Sunday, 2 December 2018


தேங்காய் நண்டு (Giant Robber Crab) 



ஆர்த்ரோபாட்ஸ் (Arthropods) என்ற கணுக்காலிகள் கூட்டம் பலவகைப் பட்டது. கால்பகுதிகள் தனித் தனியாக இணைந்திருக்கும் முதுகெலும்பில்லாத உயிரினக் கூட்டம் இது. அனைத்துவகை பூச்சிகள், நண்டுகள், தேள்கள்.. ஏன் சிலந்திகள் கூட இந்த கூட்டத்தில் அடங்கும்.
இந்த கணுக்காலிகள் கூட்டத்தைச் சேர்ந்த ஒர் உயிரினம்தான் தேங்காய் நண்டு. Birgus latro என்பது இதன் அறிவியல் பெயர். நிலத்தில் வாழும் கணுக்காலி உயிர்களில் மிகப்பெரியது தேஙகாய் நண்டுதான்.
தேங்காய் நண்டு இரண்டு முதல் மூன்றடி வரை நீளம் கொண்டது. ஒருவகையில் இது முனிவன் நண்டு அல்லது துறவி நண்டின் (Hermit crab) வகையைச் சேர்ந்தது.
முனிவன் நண்டை உங்களுக்குத் தெரியும்தானே? கைவிடப்பட்ட நத்தைக் கூடு ஒன்றை தனது வீடாக்கிக் கொண்டு, கூட்டை சுமந்தபடி வேகவேகமாக எட்டுவைத்து நடக்கும் ஒரு நண்டு, முனிவன் நண்டு.
தேங்காய் நண்டு, முனிவன் நண்டுக்கு உறவுக்கார நண்டு என்றாலும் மூன்றடி வரை நீளமும், மூன்று முதல் நான்கு கிலோ வரை எடையும் கொண்டது. இவ்வளவு பெரிய நண்டாக இருப்பதால் இதற்கேற்ற அளவில் பெரிய நத்தைக்கூடு எதுவும் வாடகைக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே, கூடு எதையும் இரவல் பெறாமல் தேங்காய் நண்டு தனித்து இயங்குகிறது. என்றாலும் முதிர்ச்சி அடையாத இளம்பருவத்தில் இதுபோன்ற சிறு ஓட்டுக்கூடு ஒன்றை பாதுகாப்பு கேடயமாகக் கொண்டு தேங்காய் நண்டு வாழ்வதுண்டு.
தேங்காய் நண்டின் ஓடு கடினமானது. மேலும் நம்மைப்போல காற்றை நேரடியாக தேங்காய் நண்டால் உள்ளிழுத்து மூச்சுவிட முடியும். நன்னீரைக் குடித்து உயிர் வாழவும் முடியும். இந்தத் திறமைகள் காரணமாக கடலை விட்டு குறிப்பிட்ட தொலைவு வரை நிலத்தில் தேங்காய் நண்டால் அலைந்து திரிய முடியும். முட்டையிட மட்டும் இது மீண்டும் கடலைத்தேடி வந்துவிடும்.
நிலத்தில் வாழப்பழகிய நண்டு என்பதால் கடலில் தேங்காய் நண்டு நீண்டநேரம் முக்குளித்தபடி இருக்க முடியாது. அப்படி இருந்தால் சில மணிநேரங்களில் அது நீரில் மூழ்கிப் போக வாய்ப்புள்ளது. தேங்காய் நண்டை நீண்டநேரம் நாம் கடல்நீரில் அமிழ்த்திப் பிடித்தாலும் அது இறந்து விடும்.
மற்ற நண்டுகளைப் போல தேங்காய் நண்டுக்கும் பத்து கால்கள். இதன் கால்கள், குறிப்பாக கடிகால்கள் வலிமையானவை. இதன்மூலம் தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறித்துப் போட தேங்காய் நண்டால் முடியும். தேங்காய் நாரை உரித்து, அதைத் துளையிட்டு உள்ளிருக்கும் பருப்பை தின்னவும் தேங்காய் நண்டால் முடியும். இந்தவகை நண்டுக்கு திருட்டு நண்டு (Robber crab) என்ற பெயர் வர இதுதான் காரணம். (அது சரி, மனிதர்களுக்கு உடைமையான  பொருட்களை இதர உயிர்கள் எடுத்துக் கொண்டால் அது திருட்டுதானே? தேனீயின் தேன், பசுவின் பால் போன்ற மற்ற உயிர்களின் உடைமைகளை மனிதர்கள் எடுத்துக் கொண்டால் அது திருட்டு ஆகாது).
தேங்காய் நண்டு, தேங்காய்களை மட்டுமின்றி, அழுகிய எலி, நண்டு போன்ற உயிரினங்கள், சிலவகை பூச்சிகள், கடலின் கழிவுகள், பழங்கள், உதிர்ந்த இலைகள், சிலவகை தாவரங்களையும் உணவாக உண்ணும். இரவில் மட்டுமே தேங்காய் நண்டு வெளியே வரும். ஏனைய பொழுதுகளில் மரப்பொந்துகளில் அல்லது மணலில் குழிதோண்டி அதனுள் தங்கி இது ஓய்வெடுக்கும். குழிக்குள் தேங்காய் நார்களைப் பரப்பி மென்மையான மெத்தையாக்கிக் கொள்ளும்.
தேங்காய் நண்டுகள் கடலில் முட்டையிடும் என்பதை முன்பே பார்த்தோம். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் (Zoea larvae), தொடக்கத்தில், தன்னிச்சையாக கடலில் நீந்தித் திரியும். அதன்பின் சிப்பி அல்லது சங்குகளுக்கு நுழைந்து கொண்டு இவை உயிர் வாழும். ஓரளவு வளர்ந்து பெரிதான பிறகு, நிலத்தில் இவை குடியேறி வாழத் தொடங்கும்.
தேங்காய் நண்டுகள் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள குருசடைத் தீவு, அப்பாத் தீவு, முயல்தீவு, நல்ல தண்ணீர்த் தீவு போன்ற பல தீவுகளில் வாழ்கின்றன. அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்களிலும் இவை உள்ளன.
தென்னை மரங்களில் ஏறி காய்பறித்துப்போடும் தேங்காய் நண்டுகள் மரத்தில் இருந்து இறங்கும்போது தரை தென்பட்டதும் குறிப்பிட்ட அளவு உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் பழக்கம் கொண்டவை. இதனால், அந்தமான் தீவுகளில் உள்ள தென்னை விவசாயிகள், தென்னை மரங்களில் பாதி உயரத்தில் ஓலைகளை விரித்துக் கட்டி அதில் மணல் பரப்பி வைத்து விடுவார்கள். தேங்காய் நண்டு மரத்தில் இருந்து இறங்கும்போது, இருட்டில், இந்த ஓலையில் உள்ள மணலை பார்த்துவிட்டு, குறிப்பிட்ட தூரத்தில் தரை இருப்பதாக தப்புக் கணக்குப் போட்டு குதித்துவிடும். அப்படி குதித்து அதிக உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் அவை திக்குமுக்காடி தவிக்கும்போது சத்தம் கேட்டு ஓடிவரும் விவசாயிகள் நண்டை அடித்துக் கொன்று விடுவது வழக்கம்.

