Sunday, 26 January 2020


சொறிமீன் படையெடுப்பு

கடலின் ஆவி
சொறிமீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்களைத் தெரியும்தானே? நமது வலைப்பூவைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவர்களுக்கு சொறிமீன்களைத் தெரிந்திருக்கும்.  500 மில்லியன் ஆண்டுகளாக உலகப்பந்தில் உயிர் வாழும் சொறிமீன்கள், டைனோசர்களைவிட, ஏன்? மரங்களை விட வயதில் மூத்தவை.
அறிவியல் எழுத்தாளரான ஜூலி பெர்வால்ட் என்ற பெண்மணி, இந்த சொறிமீன்களைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்.
‘இவை ஆதாம், ஏவாள் வாழ்ந்த ஏடன் தோட்டத்தில் இருந்து எழுந்த ஆவிகள்’ என்கிறார் ஜூலி. ‘ஏதோ ஒரு வகையான அறிவுதான் இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சொறிமீன்களை உலகப்பந்தில் வாழ வைத்திருக்கிறது’ என்கிறார் அவர்.
எழுத்தாளர் ஜூலி பெர்வால்ட் சொல்வதைக் கேட்போம்.
‘சொறிமீன்களுக்கு மூளை இல்லை. முதுகெலும்பு இல்லை. கண்கள் இல்லை. ரத்தம் இல்லை. ஆனால், உலகக் கடல்களில் அவ்வப்போது பெரிய அளவில் இவை இனம்பெருகி, ‘பெருவெடிப்பு (Big bang) போல வெடித்துச்சிதறி உலகத்தைப் பயமுறுத்தி வருகின்றன. பெருங்கடல்களின் சுற்றுச்சூழலையே மாற்றி அமைத்துவிடும் மாய உயிர்கள் இந்த சொறிமீன்கள்.
இவற்றின் பெருக்கத்தால் ஏற்படும் எதிர்வினைகள் கடலோடு நின்றுவிடுவதில்லை. சொறிமீன்கள் பெருகினால் ஸ்வீடன், இஸ்ரேல், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மின்சார உற்பத்தி(!) பாதிக்கப்படுகிறது. ஆம். கடலோடு இணைப்புள்ள மின் உற்பத்தி நிலைய கருவிகளுக்குள் இவை புகுந்து மின்உற்பத்தியைத் தடை செய்து விடுகின்றன. விளைவு முழு இருட்டு.
‘நகரம் முழுவதும் இருட்டாகி விட்டதே. ஏதாவது ராணுவப் புரட்சி நடந்து விட்டதோ? என்று பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களுக்கு அடிக்கடி பீதியைக் கிளப்புகின்றன இந்த சொறிமீன்கள்.
எங்கெங்கு காணினும்...
ஜப்பான் நாட்டில், மின் உற்பத்தியைப் பாதிப்பவை இரண்டே அம்சங்கள்தான். ஒன்று நிலநடுக்கம். இரண்டு சொறிமீன் பெருக்கம். எங்கெங்கும் தோன்றும் ஒரு படைப்புடன் நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.
புவி உருண்டையின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் சொறிமீன்களின் பெருக்கம் திடீரென அதிகமாகிறது. வெப்பக் கடல்களில் சொறிமீன்களால் மிக நன்றாக இனப்பெருக்கம் செய்ய முடியும். சூழல்மாசுபாடு உள்ள கடல்களில் மற்ற மீன்களைவிட சொறிமீன்களால் நன்றாக வாழ முடியும். காரணம் சொறி மீன்களுக்கு அதிக அளவில் உயிர்க்காற்று தேவையில்லை. கொன்றுண்ணி மீன்கள் அதிக ஆக்சிஜன் இல்லாத கடல்பகுதிகளில் தலை காட்டத் தயங்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் தங்களுக்கு எதிரிகளே இல்லாமல் சொறிமீன்கள் சுகமாக வாழ்கின்றன. (சொறிமீன், மீன் அல்ல, ஆனால் மீன் என்றே இவற்றைக் குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது.)
அதுபோல, அதிக மீன்பிடிப்பும் சொறிமீன் பெருக்கத்துக்கு ஒருவகை காரணமாகிறது.
