படும் காலகட்டத்தில் கூடு இல்லாத வேறு முனிவன் நண்டு வந்து, கூடுகழற்றிய முனிவன் நண்டை தின்று விட்டு கூட்டை தனதாக்கிக் கொள்வதும் நடக்கக் கூடியதுதான். ஆம். முனிவன் நண்டுகளிடம் தன்னினத்தையே கொன்று தின்னும் பழக்கம் உண்டு.
அதுபோல, கூடு சிறிதாகிப்போய், வேறு கூடு தேடி அலையும் முனிவன் நண்டு, தனது அளவுக்கேற்ற காலிக்கூடு அந்தப் பகுதியில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டால் மற்றொரு முனிவன் நண்டுடன் சண்டையிட்டு அதன் கூட்டை பிடுங்கிக் கொள்ளத் தயங்காது. முனிவன் நண்டுகளுக்கு பற்கள் கிடையாது என்றாலும், நகங்கள், கால்களைப் பயன்படுத்தி சண்டையிட்டு ஒன்றையொன்று பிய்த்துக் கொள்ளும்.
தரையில் நடைபழகல்
சிலவேளைகளில் தனது உடலை விட தான் வசிக்கும் கூடு சிறியதாகிவிட்டால் அடுத்தமுறை ஓடு கழற்றும்போது தனது உடலை பெரிதாக்குவதற்குப் பதிலாக சிறிதாக்கிக் கொள்ளும்(!) அரிய திறமையும் முனிவன் நண்டுக்கு உண்டு. இன்னொருபுறம், வெவ்வேறு அளவிலான முனிவன் நண்டுகள், அவை வளரும்போது ஒன்றின் கூட்டை அதைவிட சிறிய மற்றொறு நண்டுக்கு இயல்பாக விட்டுக் கொடுப்பதும் உண்டு.
கடலில் வாழும் முனிவன் நண்டுக்கு, கடல்வாழ் கடற்பஞ்சு உயிரினமான கடல்சாமந்திக்கும் (Sea Anemon) நெருங்கிய உறவு உண்டு. நாம் வீடுகளில் தொட்டியில் பூஞ்செடியை வளர்ப்பது போல, முனிவன் நண்டு அது குடியிருக்கும் கூட்டில் கடல் சாமந்தியை வளர விடும். இதில், முனிவன் நண்டுக்கு இரண்டு விதமான பயன்கள். ஒன்று சாமந்தி வாழும் கூடு இயற்கையோடு இயைந்து போவதால் முனிவன் நண்டு எளிதாக உருமறைப்பு செய்து கொள்ள முடியும்.
இரண்டாவதாக, கடல் சாமந்தியின் கொட்டும் தன்மையுடைய கொடுக்குகள் காரணமாக சாமந்தி இருக்கும் கூட்டை பிற கொல்லுண்ணி உயிர்கள் தொடத் தயங்கும். இதனால் முனிவன் நண்டு ஆபத்தின்றி வாழ முடியும். இது முனிவன் நண்டு பெறும் இரண்டாவது பயன்.
சரி. கடல்சாமந்தியை கூட்டில் வளர்ப்பதால் முனிவன் நண்டுக்குப் பயன்கள் இருக்கின்றன. இதனால் கடல் சாமந்திக்கு என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் கடல் சாமந்திக்கும் பயன் இருக்கிறது. முனிவன் நண்டு இரையுண்ணும்போது சிதறும் மிச்ச மீதங்களை கடல் சாமந்தி உணவாக்கிக் கொள்ளும். கடல் சாமந்தியின் இந்த பயன்பாடு காரணமாக முனிவன் நண்டு வேறுவேறு கூடுகளுக்கு மாறினாலும் அந்தகூடுகளிலும்கூட கடல் சாமந்தியை இடம்பெறச் செய்து விடும்.
ஓட்டின் மேல் கடல் சாமந்தி
முனிவன் நண்டுகள் தன்னினத்தை உண்ணக் கூடியவை என்று முன்பே பார்த்தோம். இதைத்தவிர இறந்த மீன்கள், கணவாய், நண்டு, இறால், கடல்குதிரை, சிப்பி, காய்கறி, பழம், விதை, கடற்புழுக்கள், பாசி போன்றவற்றையும் முனிவன் நண்டு உண்ணும். மென்மையான வாய்ப்பகுதியில் உள்ள சிறு தூரிகைத்தும்பு போன்ற அமைப்பைப் பயன்படுத்தி நீரில் உள்ள நுண்ணுயிர்களையும் இது வடிகட்டி உண்ணும்.
கடலில் வாழும் முனிவன் நண்டுகள் கடல்நீரில் உள்ள காற்றை செவுள்களால் பிரித்து மூச்செடுக்கும். நிலம் வாழ், முனிவன் நண்டுகள் அவற்றின் செவுள்களால் மூச்செடுக்க அதிகமான ஈரப்பதம் தேவை. இதனால் தான் தரைவாழ் முனிவன் நண்டுகளுக்கு, ஓட்டுக் கூட்டின் பின்புறத்தில் நீர் சேர்த்து வைக்கும் பழக்கம் உண்டு.
முனிவன் நண்டுகள் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை. மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரு கடலுயிர் இது.

Sunday, 29 December 2019


துள்ளல்மீன் பறளா

பறளா எனப்படும் அய்லஸ்
 பறளா (Mahi Mahi) என்ற மீனைப்பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவிட்டுள்ளோம். அதனால் என்ன? அதே மீனைப் பற்றி புதிய சில தகவல்களுடன் பதிவிட்டால் ஒன்றும் குறைந்து போய்விடாது. எனவே இந்த புதிய பதிவு.