நிகோபார் தீவுகளில் உள்ள ஒருவகை நண்டுதின்னி குரங்கு (Macaca fusicularis), தேங்காய் நண்டுகளை கொன்றுதின்னும் என அங்குள்ள பழங்குடி மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது உறுதியான தகவல் இல்லை.
தேங்காய் நண்டுக்கு மனிதர்களால் மட்டுமின்றி காட்டுப்பன்றி, சிலவகை எலிகளாலும் ஆபத்து உண்டு.
தேங்காய்களைப் பறித்து உண்பதாலும், தேங்காய் நண்டுகளின் இறைச்சி மருத்துவக்குணம் கொண்டது என்ற நம்பிக்கையாலும் இந்த வகை நண்டுகள் அதிக அளவில் கொல்லப்படுகின்றன. அரிய இந்த உயிரினம் தற்போது அழியத் தொடங்கி உள்ளது.
தேங்காய் நண்டு இதன் இறைச்சிக்காக மட்டுமின்றி அதன் உடலில் இருந்த எடுக்கப்படும் எண்ணெய்க்காகவும் கொல்லப்படுகிறது. தேங்காய் நண்டின் சதையில் உள்ள எண்ணெய் உண்ணத்தகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்காய் நண்டின் இறைச்சி உண்ணத்தகுந்தது என்றாலும், கடற்கழிவுகள், அழுகிய  உயிர்கள், நச்சேறிய தாவரங்களை இது உண்ணுவதால் சிலவேளைகளில் தேங்காய் நண்டின் இறைச்சி நஞ்சாக மாறவும் வாய்ப்புள்ளது.

No comments :

Post a Comment