கைகாட்டி நண்டு (Fiddler Crab)
பெரும்புகழ் பெற்ற பிடில் இசைக் கலைஞர் போல, தனது பெரிய கடிகாலை உயர்த்திக் கொண்டு உலவும் ஒரு நண்டின் பெயர் கைகாட்டி நண்டு. இதன் வண்ணம்மிக்க பெரிய கடிகால், பார்வைக்கு பிடில் இசைக்கருவி போல இருப்பதால், இதற்கு பிடில் நண்டு என மேற்கு உலகத்தினர் பெயர் வைத்து விட்டனர்.
கைகாட்டி நண்டில் ஏறத்தாழ 100 வகைகள் உள்ளன. Uca என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்த கைகாட்டி நண்டுகள் கடல்நீரிலும், கடலோரமாக நிலத்திலும் வாழக் கூடியவை.
கடல்நீருக்குள் மூச்சுவிட இந்த நண்டுக்கு செவுள்கள் (Gills) உள்ளன. இதுபோக இலவச இணைப்பாக ஒரு நுரையீரலும் உண்டு. இதனால், கரையிலும் கூட .. கைகாட்டி நண்டால் வாழ முடியும். ஈரமான தரை இருந்தால்கூடபோதும். மாதக் கணக்கில் கைகாட்டி நண்டு அங்கே வாழக் கூடும்.
கைகாட்டி நண்டின் அடையாளமே அதன் ஒரு கடிகால் மட்டும் பெரியதாக இருப்பது
தான். ஆண் நண்டுகளுக்கு மட்டுமே இப்படி அளவுக்கு மீறி பெருத்த பெரிய ஒரு கடிகால் இருக்கும். பெண் நண்டுகளுக்கு இப்படி இருக்காது.
இந்த பெரிய கடிகால், ஒவ்வொரு வகை நண்டுக்கும் ஒவ்வொரு விதமான நிறத்தில் கண்ணை கவரக் கூடியதாக இருக்கும். இந்த பெரிய கடிகால் கிட்டத் தட்ட நண்டின் உடல்நீளத்துக்கு சமமாக இருக்கும்.
இந்த பெரிய கடிகாலால் கைகாட்டி நண்டுக்கு என்ன பயன் என்கிறீர்களா? உண் பதற்கு இந்த பெரிய கடிகால் பெரிதாக உதவாது. மற்ற நண்டுகளிடம் சண்டையிடக் கூட இது பயன்படாது. பிறகு எதற்குத்தான் இந்த பெரிய கடிகால் என்கிறீர்களா?
தனது நிலப்பரப்புக்குள் ஊடுருவும் மற்ற நண்டுகளை இந்த பெரிய கடிகால் மூலம் கைகாட்டி நண்டு எச்சரிக்க முடியும். பெரிய கடிகாலை தரையில் தட்டி மற்ற நண்டுகளுக்கு இது எச்சரிக்கை விடுக்கும்.
இந்த பெரிய கடிகாலின் மற்றொரு பெரிய பயன், பெண் நண்டுகளை கவரப் பயன் படுவதுதான். பெண் நண்டைக் கண்டால் ஆண் நண்டு இந்த பெரிய கடிகாலை உயர்த்தி விந்தையான நடன அசைவுகளை மேற்கொள்ளும். விநோதமான உடல் மொழியைக் கையாளும்.
அதில் மயங்கிப்போகும் பெண் நண்டை, ஆண் நண்டு தனது வளைக்குள் அழைத்துச் செல்லும்.
இந்த ‘கடிகால் நடன அசைவுகள்‘ ஒவ்வொரு வகை, கைகாட்டி நண்டுக்கும் வேறு படும். சற்று குழப்பமான ஒரு சைகை மொழி இது. ஒருவகையில் இந்த நடன அசைவு, குறிப்பிட்ட ஒரு அந்த வகை நண்டு கூட்டத்தின் கடவுச்சொல் (Password) என்றும் கூட சொல்லலாம். கைகாட்டி நண்டுகளில் ஏறத்தாழ 100 வகைகள் இருப் பதால் இந்த நண்டு இனங்களுக்குள் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், ஒவ் வொரு வகை நண்டும் ஒவ்வொருவித கடிகால் நடன அசைவுகளை கைக்கொள் கின்றன.
கைகாட்டி நண்டுகள் கடற்கரையில், சேற்றுப் பாங்கான நிலத்தில் இரண்டடி ஆழமான வளை தோண்டி அதில் வாழும். உறங்க, இனப்பெருக்கம் செய்ய, ஒளிந்து கொள்ள இந்த வளை பயன்படும்.
கைகாட்டி நண்டு பகலில் நடமாடும். இரவில் வளைக்குள் உறங்கும். குளிர்காலத்தில் வளைக்குள் இவை நீண்டகால (Hibernate) துயில் கொள்ளும். வளைக்குள் கடல்நீர் புகும் என்று தெரிந்தால் வளையின் வாசலை இந்த நண்டு சேறு மற்றும் மணலால் அடைக்கும்.
அழுகிய பாசிகள், இறந்த கடலுயிர்களின் உடல்கள் போன்றவை தான் கைகாட்டி நண்டின் இரை. அதுபோல மடையான் எனப்படும் கொக்குக்கும் இந்த நண்டு இரையாகும். ஆபத்து நேரிட்டால் மணலில் புதைந்து கைகாட்டி நண்டு மறைந்து கொள்ளும். ஆபத்து விலகிய பின் வெளியே வரும்.
கைகாட்டி நண்டால் நன்னீரில் வாழ முடியாது. கடற்பகுதிகளில், கடற்கரைகளில் மட்டுமே இவை காணப்படும். கைகாட்டி நண்டால் முன்னும் பின்னும் நகர முடியாது, பக்கவாட்டில் இது நகர்ந்து செல்லும்.
கைகாட்டி நண்டின் பெரிய கடிகால் முறிந்து விட்டால் அதனால் பிறழ்ச்சனை எதுவு மில்லை. உடைந்த பெரிய கடிகால் மீண்டும் வளர்ந்து விடும். எல்லா நண்டு களையும் போல, கைகாட்டி நண்டும் தன் உடல்கூட்டைக் கழற்றும். 8 வாரங்களுக்கு ஒருமுறை இந்த உடற்கூடு கழற்றும் வேலை நடைபெறும். பெரிய கடிகாலை இழந்துவிட்ட கைகாட்டி நண்டு, இப்படி 3 முறை உடற்கூடுகளை மாற்றி, அதன்மூலம் புதிய பெரிய கடிகாலைப் பெற்றுவிடும். பழைய கடிகாலின் அளவில்
ஏறத்தாழ 95 விழுக்காட்டை புதிய கடிகால் எட்டிப்பிடித்து விடும்.
கைகாட்டி நண்டுகளின், பெரிய கடிகால் உடைந்து போனால், மறுபக்கம் உள்ள சிறிய கடிகாலைக்கூட அவை பெரிய கடிகாலாக வளரச் செய்யும் (!)
No comments :
Post a Comment