எடுத்துக்காட்டாக தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கட்டுப்பாடற்ற முறையில் சட்டத்துக்குப் புறம்பாக பல ஆண்டுகளாக மீன்பிடிப்பு நடந்தது. இதனால் கடலின் சூழல் உருக்குலைந்து, அதிக வெப்பம் நிலவி, இருவகை சொறிமீன்களின் இருப்பிடமாக நமீபியா கடல்பகுதி மாறியது. அங்கே மீனவர்கள் வலை இழுத்தால் மீன்களை விட சொறிமீன்களே அதிகம் சிக்கும் நிலை.
பகீர் படையெடுப்பு
உலகில் அதிக மீன்வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்று நமீபியா கடற்பகுதி. அங்கே இனி நிலைமை எப்போது சீராகி, மீண்டும் மீன்கள் எப்போது பெருகும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இரை மீன்கள் இல்லாமல் போவதால் அவற்றை உண்டு வாழும் மற்ற மீன் இனங்களும் பாதிப்படைகின்றன. போதுமான மீன்கள் இல்லாமல் கடற்பறவைகளும் கூட அங்கே பட்டினி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.
சொறிமீன்களில் பெரிய வகை சொறிமீன்களில் ஒன்று நொமுரா (Nomura) சொறி மீன்.  ஜப்பான் நாட்டு கடற்பகுதியில் அதிகம் காணப்படும் இந்த மிகபெரிய சொறிமீன், 200 கிலோ வரை எடையுள்ளது. 2 மீட்டர் நீளத்துக்கு வளரக்கூடியது.
இதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நொமுரா சொறிமீன்கள் கடலில் தலைகாட்டும். ஜப்பான் மீனவர் ஒருவர் இந்த சொறிமீனை மகனுக்குக் காட்டி. ‘நன்றாகப் பார்த்துக் கொள். இனிமேல் 30 ஆண்டுகளுக்குப்பிறகுதான் இதைப் பார்க்க முடியும்’ எனக் கூறுவது வழக்கம். முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு அந்த சொறி மீனைப் பார்க்கும் மகன், அப்பா சொல்வதை நினைவுபடுத்திக் கொள்வான்.
ஆனால், இப்போது அப்படியில்லை. ஆண்டுதோறும் நொமுரா சொறிமீன்கள் கடலில் படையெடுத்து காணப்படுகின்றன. இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் அதிக அளவில் நொமுராக்கள் வருகை புரியத் தொடங்கியுள்ளன. 2009ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு மீனவர் வலை ஒன்றில் அதிக அளவில் நொமுராக்கள் சிக்கியதால், பத்து டன் எடையுள்ள அவரது மீன்பிடிப்படகு கவிழ்ந்தது.
நொமுரா சொறிமீன்
சொறிமீன்கள் நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன? உலகப்பந்து அதிக வெப்பம் அடைந்து வருகிறது, கடல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாசுபாடு அடைந்திருக்கின்றன என்று சொறிமீன்கள் சொல்கின்றன.
நிலத்தில் நாம் உருவாக்கும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி, பூச்சிக்கொல்லிகள் போன்றவை பெருங்கடல்களில் போய் சேர்கின்றன. இந்த கழிவுகள் கடலின் உயிர்க்காற்றைக் குறைத்து சொறிமீன்களின் சொர்க்க பூமியாக அவற்றை மாற்றுகின்றன. கடற்கரையோர அழுக்குகளைத் தேடித்தின்பதற்காக சொறிமீன்கள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.
‘எதையாவது செய்து இந்த புவியைக் காப்பாற்ற வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயம்’ என்கிறார் எழுத்தாளர் ஜூலி பெர்வால்ட்.

No comments :

Post a Comment