Tuesday, 25 December 2018


கடலுக்கு அடியில் தோட்டம்

நிலாவில் அல்லது விண்வெளியில் இருந்து நமது புவிக்கோளத்தைப் பார்த்தால் என்னென்ன தெரியும்? நீண்டுகிடக்கும் சீனப் பெருஞ்சுவர் தெரியும். நீலக்கடல்கள் தெரியும். அதில் உள்ள பவழப்பாறைகளும் தெரியும்.
ஆம். ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீப் பவளப்பாறைகள் புவிக்கு அப்பால், 2 லட்சத்து 38 ஆயிரத்து 850 மைல் தொலைவில் இருந்துகூட விண்வெளி வீரர்களின் கண்களுக்குத் தெரியக் கூடியவை. இந்த கிரேட் பேரியர் ரீப் பவளப் பாறைகளின் வயது என்ன தெரியுமா? ஏறத்தாழ 18 மில்லியன் ஆண்டுகள்!
கடலடியில் இயற்றை கட்டிவைத்த கட்டுமானம் போல இருக்கும் பவழப்பாறைகள், உண்மையில் ஒரு சிறியவகை உயிர்கள். ஒரு கடல்சாமந்திப்பூ அளவுக்கு அல்லது ஒரு சிறுகுழந்தையின் பெருவிரல் அளவுள்ள சிறிய உயிர்கள்தான் பவழப்பாறைகளை வடிவமைத்துக் கட்டிய பொறியாளர்கள்.
இடம்விட்டு இடம் நகர முடியாமல் ஒரேஇடத்தில் கட்டிப்போட்டதுபோல வாழும் இந்த சின்னஞ்சிறு உயிர்கள், மென்மையான உடல்களைக் கொண்டவை. தங்களது மென்மையான உடலைக் காப்பாற்றிக் கொள்ள, இந்த பவழ உயிர்கள் கடல்நீரில் இருந்து சுண்ணாம்புச் சத்தைப் பிரித்தெடுத்து கால்சியம் கார்பனேட்டை சுரந்து தங்களைச்சுற்றி ஒரு கடினமான, பலமான வெளிக்கூடு ஒன்றைக் கட்டுகின்றன.
இப்படி குடிசைத் தொழில்போல ஒரு சுண்ணாம்புக்கட்டியைத் தயாரித்து அந்த சுண்ணாம்புக் குகைக்குள் இவை உயிர்வாழ்கின்றன. சிறிய உணர்கொம்புகள் மூலம் சுற்றுப்புற நீரைத் துழாவி தங்களுக்குத் தேவையான இரையை இவை சேகரித்துக் கொள்கின்றன.
இந்த பவழ உயிர்கள் இறந்தபின் அவை சுண்ணாம்புக்கூடுகளின் சுரங்கம் போல ஆகிவிடுகிறது. கடலில் உள்ள இந்த கல்பவழங்கள் எனப்படும் தங்களது முன்னோர் களின் உடற்கூடுகள் மீது அவற்றின் சந்ததிகள், புதிதாக  தங்களது உடற்கூட்டையும் எழுப்புகின்றன. இப்படி பலநூற்றாண்டு காலமாக நடந்து வருவதால், பவழப்பாறைகள் மெல்ல மெல்ல வளர்கின்றன’.
பவழப்பாறைகள் கூம்புகள், குகைகள், கோபுரங்கள், தூண்கள், பள்ளத்தாக்குகள், குகைப் பாதைகள், போல பல விந்தையான வடிவங்களைக் கொண்டவை. 
இந்தப் பவழப்பாறை உயிர்கள் இருவிதமாக உணவு உட்கொள்கின்றன. சிலவகை பவழ உயிர்கள், கடல்நீரில் உள்ள நுண்ணுயிர்களை வடிகட்டி உண்டு வாழ்கின்றன. சில வகை பவழப் பாறைகள், சூவுசான்தெல்லி (Zooxanthellae) என்ற பச்சை நிற ஒரு செல் தாவர உயிரினத்தின் உதவியை நாடுகின்றன.
இந்த ஒரு செல் பாசியால், சூரிய சூரிய ஒளியில் இருந்து தனக்கு உணவு உற்பத்தி செய்ய முடியும். இந்த உணவின் பெரும்பங்கை பவழப்பாறைகள் எடுத்துக் கொள் கின்றன. பதிலுக்கு இந்த பாசியை தங்கள் கூட்டுக்குள் வைத்து பாதுகாப்பு அளித்து, அந்த பாசிக்குத் தேவையான கரியமில காற்றை பவழப்பாறைகள் அளிக்கின்றன. இதனால் இருதரப்பும் பலனடைகிறது.
மேலும் பவழப்பாறைகளுக்கு கண்கவர் வண்ணங்களைத் தருவது இந்த பாசிகள்தான். இல்லாவிட்டால், பவழப்பாறைகள் நிறமற்று வெளிறிப்போய்தான் காட்சிதர வேண்டியிருக்கும்.
சரி. பவழப்பாறைகளால் என்ன நன்மை?