கடலில் மிகமிக வேகமாக வளரும் மீன்களில் ஒன்று பறளா. பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், கடல் அடிப்பகுதியை நாடாமல், கடல் மேற் பரப்பையொட்டி வாழும் ஒருமீன் பறளா. சூரை, கொப்பரன் போன்ற உயர்வேக மீன்கள் திரியும் கடலில் அவற்றுக்கு இணையான வேகம் கொண்ட வலிமையான மீன் இது.
கடலில் வரிசையாக மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தால் அவற்றுக்குப் போட்டியாக நீந்தி அதிவேகத்தில் சிலபல மீன்பிடி படகுகளைக் கடந்து அவற்றை முந்திச் செல்லக்கூடிய மீன் இது. அலைகளைக் கடந்து மிகவேகமாக தங்க நிற துப்பாக்கிக் குண்டைப் போல நீந்திச் செல்லக்கூடியது.
பறளா மீன், பச்சை, மஞ்சள், நீலம் இவற்றுடன் தகதகக்கும் தங்க நிறமும் கொண்டு ஜொலிக்கும் மீன். இதனால்தான் ஸ்பெயின் நாட்டவர்கள் அவர்களது ஸ்பானிய மொழியில் இந்த மீனுக்கு டொராடோ (Dorado) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். டொராடோ என்றால் தங்கம்.
தங்க நிறம்... உடல் செம்பவளம்...
சிலவகை மீன்களுக்குப் பல பெயர்கள் இருக்கும். பறளாவும் அந்த வரிசையில் இடம்பெறத்தக்கது. தமிழில் இது பறளா, அய்லஸ், அப்பிராஞ்சு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. வரையோடு என்ற பெயரும் இந்த மீனுக்கு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மலையாளத்தில் இதை புள்ளி மோத்தா என்று அழைப்பார்களாம்.
மத்தியத்தரைக்கடல் நாடான மால்டாவில் இந்த மீன் லம்புகா என்று அழைக்கப்படுகிறது. பசிபிக் கடலில் உள்ள ஹவாய்த் தீவுப் பகுதியில் பேசப்படும் பாலினீசிய மொழியில் இதன் பெயர் மாகி மாகி (Mahi Mahi). மிகுந்த பலம் அல்லது ‘வலிமை.. வலிமை’ என்பது இதற்கு அர்த்தம். நீச்சலில் மட்டுமல்ல, கடலைவிட்டு நீங்கி துள்ளிப்பாய்வதிலும் இந்த மீன் பெயர் பெற்றது. சிலவேளைகளில் அதிக உயரம் துள்ளி படகுகளிலும் இது வந்து விழுந்து தானாக சிக்கிக் கொள்ளும். இப்படி ஓங்கி உயரக் குதிப்பதால் ஆங்கிலத்தில் இந்த மீனுக்கு ‘டால்பின் மீன்’ என பெயர் சூட்டி விட்டார்கள். மற்றபடி, டால்பின் எனப்படும் ஓங்கலுக்கும், இந்த மீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஓங்கல் பாலூட்டி இனம். பறளா மீன் இனம்.
அய்லஸ் எனப்படும் பறளா மீன், 7 கிலோ முதல் 15 கிலோ வரை எடையிருக்கக் கூடியது. சில மீன்கள் 39 கிலோ வரையிலும் கூட எடையிருக்க வாய்ப்புள்ளது.  பறளாக்களில், ஆண் மீனை விட பெண் மீன் சிறியது. பெண் மீனின் தலை வட்ட வடிவமானது. மொண்ணையாக, மழுங்கிப்போனது மாதிரியான முகமும், நீண்ட தூவியும் (Fin) பறளாவின் முதன்மையான அடையாளம்.
கடல் மேற்பரப்பு மீனான பறளா, கடலில் மிதக்கும் பாசிகள், தென்னை ஓலைகள், மரத்துண்டுகள் இடையே சுற்றித் திரிவதை விரும்பும். பார் ஓரங்களிலும் இது காணப்படும். கோலா, சாளை, கணவாய், நண்டு இவற்றுடன் கவர் எனப்படும் பிளாங்டன் மிதவை நுண்ணுயிர்களையும் பறளா உண்ணும்.
கண்கவர் மீன்
கடலில் சூரை, கொப்பரான் திரியும் இடத்தில் திரியும் பழக்கம் கொண்ட பறளா, சூரையைப் போல வெளிச்சம் குறைவான நேரத்தில் மட்டும் இரையைக் கடிக்காமல், நல்ல பகல் பொழுதில் கூட சுறுசுறுப்பாக இயங்கி இரை தேடக்கூடியது. வேகமாக ஓடும் இரையை இது மிகவும் விரும்பிப் பிடிக்கும்.
பறளாவைத் தூண்டிலில் பிடிக்க, முதலில் ஒரு மீன் துண்டை அதற்கு இரையாக கடலில் போட்டு அதை கவர்ந்து இழுப்பார்கள். பின்னர் அதே இரையை தூண்டிலில் கொளுவி பறளாவைப் பிடிப்பார்கள். சாளை போன்ற உயிருள்ள மீன்களை இரையாக வைத்தால் பறளா எளிதாகத் தூண்டிலில் சிக்கும். உண்ணத்தகுந்த சுவையான மீன் பறளா.
பறளா ஏழு ஆண்டுகாலம் வரை உயிர்வாழக்கூடியது. பச்சை, மஞ்சள், நீலம், பொன்னிறம் என பல வண்ணங்களில் பொலியும் பறளா மீன் பிடிபட்டு இறந்துவுடன் உடல் வண்ணங்கள் இருண்டு போய் அதன் அழகிய நிறம் கறுத்துப் போய்விடும்.

