Friday, 21 December 2018


சங்குக் குளியல்

முத்துக்குளிப்பு போலவே தமிழக கடற் கரைகளில் நடக்கும் மற்றொரு குளிப்பு சங்குக் குளிப்பு. கடலடியில் சங்கு விளையும் நிலம் என்றே சில இடங்கள் உள்ளன. அங்கு சங்குக்காக சங்கு குழியாட் கள் மூழ்கி சங்கெடுப்பார்கள்.
இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி கடலில் தமிழகக் கரை வரை ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து கொள்ளுங்கள். இந்த கற்பனைக் கோட் டுக்கு வடக்கே உள்ள சங்குகள் பட்டி என அழைக்கப்படும். குட்டையாக சற்று தட்டையான தலையை இந்த சங்குகள் கொண்டிருக்கும். இந்தக் கற்பனைக் கோட்டுக்கு தெற்கே உள்ள சங்குகள் நீளமானவை. சற்று கூரிய தலையை இவை கொண்டிருக்கும். இவை பச்சேல் என அழைக்கப் படுகின்றன.
சங்குகள் உயிரோடு இருக்கும்போது, பச்சை நிற மேற்பரப்புத் தோல் ஒன்று சங்கை மூடியிருக்கும். சங்கை வேட்டையாட வரும் சுறா, திருக்கைகளிடம் இருந்து சங்கைக் காப்பாற்றுவது இந்த மேற்தோல்தான். சங்கின் மேலுடல் அரிக்கப்படாமல் காப்பதும் இந்த மேற்தோல்தான். மணலில் புதைந்து சங்கு உருமறைப்பு செய்து ஒளிந்து கொள்ளவும் இந்த மேல் தோல்தான்தான் பயன்படுகிறது.
சங்கு இறந்ததும், இந்த மேல்தோல் உரிந்து கொள்ளும். அப்போது சங்கு அதன் பாரம்பரிய வண்ணமான வெண்மை நிறத்துக்கு மாறும். இந்த வகை இறந்த சங்குகள், கிட்டத்தட்ட புதைபடிவ சங்குகள் போன்றவை. இறந்து, நினைவுச்சின்னங்கள் போல மாறிவிட்ட இந்த சங்குகளை ஆதாம் சங்குகள் என மீனவர்கள் குறிப்பிடுவார்கள். கடலில் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக இந்த ஆதாம் சங்குகள் காணப்படும்.
கடலடியில் பாறைநிலங்களில் இருக்கும் சங்குகளே அதிக விலைமதிப்புடையவை. கடற்புற்களின் நடுவே இருந்து எடுக்கப்படும் சங்குகள் பெரிய அளவில் விலை போகாது. கடலில் மூழ்கி எடுக்கப்படும் சங்குகள் அவற்றின் தன்மைக்கேற்ப விலை போகும். கரடு, சூத்தை, கூழை என சங்குகள் சில குற்றங்குறைகளுக்கும் உள்ளாகும்.
இளம் சங்குகளை சுறா, திருக்கை, நண்டு போன்றவை கடிப்பதுண்டு. அப்படி கடிபட்ட தடம், வடு, விழுப்புண் இருந்தால் அந்தச் சங்குகள் கரடு, சுளுக்கடி, நண்டுக்கடி என கருதப்பட்டு ஒதுக்கப்படும். காரச்சங்கு போன்றவற்றால் துளையிடப்பட்ட சங்குகள், சூத்தை எனக் கருதப்படும். வழக்கத்தை விட உயரம் குறைவான சங்குகள் கூழை எனக் கருதப்பட்டு அவையும் பெரிய அளவில் விலைபோகாது.
சங்குகளில் விலை உயர்ந்த சங்கு வலம்புரிச் சங்கு (Turbinella pyrum). மன்னார் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே உள்ள பட்டி சங்குகள், தெற்கே உள்ள பச்சேல் சங்குகள் இவை இரண்டிலும் கூட வலம்புரிச் சங்குகள் கிடைக்கக்கூடும். 2 லட்சம் சங்குகளில் ஒன்றுதான் அரியவகை வலம்புரிச் சங்காக மாறும்.
சங்குச் சதையை உண்ணலாம். சங்கை அறுத்து வளையல்கள் செய்யலாம். சங்கு, உணவாக, ஆபரணமாக மட்டுமின்றி ஆயுதமாக, இசைக் கருவியாக, மருந்தாக, மத வழிபாட்டுப் பொருளாக பலவகைகளில் மனிதர்களுக்குப் பயன்தருகின்றன.

No comments :

Post a Comment