மழைக்காடுகள் நமது புவிக்கோளத்துக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கடல்வாழ் பவழப்பாறைகள், புவிக்கோளத்துக்கும், அதில் வாழும் மனிதகுலமாகிய நமக்கும் முக்கியம். புவியின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகள் என பவழப்பாறைகளைக் குறிப்பிடலாம்.
கடலோரம் கடற்கரை என்ற பெயரில் பெரும் மணல்வெளி இருக்கிறது அல்லவா? இந்த மணல்வெளிகள் தோன்ற, பவழப்பாறைகளும், அதில் வாழும் கிளிஞ்சான் (Parrot fish) வகை மீன்களுமே காரணம். தீவுகள், கடற்கழிகள், மாங்குரோவ் போன்ற கடலோரக் காடுகள் தோன்றவும் பவழப்பாறைகள்தான் காரணம். இந்த பவழப் பாறைகள்தான் கடல் அலைகளின் வேகத்தைத் தடுத்து, கடலரிப்பைத் தடுக்கின்றன. புயல், ஆழிப்பேரலையான சுனாமி போன்றவை தாக்கும்போது கரைப்பகுதியில் அவை அதிகம் சேதம் விளைவிக்காத வகையில் பவழப்பாறைகள்தான் தடுத்து காக்கின்றன. கடற்புல்வெளிகள், கடற்கழிகளை காப்பதும் பவழப்பாறைகள்தான். பவழப்பாறைகள் மட்டும் இல்லாவிட்டால், நமது உலக உருண்டையில் மாலைத்தீவு, கிரிபடி எனப்படும் கிரிபாஸ், துவலு, போன்ற தீவு நாடுகளே இருக்காது. அவை எப்போதோ துடைத்தெறியப்பட்டிருக்கும்.
நகரின் நடுவே நாம் ஓய்வெடுக்க பூங்கா இருக்கிறது அல்லவா? அதுபோல, கடலில் பலவகை மீன்களுக்கு உள்ள பொழுதுபோக்கு பூங்கா பவழப்பாறைகள்தான். இளம் மீன்குஞ்சுகளின் காப்பகமாக இருந்து அவற்றைப் பேணி வளர்ப்பதும் கூட பவழப் பாறைகள்தான்.
கடலடியில் உள்ள மொத்தப்பரப்பளவில் பவழப்பாறைகளின் பங்கு வெறும் 0.2 முதல் 1 விழுக்காடுதான். அதாவது கடலின் மொத்தப் பரப்பளவில் 2 லட்சத்து 85 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களுக்கு பவழப்பாறைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இப்படி பரப்பளவில் சிறியதாக இருந்தாலும்கூட, ஒரு சதுர கி.மீ. பரப்பளவுக்கு 5 முதல் 15 டன் கடலுணவுகளை பவழப்பாறைகளால் தர முடியும்.
உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கடலுயிர்களில் 25 விழுக்காடு உயிர்கள், உணவுக்காகவும், பாதுகாப்புக்காவும், இனப் பெருக்கத்துக்காகவும் பவழப்பாறைகளையே நம்பியுள்ளன. பவழப்பாறைகளில் 4 ஆயிரம் வகை மீன்கள், 700 வகை பவழங்கள், இன்னும் கடல்பூண்டுகள், கடல்சாமந்திகள், இறால், மூரை, மட்டி போன்ற பல ஆயிரம் தாவரங்கள், கடலுயிர்கள் வாழ்கின்றன.
பவழப்பாறைகள் உயிர்வாழ சூரிய ஒளி வேண்டும். எனவே, ஆழம் குறைந்த கடல் பகுதிகளையே பவழப்பாறைகள் நம்பியுள்ளன. ஆனால், புவிவெப்பமயமாதல் காரணமாக கடல்நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பவழப் பாறைகள் நீரின் அடிஆழத்தில் மூழ்கி, அழிவை எட்டி வருகின்றன. சூரிய ஒளியில் இருந்து உணவுத் தயாரிக்கப் பயன்படும் பாசிக்கு  பவழப்பாறைகளில் இனி வேலை இல்லை என்பதால் அவை பவழப்பாறைகளை விட்டு விலகிச் செல்கின்றன. இதனால், பவழப்பாறைகள் அவற்றின் வண்ணத்தையும் வனப்பையும் இழந்து வெளிறி வெண்மை நிறமாக மாறும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
புவிக்கோளத்தைக் காக்க காடுகளை மட்டுமின்றி, கடலடி தோட்டங்களான பவழப் பாறைகளையும் காக்க வேண்டியது நமது கடமை.

No comments :

Post a Comment