#பறளா பற்றிய நமது வலைப்பூ பழைய பதிவு: 2014 பிப்ரவரி

Friday, 27 December 2019


ஜேக்கே இவ் குஸ்தோவ்

ஜேக்கே இவ் குஸ்தோவ்
கடலையும், கடல்வாழ் உயிர்களை மட்டுமல்ல, கடலியல் சார்ந்த ஆய்வாளர்கள், அறிஞர்களையும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அந்த வரிசையில் முதலாவதாக பிரான்ஸ் நாட்டு கடலியல் ஆய்வாளர்  ஜேக்கே இவ் குஸ்தோவ் (Jacques Yves Cousteau).
மீன்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மீனாகவே மாறி விடுங்கள்என்றவர் ஜேக்கே இவ் குஸ்தோவ். பிறப்பு 1910, ஜூன் 11ஆம்தேதி போர்தோ நகரில். 4 வயதிலேயே கடலில் நீந்தக் கற்றுக்கொண்டர் குஸ்தோவ்.
இவரது குடும்பம் அமெரிக்காவில் 2 ஆண்டுகள் இடம்பெயர்ந்து வாழ்ந்தபிறகு மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்குத் திரும்பி, மத்தியத்தரைக்கடல் துறைமுக நகரமான மர்செயில்ஸ் நகரில் குடிபுகுந்தது. அங்கே கடலில் அடிக்கடி முக்குளித்து வந்தார் குஸ்தோவ். குறும்புகள் இவரது கூடப்பிறந்தது என்பதால் அல்சேஸ் பகுதியில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தப்பள்ளி அவருக்கு சிறந்த ஒழுக்கத்தைக் கற்றுத் தந்தது.
1930ம் ஆண்டு, தனது 20ஆவது வயதில் பிரான்ஸ் நாட்டு கடற்படையில் இணைந்தார். 1933ல் அலுவராகி 2 ஆண்டுகள் கடற்பயணம் செய்தார். கடற்படை விமான வலவராக (பைலட்) மாற வேண்டும் என்பது அவரது கனவு. அதற்கான பயிற்சிகளை எடுத்து கிட்டத்தட்ட தேறினார். ஆனால், விதி வலியது.
1935ஆம் ஆண்டு அப்பாவின் ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிப் போய் விபத்தில் சிக்கி கைகளை உடைத்துக் கொண்டார். உடல்முழுக்க 12க்கும் மேற்பட்ட இடங்களில் முறிவு. உடலின் ஒருபக்கம் செயலிழந்து விட்டது. ஒருவழியாக உயிர் பிழைத்துக் கொண்டாலும் கடற்படை விமானியாகும் கனவுக்கு அவர்  விடைகொடுக்க வேண்டியதாயிற்று.
உடல் மெல்ல தேறியதும் கைகளுக்கு வலிமை சேர்க்க, கடலில் நீச்சல் பயிற்சிகளை ஆரம்பித்தார். அதுவே கடல் மீதான காதலாக மலர்ந்தது.
நீலக்கடலும், அதில் நீந்தும் மீன் இனங்களும், எண்ணற்ற கடலுயிர்களும் ஜேக்கே இவ் குஸ்தோவின் இதயத்தை ஈர்த்தன. டைவிங் எனப்படும் முக்குளிப்பு அவரது வாழ்க்கையாக மாறியது.
1936ல் சிமோன் மெல்கியா(ர்) (Simone Melchior) என்ற பெண்மணியை இவர் மணந்து கொண்டார். அந்தப் பெண்மணி நகைகளை விற்று காலிப்சோ (Calypso) என்ற ஆய்வுக் கப்பலை வாங்க உதவி செய்தார். கப்பல் பயணங்களில் குஸ்தோவின் கூடமாட வந்து சிமோன் உதவினார். கப்பல் மாலுமிகளும் சிமோனை மிகவும் போற்றினர்.
1942ல் நண்பர் மார்ஷலுடன் இணைந்து மத்தியத் தரைக்கடலில் கடலடி கேமரா மூலம் ‘18 அடி ஆழம்என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார் குஸ்தோவ்.
கடலடியில்.....
ஜேக்கே இவ் குஸ்தோவ் நடத்திய கடல் ஆய்வுகள் பலப்பல. ஸ்கூபா எனப்படும் நீர்மூழ்கு தொழிலுக்குப் பயன்படும் கருவிகள் 1926லேயே கண்டுபிடிக்கப்பட்டாலும். அதன்மூலம் மிகக்குறைந்த நேரமே கடலுக்கு அடியில் இருக்க முடியும்.
இந்தநிலையை மாற்றினார் குஸ்தோவ். 1942ல் எமில் கக்கான் என்பவருடன் இணைந்து அக்குவா லங்(Aqua-Lung) என்ற கடல் முக்குளிப்பு கருவியை கூட்டாக கண்டுபிடித்தது வரது மிகப்பெரிய சாதனை. அதன்மூலம் ஸ்கூபா நீரடி நீச்சல் வீரர்கள் முதுகில் உள்ள காற்றுக் குடுவைகளில் இருந்து தேவைப்படும் போது, தேவைப்படும் அளவில் மட்டும் மூச்சுக்காற்றை பெற முடிந்தது. இதனால் நீண்ட நேரம் கடலடியில் ஆய்வுகளை நடத்த முடிந்தது.
இதன்பிறகு உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி வீரராக குஸ்தோவ் மாறினார். இந்த முக்குளிப்பு கருவிகள், ஆய்வுக் கப்பல் மூலம் பல நூறு கடலாய்வுகளை அவரால் நடத்த முடிந்தது.
திமிங்கிலங்கள் கடலில் திசையறிந்து பயணம் செய்ய ஒலியலைகளைப் பயன்படுத்து கின்றன என்பதை உலகுக்கு முதலில் கண்டறிந்து சொன்னவர் குஸ்தோவ்தான்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜேக்கே இவ் குஸ்தோவின் கப்பல் கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. போர் முடிந்தபிறகு மால்டா நாட்டில் பயணிகள் கப்பலாக அது பயன்பட்டது.
1950ல் ஐயர்லாந்து நாட்டு செல்வந்தரான தாமஸ் லோயல் கின்னஸ் இந்த கப்பலை வாங்கினார். ஆனால், கப்பலை மீண்டும் குஸ்தோவுக்கே அவர் குத்தகைக்கு விட்டு விட்டார். ஆண்டுக்கு ஒரு ஃபிராங்க்(!) தந்தால் போதும் என்ற நிபந்தனையுடன்.
1960ல் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘வருங்காலத்தில் மனிதர்கள் கடலுக்கு அடியில் வாழ்வார்கள்என்றும், ‘மீன்களுக்கு இருப்பதுபோன்ற செவுள்களை (Gills) அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் காலம் தொலைவில் இல்லைஎன்றும் ஜேக்கே இவ் குஸ்தோவ் தெரிவித்தார்.
1985ஆம் ஆண்டு கியூபா நாட்டின் கல்இறால் வளர்ப்பு குறித்து ஆராய கியூபா சென்ற அவர், கியூபா நாட்டு அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை தனது காலிப்சோ (Calypso) ஆய்வுக் கப்பலுக்கு அழைத்து அங்கே விருந்தளித்தார்.
குஸ்தோவ் திரைப்பட ஆவணப்பட உருவாக்கங்களிலும் சிறந்த பங்களிப்பைச் செலுத்தினார். அவர் உருவாக்கிய ஆவணப்படங்கள் 3 முறை ஆஸ்கார் விருதுகளை வென்றன.
ஜேக்கே இவ் குஸ்தோவ்
ஜேக்கே இவ் குஸ்தோவின் கடலடி உலகம்என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் அவர் தயாரித்தார். கடலடியில் இதுவரை காணாத காட்சிகளை இந்த தொடர் மூலம் மக்கள் கண்டு வியக்க முடிந்தது.
1990ல் மனைவி சிமோன் மெல்கியா(ர்) புற்றுநோயால் இறந்து விட, தனக்கு வேறு ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கும் தகவலை குஸ்தோவ் வெளிப்படுத்தினார். அவரது இரண்டாவது மனைவியின் பெயர் பிரான்சீன் டிரிபிளட்.
1997ல் குஸ்தோ இயற்கை எய்தினார்.
நிலத்தின் மேலே இப்போது நடப்பதெல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியிலும் நடக்கும். புதிய உலகம் ஒன்று உருவாகும்என்றவர் ஜேக்கே இவ் குஸ்தோவ். அவரது கனவு நனவாகும் காலம் தொலைவில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

Sunday, 22 December 2019


மீன் வயிற்றில் மனிதன்!

