Friday, 28 December 2018



கடலின் தோட்டக்காரர்கள்

கடலில்,  வெறும் கண்களுக்குத் தட்டுப்படாத, நுண்ணோக்கி மூலமாக மட்டுமே பார்க்கக் கூடிய சிறியவகை மிதவைத் தாவரங்கள் ஏராளம். பைடோபிளாங்டன் (Phytoplankton) என்பது இவற்றுக்குப் பெயர்.
கவுர் என அழைக்கப்படும் இந்த மிதக்கும் நுண்பாசிகளைப் பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில் எழுதியிருக்கிறோம். (ஜூன் 2016) கடலின் மேற்பரப்பில் மிதக்கும் இந்த நுண் பாசித்துணுக்குகள்தான் நமது புவிக்கோளத்தில், நாம் உயிர்வாழத் தேவையான உயிர்க் காற்றில் சரிபாதியை உற்பத்தி செய்கின்றன. அதிக அளவில் உயிர்க்காற்றை உருவாக்கி அதன்முலம் புவிவெப்பமயமாவதைக் குறைப்பதும் இந்த நுண்பாசிகள்தான்.
கடலின் உணவுச் சங்கிலியில் முதல் கண்ணியாக விளங்கும் இந்த நுண்பாசித் துணுக்குகள், கடலில் செழித்து வளர, நைட்ரஜனும் இரும்புச் சத்தும் தேவை. இதன்மூலம் இந்த மிதவை உயிர்கள், சூரிய ஒளி மற்றும் கடல்நீரில் உள்ள கரியமில காற்றைப் பயன்படுத்தி, தமக்கான உணவைத் தேடிக் கொள்கின்றன. உயிர்க் காற்றையும் உருவாக்குகின்றன.
ஒரு தாவரம் வளர உரம் வேண்டும் அல்லவா? அந்த வகையில் இந்த நுண்ணியிர் தாவரங்கள் கடலில் செழித்து வளர யாராவது உரம் போட வேண்டுமல்லவா? அந்த உரத்தைப் போடுபவர்கள் யார் என்றால் திமிங்கிலங்கள். ஆம். திமிங்கிலங்களின் கழிவுகளே நுண்ணுயிர்ப் பாசிகளுக்கு உரமாகிறது.
திமிங்கிலங்கள் அவற்றின் பெரிய உடலுக்கேற்ப அதிக அளவில் இரை உண்பவை. குறிப்பாக நீலத்திமிங்கிலம் 1 முதல் 4 டன் உணவை நாள்தோறும் உண்ணக் கூடியது.
கடல்மட்டத்தில் மிதக்கும் நுண்பாசிகள், கிரில்(Krill) எனப்படும் கூனிப்பொடிகளுக்கு உணவாகிறது. கூனிப்பொடிகள் பல்லில்லாத பலீன் வகை திமிங்கிலங்களுக்கு உணவாக மாறுகிறது. கடலில் மீன்களை உண்ணும் திமிங்கிலங்களும் இருக்கின்றன.
திமிங்கிலங்களில் சில கடலின் அடியாழத்தில் மூழ்கி அங்கே இரைதேடக்கூடியவை. இப்படி அதிக ஆழத்தில் மூழ்கும் திமிங்கிலங்கள் அங்கே கழிவுகளை வெளிப்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டாலும் கூட கடலின் ஆழத்தில் அந்த இயற்கை அழைப்பை ஏற்று கழிவுகளை வெளியேற்றாது. மூச்செடுக்க கடலின் மேற்பரப்புக்கு வரும்போதுதான் திமிங்கிலங்கள் கழிவுகளை வெளியேற்றுகின்றன.
இந்தத் திமிங்கில கழிவுகளை வைத்து அதை வெளியேற்றிய திமிங்கிலத்தின் வயது, பாலினம் போன்றவற்றைச் சொல்லிவிடலாம். திமிங்கிலக் கழிவு சிவப்பு நிறமாக இருந்தால் அந்தத் திமிங்கிலம் அதிக அளவில் கூனிப்பொடிகளை உண்டிருக்கிறது எனவும், பச்சை நிறமாக இருந்தால் மீன்களை அதிக அளவில் தின்றிருக்கிறது என்பதையும் ஊகித்து விடலாம்.
இந்தத் திமிங்கிலக் கழிவுகள், மிகச்சிறந்த கடல் உரம். ஆம். நீரின்மேல் மிதக்கும் இந்தக் கழிவுகள்தான் பைட்டோபிளாங்டன் (Phytoplankton) என்னும் மிதக்கும் நுண்பாசிகளுக்கு உரமாகி, அவற்றைச் செழிக்கச் செய்கின்றன. இதன்மூலம் கடலென்னும் தோட்டத்தின் தோட்டக்காரர்களாக திமிங்கிலங்கள் விளங்குகின்றன. மனிதகுலத்துக்கு உயிர்க் காற்றை அதிக அளவில் வழங்கி, புவிப்பந்தின் வெப்பம் அதிகரிக்காமலும் காக்கின்றன.
ஆனால், திமிங்கிலங்கள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை தாறுமாறாக குறைந்து வரும் இன்றைய சூழ்நிலையில், புவிக் கோளத்தின் சுற்றுச்சூழல் முழுக்க மாற்றம் கண்டு, அதனால் நமது மனிதகுலம் அழியும் ஆபத்துகூட ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

No comments :

Post a Comment