பிருதெஸ் திமிங்கிலம்
கிறிஸ்துவர்களின் புனித நூலான விவிலியத்தில் யோனா (Jonah) என்ற இறைதூதரை பெரிய மீன் ஒன்று விழுங்கியதாக ஒரு பதிவு உள்ளது. அந்த கடல்மீனின் வயிற்றில் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் யோனா உயிருடன் இருந்து பின்னர் உயிருடன் மீண்டதாக விவிலியத்தில் பதிவுகள் உள்ளன.
யோனாவை விழுங்கிய மீன் திமிங்கிலமாக(?) இருக்கலாம் என்று கருதப்பட்டாலும் அது எந்த வகையான மீன் என்பது பற்றி பைபிளில் தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், யோனாவை விழுங்கிய மீன் குறைந்தது 2 மீட்டர் நீளமுள்ள மீனாக இருந்திருக்க வேண்டும். கடலில் 2 மீட்டர் நீளத்துக்கும் மேற்பட்ட லவகை மீன்கள் உள்ளன.
துபோன்ற பெரிய மீன்களில் ஒன்று, மீன் இனத்தில் உலகிலேயே மிகப்பெரிய மீனான அம்மணி உழுவை (Whale Shark). மற்றொன்று மேய்ச்சல் சுறா (Basking Shark). இந்த இரு மீன்களும் மிக நீளமான பெரிய வகை மீன்கள். இவற்றில் ஏதாவது ஒன்று யோனாவை விழுங்கியிருக்க கூடும் என்று கருதப்பட்டாலும், இந்த இருவகை மீன்களும், பிளாங்டன் எனப்படும் கடல் கவுர்களையும் சிறு மீன்களையும் உண்ணக்கூடியவை. இவற்றால் ஒரு மனிதனை முழுதாக விழுங்க முடியுமா என்பது ஐயம்தான்.
அம்மணி உழுவையின் உணவுக்குழாய் (Oesophagus) சில அங்குல குறுக்களவு மட்டுமே கொண்டது. அம்மணி உழுவையின் வாய்க்குள் சோற்றையோ கடல்பாசியையோ நாம் வீசி எறிந்தால், சுவரில் அடித்த பந்து போல அவை வெளியே வந்து விழுந்துவிடும். அதாவது அம்மணி உழுவை அவற்றை வெளியே துப்பிவிடும். எனவே முழு மனிதன் ஒருவனை அம்மணி உழுவையோ, மேய்ச்சல் சுறாவோ விழுங்க வாய்ப்பில்லை. அப்படியும், அழையா விருந்தாளியாக மனிதன் அவற்றின் வாய்க்குள் புகுந்தாலும் மறுபொழுதே அவை மனிதனை வெளியே துப்பி விடும்.
அம்மணி உழுவை, மேய்ச்சல் சுறாவுக்கு அடுத்தபடியாக பெரும் வெள்ளைச்சுறா எனப்படும் பெருவஞ்சுறா (Great White Shark) களவா (Grouper) போன்ற மீன்கள் மனிதனை முழுதாக விழுங்கும் அளவுக்குப் பெரியவை.
ஸ்பெர்ம் (Sperm) எனப்படும் விந்து திமிங்கிலங்களாலும் மனிதனை முழுதாக விழுங்க முடியும். இந்த வகை திமிங்கிலங்கள் மிகப்பெரிய கணவாய்களையும், பதினைந்து அடி நீள சுறாவையும் சிலவேளைகளில் முழுதாக விழுங்கக் கூடியவை.
அப்படி ஒரு முழு மனிதனை ஸ்பெர்ம்  திமிங்கிலம் விழுங்கினால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
ஸ்பெர்ம் (Sperm) திமிங்கிலத்துக்கு பசுவுக்கு இருப்தைப்போல நான்கு வயிறுகள் உண்டு. உணவை செரிக்க வைக்கக் கூடிய அமிலங்களும், சாறுகளும் இந்த வயிறுகளில் நிறைந் திருக்கும். ஸ்பெர்ம் (Sperm) திமிங்கிலத்தின் செரிமான பாதையில் காற்றை இழுத்து மூச்சுவிட போதிய வசதியிருக்காது என்பதுதான் துயரம். மனிதன் ஒருவன் ஐந்து மணித்துளிகள் மூச்சு விட காற்றில்லாமல் இருந்தால் அவன் இறந்து விடுவான். எனவே மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் ஸ்பெர்ம் (Sperm) திமிங்கிலத்தின் வயிற்றில் இல்லை.
ஆஸ்திரேலியாவில் ஒருமுறை பெரிய வெள்ளைச்சுறா (பெருவஞ்சுறா) (Great White Shark) ஒன்று 2.1 மீட்டர் நீளமும், 80 கிலோ எடையும் உள்ள சாம்பல்நிற சுறா ஒன்றை முழுதாக விழுங்கியது. அப்படியானால் வெள்ளைச்சுறாவால் இதுபோல ஒரு மனிதனையும் முழுதாக விழுங்க முடியும் என்பதுதான் உண்மை.
சுறாக்கள் சிலவேளைகளில் அவற்றின் உணவை முழுதாக விழுங்கி வைக்கும். அல்லது, கடித்து சிறுசிறு துண்டுகளாக்கி உண்ணும். சுறாக்களின் வயிறு U என்ற ஆங்கில எழுத்தைப் போன்றது. அவற்றில் வலிமை வாய்ந்த அமிலங்களும், நொதிகளும் இருக்கும். தின்னும் இரையைக் கரைக்க இந்த அமிலங்களும், நொதிகளும் பயன்படுகின்றன.
சுறாக்களின் வயிற்றுக்கும், குடலுக்கும் இடையே உள்ள பைலோரிக் (Pyloric) குழாய் மிகவும் சிறியது. இவற்றின் வழியே திடஉணவு போக முடியாது என்பதால், சுறா வயிற்றில் வந்து விழும் இரை, அமிலங்களால் கரைக்கப்பட்டு சூப் போல ஆக்கப்பட்டு, குடலுக்குப் போய்ச் சேரும். செரிக்க முடியாத பெரிய எலும்புகள், ஊட்டச்சத்தற்ற பொருள்களை சுறா வாந்தி மூலம் வெளியேற்றி விடும். சுருக்கமாகச் சொன்னால் சுறாக்களின் வயிற்றுக்குள் போய் இரையாக விழுவது எளிது. வெளியே வருவது கடினம்.
களவா (Grouper) மீன்களைப் பொறுத்தவரை அவற்றில் மனிதனை முழுதாக விழுங்கக் கூடிய அளவுக்கு பெரிய மீன்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கோலியாத் களவா மிகப்பெரியது. ஒரு கார் அளவுள்ளது.
ஆனால், களவா மீன்கள் கடித்துண்ணக்கூடிய மீன்கள். மனிதர்களை சில வேளைகளில் அவை கொன்றிருப்பது தெரிய வந்தாலும், மனிதர்கள் யாரையும் களவா முழுமையாக விழுங்கியதாக இதுவரை தகவல் வந்ததில்லை.
குகை அல்ல.. களவா மீனின் வாய்
களவாக்கள் இரையை உறிஞ்சவும் செய்யும். சிலவேளைகளில் கடலடியில் முக்குளித்து வரும் மனிதர்களை நோக்கி அவை உறிஞ்சும்போது முக்குளிப்பவரின் கை களவாவால் உறிஞ்சப்பட்டு அதன் வாய்க்குள் சிக்கிய நிகழ்வுகள் உள்ளன. பின்னர் அரும்பாடுபட்டு கை விடுவிக்கப்பட்டிருக் கிறது. இந்தநிலையில், களவா மீனால் முழுதாக ஒரு மனிதன் விழுங்கப்பட்டால் அதன்பிறகு என்ன ஆகும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே ஸ்பெர்ம் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்ட மனிதர்கள் உயிர்பிழைத்த வரலாறும் உள்ளது. எடுத்துக்காட்டாக மார்ஷல் ஜென்கின்ஸ் என்பவர் 1771 ஆம் ஆண்டு ஸ்பெர்ம் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டு உயிர்பிழைத்திருக்கிறார்.
1891ஆம் ஆண்டு மற்றொரு நிகழ்வில், ஜேம்ஸ் பார்ட்லே என்பவர் தப்பிப்பிழைத்திருக்கிறார்.
ஸ்பெர்ம் திமிங்கிலம் ஒன்றை வேட்டையாட கடலில் முயற்சி நடந்தபோது திமிங்கில வேட்டைக்காரர்களில் ஒருவரான பார்ட்லேயை திமிங்கிலம் விழுங்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. வேட்டையர்கள் மறுநாள் அதை கண்டுபிடித்து கொன்றனர். அதன் உடலைப் பிளந்து பார்த்தபோது உள்ளே பார்ட்லே உயிருடன், ஆனால் மயக்கமாக இருந்தார். திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த அமிலம் காரணமாக பார்ட்லேயின் தோல் வெளிறிப்போயிருந்தது.
சில வாரங்களாக நீடித்த மருத்துவ கண்காணிப்புக்குப் பின் பார்ட்லே முழு உடல்நலத்தை அடைந்தார். ஆனால் அவரது கண்பார்வை போயிருந்தது. வாழ்நாள் முழுவதும் அவர் பார்வை யற்றவராக வாழ்ந்தார்.
ஜேம்ஸ் பார்ட்லே தொடர்பான இந்த நிகழ்ச்சி பொய்யானது என்றும், இதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் திமிங்கிலம் அல்லது திமிங்கில அளவுள்ள பெரிய வகை மீன்களால் மனிதர்கள் விழுங்கப்பட்டு உடனடியாக அவர்கள் துப்பப்பட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.
மற்றபடி, அறிவியலுக்குப் பொருந்தாவிட்டாலும், கடவுளின் ஏற்பாட்டின்படி ஒருவர் மீனால் விழுங்கப்பட்டிருந்தால் அவர் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் உயிரோடிருக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

கடலடி பூங்கா (பவழப்பாறைகள்) (Coral Reefs)

பவழப்பாறைகளை கடலின் மழைக்காடுகள் என்று வர்ணிப்பார்கள். உலகப் பெருங்கடல்களின் பரப் பளவில் பவழப்பாறைகளின் பங்கு வெறும் ஒரு விழுக்காடுதான். ஆனால், பெருங்கடல்களின் 25 விழுக்காடு உயிர் வகைகள் பவழப்பாறைகளில்தான் வாழ்கின்றன. பவழப் பாறைகளின் உயிர்ச்செழுமை இதன்மூலம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
வரப்புயர நீருயரும் என்பது போல செழுமையான பவழப்பாறைகள் செழுமையான கடல்களை உரு வாக்குகின்றன. செழுமையான பெருங்கடல் செழுமையான பூவுலகத்தை உருவாக்கக் கூடியது. நமது பூவுலகத்தின் சுற்றுச்சூழலில் பவழப் பாறைகளின் பங்கு மிகமிக முதன்மையானது.
பவழப்பாறைகள் என்பவை கடல்வாழ் தாவரங்கள் அல்ல. அவை சொரிமீன் (Jelly Fish), கடல் சாமந்தி போன்றவற்றுடன் உறவுமுறையுள்ள விலங்குகள். பவழப்பாறைகள் உயிர்வாழ சூரிய ஒளி மிகவும் தேவை. பல்வேறு உயிர்கள் ஒன்றிணைந்து பின்னிப்பிணைந்து வாழும் ஒரு கூட்டுப்பண்ணை போன்றது பவழப்பாறைகள்.
கடல்வாழ் மீனினங்கள் பலவற்றுக்கு ‘உண்டுஉறைவிட பள்ளி’ பழவப்பாறைகள்கள்தான். உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம் போன்றவற்றுக்காக பலவகை மீன்கள் பவழப்பாறை களையே நம்பியிருக்கின்றன. குஞ்சு மீன்களுக்கான நாற்றங்கால் பண்ணை பவழப்பாறைகள் தான். மீன்களின் முட்டைகள் எதிரிகளின் வாயில் சிக்கிவிடாமல் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் காப்பகமும் பவழப்பாறைகள்தான்.
மீன்கள் உள்பட பல்வேறு கடல் உயிர்களுக்கான பொழுதுபோக்கு கேளிக்கைப் பூங்காவாகவும் பவழப்பாறைகள் திகழ்கின்றன.
பவழப்பாறைகளில் பல ஆயிரம் வகைகள் உள்ளன. மான்கொம்பு, மரம், விசிறி, தேன்கூடு போன்ற பல வடிவங்களில் கண்கவர் வண்ணங்களில் பவழப்பாறைகள் காட்சி தருகின்றன.
பவழப்பாறைகளுக்கு சூரியஒளி தேவை என்பதால் 150 அடி ஆழத்துக்கு அப்பால் பவழப் பாறைகள் காணப்படுவதில்லை. அதுபோல பவழப்பாறைகள் உயிர்வாழ வெதுவெதுப்பான நீர் தேவை என்பதால் உலக அளவில் நிலப்பரப்புகளின் கிழக்குப் பக்கங்களில்தான் பவழப் பாறைகள் காணப்படுகின்றன. நிலப்பரப்புகளின் கிழக்குப் பக்கங்கள் வெதுவெதுப்பான நீர் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பவழப்பாறைகள் கடல்நீரை சுத்திகரித்து தூய்மையாக்குகின்றன. பவழப்பாறைகள் இருக்கும் இடத்தில் உள்ள கடல்நீர் தூய்மையாக மாறுகிறது. பவழப்பாறைகள் மிகமிக மெதுவாக ஆண்டுக்கு வெறும் 2 செ.மீ. உயரம் வரை மட்டுமே வளரக் கூடியவை.
மனிதர்களுக்குப் பயன்படும் பல்வேறு மருந்துகளை உருவாக்க பவழப்பாறைகள் பயன் படுகின்றன. சுனாமி போன்ற ஆழிப்பேரலைகள் கரையைத் தாக்காத வண்ணம் தடுக்கும் பாதுகாப்பு அரணாகவும் பவழப்பாறைகள் திகழ்கின்றன.
பவழப்பாறைகளில் சில ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானவை. பவழப்பாறைகளை நாம் அழியாமல் காத்து வளர விட்டால், அதன் மூலம், புவிவெப்பமடை வதைத் தடுத்து நிறுத்தலாம். இந்த பூவுலகத்தைக் காக்கலாம்.

Friday, 20 December 2019


‘ரெக்வியாம்’ சுறாக்கள்

ஐந்து செவுள் துளைகள்
சுறாக்களில் குறிப்பிட்ட குணநலன்கள் கொண்ட பெரிய அளவுள்ள சுறாக்கள் ‘ரெக் வியாம்’ (Requiem) சுறாக்கள் என அழைக்கப் படுகின்றன. Carcharhinidae குடும்பத்தைச் சேர்ந்த சுறாக்களுக்கு இந்தப் பெயர் உண்டு.
ரெக்வியாம் என்றால் என்ன என்று கேட்டு விடாதீர்கள். கொஞ்சம் சிக்கலான கேள்வி இது. லத்தீன் மொழியில் ரெக்வியாம் என் றால் ‘ஓய்வு’ (இறுதி ஓய்வு) என்று அர்த்த மாம். பிரெஞ்சு மொழியில் இந்த சொல்லுக்கு அர்த்தம் ‘மரணம்’.

இரங்கற்பா, இரந்தோரின் ஆன்ம இளைப் பாற்றிக்காகப் பாடப்படும் பாடல் என்பன போன்ற வேறுசிலபல அர்த்தங்களும் கூட இந்த ரெக்வியாம் என்ற சொல்லுக்கு இருக் கின்றன.
ரெக்வியாம் என்ற வகைப்பாட்டில் 260 வகை சுறாக்கள் இடம்பெறும் என்று சிலர் சொல் வார்கள். 54 முதல் 60 வகை சுறாக்கள் இடம் பெறும் என்று வேறு சிலர் கூறுவார்கள்.
எது எப்படியோ, சுறாக்களில் பெருஞ்சுறா (Great White Shark), கொம்பன் சுறா (Hammer head Shark) போன்ற பல ‘பெரியண்ணன்கள்’ ரெக்வியாம் வகைப்பாட்டின் கீழேதான் வருவார்கள்.
ரெக்வியாம் வகை சுறாக்கள் 3 முதல் 18 அடி நீள உடல் கொண்டவை. இவ வேகமாக நீந்தக் கூடிய பலம் பொருந்திய வேட்டையாடிகள். இவை நீண்ட தொலைவுவரை பெருங்கடல்களில் வலசை போகக் கூடிய சுறாக்கள். இவற்றின் முதன்மையான இருப்பிடம் வெப்பக் கடற்பகுதி கள்தான். ரெக்வியாம் சுறாக்கள் உயிருள்ள குட்டிகளை ஈனக்கூடியவை. மூச்சுவிடுவதற்காக ஐந்து செவுள் பிளவுகள் கொண்ட சுறாக்கள் இவை.
கொம்பன் சுறா
சாம்பல் அல்லது பழுப்பு நிற வண்ணம் கொண்ட இந்த சுறாக்கள் வெளிர்நிறமான அடிப்பகுதியைக் கொண்டவை. இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை. பெரிய பக்கவாட்டுத் தூவிகள் (Fins) இந்த சுறாக்களுக்கு அமைந்திருக்கும். முதுகில் முதல் தூவி மற்ற தூவியைவிட பெரியதாக இருக்கும்.
ரெக்வியாம் வகை சுறாக்கள் சிறந்த வேட்டைச் சுறாக்கள் என்றாலும், குப்பைகள் உள்பட கடலில் கிடைக்கும் எந்த ‘இரையையும்’ இவை தின்னக் கூடியவை.  இதனால் ‘கடலின் குப்பைத்தொட்டிகள்’ என்று கூட இவற்றை அழைப்பார்கள்.

Wednesday, 18 December 2019


பிலால் (Indian lemon Shark) (Negaprion acutidens)

பிலால் சுறா
தமிழகத்தின் சில கடலோரப் பகுதிகளில் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட சுறாக் களுக்கு பிலால் என்றொரு சிறப்புப் பெயர் உண்டு.
ஆனால், தமிழில் பிலால் என்ற பெயரில் தனியாக ஒரு சுறா இனமும் உள்ளது. அதுதான் எலுமிச்சைச் சுறா என அழைக்கப்படும் லெமன் சுறா. (Indian lemon Shark).
பிலால் வகை சுறாக்களில் 3 வகைகள் இருந்தன. அதில் ஒருவகை சுறா மறைந்து விட்ட நிலையில் தற்போது இருவகை சுறாக்கள் உயிர்வாழ்கின்றன.
அதில், ஒருவகை பிலால், Negoprion brevirostris என்ற அறிவியல் பெயர் கொண்டது. மற்ற சுறா Negoprion acutidenes என்ற அறிவியல் பெயருடன் விளங்குகிறது.
பின்னர் குறிப்பிட்ட சுறா, அரிவாள் போன்ற முதுகுத்தூவி உடையது. கூரிய பற்களைக் கொண்டது. இப்போது நாம் காணப்போவது இந்த வகை Negoprion acutidenes பிலால் சுறாவைத்தான்.
பிலால் சுறா, எலுமிச்சை நிறத்தில் அதாவது வெளிர்மஞ்சள் நிறமாகத் திகழும். உடலின் அடிப்பாகம் வெளிறி மங்கலாகக் காணப்படும். எலுமிச்சை நிறத்தில் இருப்பதால்தான் ஆங்கிலத்தில் இது லெமன் சுறா என அழைக்கப்படுகிறது என தனியாகச் சொல்லத் தேவையில்லை.
பிலால் சுறா 14 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் முதுகில் தனித்தனியாக இரண்டு பெரிய தூவிகள் காணப்படும். மழுங்கலான தாடை கொண்ட சுறா இது. இதன் இரு தாடைகளிலும் கூர்மையான வளைந்த பற்கள் உண்டு. வழுக்கிச் செல்லக் கூடிய மீன்களை இரையாகப் பிடிக்க இந்த வளைந்த பற்கள் மிகவும் பயன்படுகின்றன.
பிலால் சுறா பொதுவாகத் தனித்துத் திரியக் கூடியது கடல்மட்டத்துக்கு மிக அருகில் முதுகுத் தூவி வெளியே தெரிய இது உலா வரும். 180 முதல் 250 கிலோ வரை எடையுள்ள இந்த சுறா, நீர்ப்பரப்பையொட்டியே அதிகம் காணப்படும்.
பகல்வேளைகளில் இது கடல்தரையில் உராய்ந்த நிலையில் ஓய்வெடுக்கும். பிலால் சுறா மஞ்சள் நிறமாக இருப்பதால் மணலோடு மணலாக இந்த சுறா படுத்திருந்தால் இதை இரையாக்க வரும் பெரும்சுறாக்களின் கண்களில் படாது. அதேவேளையில் இரைமீன்களும் பிலால் இருப்பது தெரியாமல் அருகில் வந்து சிக்கிக் கொள்ளும். பிலால் சுறாவின் மஞ்சள் நிறம் இப்படி உரு மறைப்பு செய்து வாழ்க்கையை நடத்த உதவுகிறது.
அரிவாள் போன்ற முதுகுத்தூவி
பிலால் சுறா, பாறைகள் கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள், அடர்ந்த பவழப்பாறை பகுதிகளில் காணப்படும். கற்குகைகள், பாறையின் மேல் பகுதிகள், கடலடி மணல் பீடபூமிகளிலும் இது தங்கும். அந்தி மாலையிலும், அதிகாலை வேளையிலும் இது சுறு சுறுப்பாக இயங்கி இரை தேடும்.
பிலால் சுறாவின் தீனிப்பட்டியல் மிகப்பெரியது. கெழுது, பாரை, மடவை, பேத்தா, கடமாடு, உழுவை, திருக்கை, நண்டு, சிறு சுறாக்கள், கடற்பறவைகள் பிலால் சுறாவின் இரைகளாகும். பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்காத எளிய இரைகளையே பிலால் வேட்டை யாடும். சிறிய பிலால் சுறாக்கள், மற்ற வகை பெரிய சுறாக்களுக்கு இரையாக மாறும். பிலால் சுறாவால் பலநாள்கள் இரை உண்ணாமலும் வாழ முடியும்.
பிலால் சுறாவுக்கு மற்ற இனச் சுறாக்களைப் போல இரைஉயிரின் உடலில் இருந்து வெளிப்படும் மின்துடிப்பை கண்டறியும் திறன் உண்டு. இதனால் மணலுக்குள் பதுங்கியிருக்கும் திருக்கை மீன்களைக் கூட கண்டுபிடித்து மணலைக் கிளறி இது இரையை வெளியே கொண்டு வந்து விடும்.
பிலால் சுறாவின் மூக்கில் காந்த உணர்வுத்திறன் இருப்பதுடன் வாசனை அறியும் திறனும் அதிகம். இத்தனைத் திறமைகள் இருப்பதாலோ என்னவோ பிலால் சுறாவுக்கு கண்பார்வை குறைவு. எனினும் இதன் விழித்திரையில் கிடைமட்டமான ஒரு சிறப்புப் பட்டை உண்டு. இந்த சிறப்புப் பட்டை, கண்களைக் கூசவைக்கும் ஒளியைத் தடுப்பதுடன் வண்ணங்களை இனம் காணவும் உதவுகிறது. இதன் காரணமாக, கலங்கிய கடலில் கூட பிலால் சுறாவால் இரையைப் பிடிக்க முடியும். எதிரியிடம் இருந்து தப்பவும் முடியும்.
பிலால் சுறா தனித்துத் திரியும் சுறா என்றாலும் சில வேளைகளில் 20 மீன்கள் கொண்ட கூட்டமாக இது திரியும். பெண் சுறாக்கள் குட்டி போடக் கூடியவை. ஓர்  ஈற்றில் 1 முதல் 20 குட்டிகள் வரை பிறக்கும். பெண் சுறா, கடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அது பிறந்த இடத்துக்குத் திரும்பிவந்து அங்கே குட்டி ஈனுவது சிறப்பு.
கடல்தரையில் ஓய்வு
பிலால் சுறா கடல்தரையில் ஓய்வெடுக்கும்போது அதன் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை சிலசிறிய மீன்கள் வந்து எடுக்க அனுமதிக்கும். ஆனால், அதேவேளையில் செவுள்கள் வழியாக கடல்நீர் சென்றால்தான் மற்ற சில சுறாக்களைப் போல பிலால் சுறாவாலும் மூச்செடுக்க முடியும். ஆகவே, இது தொடர்ந்து ஓய்வில் இருக்க முடியாது. கண்டிப்பாக நீந்தியாக வேண்டும்.
பிலால் சுறா தயக்கம் மிகுந்தது. தூண்டில் இரை யைக் கண்டால் கூட இது கவனமாகத்தான் இரையை அணுகும். அதுபோல முக்குளிக்கும் மனிதர்களை இது ஒன்றும் செய்யாது. சீண்டினால் மட்டுமே இது மனிதர்களைத் தாக்கும். பெரிய உடல் காரணமாக படகுகளையும் இதனால் தாக்க முடியும். ஆனாலும், பொதுவாக ஆபத்தற்ற சுறா இது.
சிலவகை சுறாக்களை மனிதர்களால் வளர்க்க முடியாது. வளர்க்க முயன்றால் கண்ணாடித் தொட்டியில் தலையை முட்டி முட்டி அவை உயிரை விட்டுவிடும். ஆனால், பிலால் சுறாவை மனிதர்களால் வளர்க்க முடியும். ஆகவே இந்த சுறாவைப் பற்றி இதுவரை நிறைய ஆய்வுகள் நடத்த முடிந்திருக்கிறது.
பிலால் சுறா மனிதர்களால் உண்ணப்படும் சுறா. இதன் உடல் உப்புக்கண்டமாக்கப்பட்டு விற்பனையாகிறது. இதன் தூவிகள் சூப் தயாரிக்கப் பயன்படுகின்றன. பிலால் சுறாவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிக சத்து மிகுந்தது.
எல்லா வகை சுறாக்களையும் போல பிலால் சுறாவும் அருகிவருகிறது. அழிவின் விளிம்பில் இது இருக்கிறது.

Monday, 16 December 2019


அந்திப்பன்னா (Indian Threadfish)

பாரை (Jack) மீன்கள் பலவகை. அவற்றில் 33 இனங்களும் 140 வகைகளும் உள்ளன. அந்த பாரை இன மீன்களில் ஒன்றுதான் அந்திப்பன்னா எனப்படும் Indian Threadfish மீன். இந்த மீனின்
பெயரில் பன்னா என்று இருப்பதையும், மாலைப்பொழுதைக் குறிக்கும் அந்தி என்ற பெயர் இருப்பதையும் கவனித்திருப் பீர்கள்.
பாரை இன மீனாக இருந்தாலும் இந்த மீன் பன்னா என அழைக்கப்படுகிறது. Indian Threadfish மீனைப்போல Indian Thread finfish எனப்படும் மீனும் உண்டு என்பார்கள். நாம் பின்னால் சொன்ன Indian Threadfinfish மீனுக்கு நூல்வாலன் பாரை என்பது பெயர்.
இந்த இரண்டு மீன்களும் ஒன்றுதான் என்பவர்களும் இருக்கிறார்கள். இல்லவே இல்லை என்பவர்களும் இருக் கிறார்கள். நூல்வாலன் பாரைக்கு இந்திய இழைத்துடுப்பு மீன் என்ற பெயரும் உண்டு.
Indian Threadfish எனப்படும் அந்திப் பன்னாவுக்கு கண்ணாடி மீன் என்ற பெயரும் உள்ளது. Alectis Indica என்பது இந்த மீனின் அறிவியல் பெயர். வைர வடிவிலான (Diamond Trevally) என்றும் இந்த மீன் அழைக்கப்படுகிறது.
பாரை இன மீன்கள் அதிகாலை பொழுதிலும், அந்திசாயும் கருக்கல் வேளையிலும்தான் அதிக சுறுசுறுப்போடு இயங்கும். எனவே, பாரை இனத்தைச் சேர்ந்த அந்திப்பன்னாவுக்கு அந்தப்பெயர் ஏன் வந்தது என்பது இப்போது புரிந்திருக்கும்.
(பாரை மீன்களுக்கு காலையந்தியிலும், மாலையந்தியிலும் கண்பார்வை மிக நன்றாகத் தெரியும். இரை மீன்களை இவை எளிதாக வேட்டையாடக் கூடிய நேரம் இதுதான். எனவே தான் காலையந்தியிலும், மாலையந்தியிலும் பாரை மீன்கள் சுறுசுறுப்பாக இயங்கு கின்றன)
அந்திப் பன்னா, பாரை குடும்பத்து மீன்களில் சற்று பெரியவகை மீன். இதன் பக்கவாட்டு உடல் பச்சை கலந்த வெள்ளிநிறமாக ஒளிவிடும். செதிகள்கள் இல்லாதது போலத் தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் உடலில் புதைந்து பதிந்த சிறுபொடிச் செதிள்கள் இந்த மீனுக்கு இருப்பது தெரிய வரும். இந்த செதிள்கள் ஒளியை எதிரொளிப்பு செய்யக் கூடியவை. அதாவது பிரதி பலிக்கக் கூடியவை.
அந்திப்பன்னாவின் முதுகுத்தூவி, அடித்தூவிகளில் நூல் போன்ற இழை நீண்டு மிதக்கும். வளர்ந்த மீன்களுக்கு இந்த நூலிழை இருக்காது. இளம்வயது மீன்கள் இந்த நூலிழைகளுடன் திரிவதால் இவற்றை சொரிமீன்கள் (Box Jellyfish) ன்று நினைத்து எதிரி மீன்கள் கிட்ட நெருங்காது.
அந்திப்பன்னாவில் இளம்மீன்களே வைரவடிவத்துடன் விளங்கும். வயது ஏறஏற மீனின் வடிவம் சற்று மாறிவிடும்.
அந்திப் பன்னாவைப் போல அச்சுஅசலாக அட்லாண்டிக் கடற்பகுதியில் வாழும் மீன் ஒன்றும் இருக்கிறது. அந்திப் பன்னாவுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் போல இருக்கும் அந்த மீனை ‘லுக்டவுன்’ (Lookdown) என அழைப்பார்கள். மெல்லிய தட்டையான உடல் கொண்ட இந்த மீனும் பாரை குடும்பத்து மீன்தான். 8 முதல் 12 அங்குல நீளத்துக்கு இது வளரக்கூடியது.
இந்த மீனுக்கு வழக்கத்துக்கு மாறாக உயர்ந்த நெற்றி உண்டு. முகத்தின் அடிப்பகுதியில் வாய் இருக்கும். கண்கள் உயரத்தில் இருக்கும். மேல் இருக்கும் இந்த கண்களால் கீழே பார்ப்பதால் இந்த மீனுக்கு ‘லுக்டவுன்’ (Lookdown) என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
வெள்ளி நிறமான பக்க உடல் கொண்ட இந்த மீனின் முதுகுத்தூவி நூலிழை வால்தூவிகளை விட சற்று நீண்டிருக்கும். இந்த மீனின் அடித்தூவி நூலிழை, முதுகுத்தூவி நூலிழையுடன் ஒப்பிடும் போது சற்று நீளம் குறைவானது.

Saturday, 14 December 2019


சீலா (Barracuda)

சீலா
பெருங்கடலின் பெரிய வேட்டையாடி மீன்களில் ஒன்று சீலா (Barracuda). சீலா என்பது குறிப்பிட்ட ஒரு மீனைக் குறிக்காது. சீலா என்பது உண்மையில் Sphyraena என்ற இனத்தைச் சேர்ந்த பலவகை மீன்களைக் கூட்டாகக் குறிக்கும் பெயர்.
சீலா மீன், கடலுக்கடியில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் டார்பிடோ (Torpedo) ஆயு தத்தைப் போன்ற உடலமைப்பைக் கொண்டது. கடல்நீரை வெட்டிக்கிழித்துக் கொண்டு முன்னேற சீலாவின் இந்த டார்பிடோ உடல்வாகு மிகவும் பயன்படுகிறது.
சீலாவின் உடல், இருமுனைகளிலும் சற்று ஒடுங்கி, நடுப்பகுதி சற்று தடிமனாகவும் அமைந்திருக்கும். தலை சற்று நசுங்கியதைப்போல தோற்றம் தந்து முன்னோக்கி நீண்டிருக்கும். வாயின் கீழ்முனை மேல்முனையைவிட சற்று பயமுறுத்தும்படி நீண்டிருக்கும்.
சீலா மணிக்கு 35 மைல் வேகத்தில் நீந்தக்கூடியது. வேகத்தில் மாகோ (Mako) சுறாவுடன் சீலா போட்டிபோடக் கூடியது. மிகநீண்ட தொலைவுக்கு வேகம் குறையாமல் சீலாவால் நீந்த முடியும்.
கடலில் மிகமெதுவாக நீந்தி இரைதேடும் சீலா, இரையைக் கண்டதும் திடீர் வேகம் எடுக்கும். சீலாவுக்கு மிகக் கூரிய கண்பார்வை உண்டு. கண்பார்வையை நம்பியே சீலா கடலில் வேட்டையாடுகிறது.
கூரிய பார்வை
பெரிய மீன்களை விட வெள்ளிநிற சிறிய மீன்களே அதிக அளவில் ஒளியை எதிரொளிப்பு (பிரதிபலிப்பு) செய்து சீலாவின் கண்களில் எளிதாகப் படும். இரையை நோக்கி பாயும்போது வாயைத் திறந்து கொண்டு பற்கள் பளிச்சிட சீலா பாயும்.
சீலாவின் தாடையில் ஈரடுக்குப் பற்கள் உள்ளன. வெளிவரிசையில் உள்ள பற்கள் சிறிய ஆனால் கூர்மையான பற்கள். இரையைத் துண்டுதுண்டாகக் கிழிக்க இந்தப் பற்கள் உதவு கின்றன. உள்வரிசைப் பற்கள் நீளமானவை. இரை தப்பிச் செல்லாமல் பிடித்துக் கொள்ள இந்தப் பற்கள் உதவி புரிகின்றன.
சிறிய சீலாக்கள் பொதுவாக இரையை அப்படியே விழுங்கிவிடும். பெரிய சீலாக்கள்தான் இரையைக் கடித்து உண்ணும். சீலாவின் வாய் நாம் நினைப்பதை விட பெரியதாக விரியக் கூடியது. ஒரு களவா மீனைக் கூட சீலாவால் விழுங்கிவிட முடியும்.
சீலாக்கள் பசிபிக், அட்லாண்டி, இந்தியப் பெருங்கடல், செங்கடல், கரிபியன் கடல்பகுதிகளில் காணப்படுகின்றன. பெரிய இன சீலா 14 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது.
சீலா, மின்னுகிற பொருளால் கவரப்படும் என்பதை முன்பே பார்த்தோம். கடலில் முக்குளிப்பவர்கள் உலோகப் பொருள்கள் எதையும் வைத்திருந்தால் அல்லது அணிந்திருந்தால் சீலா அதனால் கவரப்படும். ஒரு மாதிரிக்காக அதுபோன்ற பொருளை சீலா கடித்துப் பார்ப்பதுண்டு. கடித்த பொருள் உணவாகப் பயன்படாது என்று தெரிந்தால் ஒரு கடியுடன் சீலா நிறுத்திக் கொள்ளும்.
மின்னுகிற பற்கள்..
சீலாக்கள் வேட்டையாடும் கொல்லுண்ணிகள் என்றா லும், கடலில் சிந்திச்சிதறும் இரைகளைத் தின்னும் பழக்கமும் சில இன சீலாக்களுக்கு உண்டு. முக்குளிக்கும் மனிதர்களைக் கண்டால், அவர்களை பெரியதொரு மீனாகக் கருதி, அவர்களிடம் இருந்து ‘சிந்தும்’ இரையைத் தின்ன சீலா முக்குளிப் பாளர்களைப் பின்தொடர்வதுண்டு.
சீலா அரிதாக மனிதர்களைத் தாக்கும். கடலுக்குள் இறங்கி நின்று குத்தீட்டியால் குத்தி மீன் பிடிப்பவர்கள் சிலரை சீலா தாக்கியதுண்டு. அப்போது சீலா குறிவைத்து கடிக்க முயன்றது மனிதர்களை இல்லை. அவர்கள் பிடித்து மடியில் இறுக்கி வைத்திருந்த மீன்களை!
 (சீலா பற்றிய பதிவுகள் நமது வலைப்பூவில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 8, 2016, ஏப்ரல் 10. 2019)

பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)

1257. காக்கச் சுறா, 1258. குணா சுறா, 1259. குன்னச்சுறா, 1260. பாவச் சுறா, 1261. பக்கோட்டி அல்லது பக்குவெட்டி, 1262 பன்னாவில் அந்திப் பன்னா, 1263. காக்கா செம்மல் (கண்ணாடி மீன்), 1264. பேய்க் கெண்டை. (தொடரும்).