நொமுரா (Nomura) சொறி மீன்
நொமுரா… இந்தப் பேரைக் கேட்டாலே
ஜப்பான் நாட்டு மீனவர்கள் முகம் சுளிப்பார்கள். ஜப்பான் நாட்டு கடற்கரைப்பகுதிகளில் வாழும்
மக்களின் முகம் எட்டுகோணலாகும். அந்த அளவுக்கு அவர்கள்
அனைவரையும் மிரட்டி வைத்திருக்கும் பெயர் நொமுரா.
மிதக்கும் ‘மணி’ |
நொமுரா (Nomura) என்பது ஒருவகை சொறி மீன் (Jellyfish). கொஞ்சம் பெரிய அளவிலான சொறி
மீன் இது. பெருங்கடல்களில் நொமுராவுடன்
போட்டிபோடக்கூடிய, நொமுராவை விட பெரிய சொறி மீன் என்றால் அது லயன்மேன் எனப்படும்
சிங்கப்பிடரி சொறிமீன்தான். ஆனால் சிங்கப்பிடரி சொறிமீன்கள் குளிர்க்கடல்
உயிர்கள். நொமுராவோ வெப்பக்கடல் உயிர்.
ஜப்பான்
நாட்டைச் சேர்ந்த மீனியல் வல்லுநர் கனிச்சி நொமுரா (Kanichi Nomura) என்பவர்தான் 1921ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த மாபெரும் சொறிமீனை அடையாளம் கண்டுபிடித்தார். 72 லிட்டர் கடல்நீர் கொள்ளும்
மரப்பீப்பாயில் அதை உயிருடன் பிடித்து ஆய்வு நடத்தினார். அதனால் இந்த மெகா
சொறிமீனுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
நொமுரா
சொறிமீன் சிறுதானிய மணி போல இருந்து ஆறே மாதங்களில் ஆறடி குறுக்களவுக்கு
வளரக்கூடியது. சின்னஞ்சிறிதாக இருக்கும்
போது நொமுரா, கடலில் மிதக்கும் கவுர் (பிளாங்டன்) எனப்படும் மிதக்கும்
நுண்ணுயிர்களை உணவாகக் கொள்ளும். இந்த சொறிமீன்களை இரை
தின்னும் இயந்திரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலநூறு மைக்ரோபோபிக் வாய்களால்
இவை நுண்ணுயிர்களை அதிக அளவில் உண்ணும். பிளாங்டன்களை இவை வகை தொகை இல்லாமல் தின்று
தீர்ப்பதால், பிளாங்டன்களை உண்டுவாழும் அம்மணி உழுவை, மேய்ச்சல் சுறா உள்பட பல
சிறிய பெரிய மீன்களுக்கு கடலில் இரை இல்லாமல் போய்விடும்.
எவ்வளவு பெரியது... |
இப்படி
அசுரத்தீனி தின்று நொமுராக்கள், விரைவில் 6.6 அடி (2 மீட்டர்) முதல் 7 அடி குறுக்களவுள்ள பெரிய
மணியைப் போல வளர்ந்து விடும். இவற்றின் எடையும் 200 கிலோவாகி விடும். நொமுரா சொறிமீன்களில் சில 450 கிலோ வரை கூட வளர்வதுண்டு. இது வளர்ந்த பெரிய ஒரு
சிங்கத்தின் எடை என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் நொமுரா சொறிமீன்கள், சிறு மீன்களை இரையாகக் கொள்ளும் அதே
நேரத்தில் வாள்மீன் (Sword fish), சூரை மீன் (Tuna), மோளா (Sun fish),
தோணி ஆமை அல்லது ஓங்கல் ஆமை (Leatherback Turtle) போன்றவை நொமுரா சொறிமீன்களின் எதிரிகள் ஆகும். இது போல
நொமுராவை இரையாகக் கொள்ளும் மீன்கள் கடலில் குறைந்தால் நொமுராக்களின் எண்ணிக்கை தாறுமாறாக
அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பில்லியன் கணக்கில் இவை முட்டைகளை
இட்டுத்தள்ளும். யாராவது தாக்கும்போது கூட(!) முட்டையிடுவது நொமுராக்களின் வழக்கம்.
மஞ்சள் கடல், தென்சீனக்
கடல் போன்றவற்றில் காணப்படும் நொமுரா சொறிமீன்கள் கோடை காலம் வந்து விட்டால் ஜப்பான் நாட்டு கடற்கரைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிடும். இதனால் மீனவர்களின்
வலைகள் கிழியும். நொமுராக்கள் சிக்கிய வலைகளை இழுக்கும்போது படகுகள்
கவிழும்.
சொறிமீன்களைப் பொதுவாக மூளையற்ற பைகள்
(Brainless bags) என்பார்கள். ஆம். மற்ற சொறிமீன்களைப் போலவே நொமுரா சொறிமீன்களுக்கும் கண்கள் கிடையாது.
மூளையும் கிடையாது.
நொமுராக்களின் உடல் மென்மையானது.
அதனால் சூரை, மோளா போன்ற மீன்களிடம் இருந்து தப்பிக்க
இவற்றின் உடல்முழுவதும்
Nematocysts என்ற நஞ்சுள்ள கொக்கிகள் (கொடுக்குகள்) காணப்படும். நொமுரா சொறிமீன்களின் நஞ்சு நிறைந்த இந்த
கொளுக்கிகளுக்கு இடையே வாழ்ந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளும் சிறுமீன்களும்
உள்ளன.
நொமுராக்கள் மனிதர்களைக் கொட்டினால் அவர்களுக்கு
கடும்வேதனை உண்டாகும். அரிப்பு, கொப்பளம், தோல் வெடிப்புடன் மூச்சுவிடுவதில் சிக்கல்,
இதயத்துடிப்பு குறைவது போன்ற இன்னல்களும் உருவாகும். இருந்தாலும்கூட
நொமுரா சொறிமீன்களால் ஏற்படும் உயிரிழப்பு குறைவே. உலக அளவில் இதுவரை 8 பேர் மட்டுமே
நொமுரா சொறிமீன்களால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
பயணம் எங்கே? |
நொமுரா சொறிமீன்களால் ஜப்பான் நாட்டுக்கு அடிக்கடி தொல்லை ஏற்பட்டு
வரும் நிலையில் இந்த பிரச்சினையைச் சமாளிக்க ஓர் அழகான திட்டத்தை
கடலியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தார்கள். அதுதான் நொமுரா சொறிமீன்களை
உணவாக்கும் திட்டம். நொமுராவின் சதை உண்ணக் கூடியதுதான்.
அதன் காரணமாக நொமுராவில் இருந்து ஐஸ்கிரீம் எனப்படும்
பனிக்கூழ் உள்பட சிலவகை உணவுகள் உருவாக்கப்படுகின்றன.
நொமுராவில் இருந்து பாலில் போடக்கூடிய படிகங்களையும் ஒரு நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆனால், நொமுரா சொறிமீனை மிகச் சுவையான உணவு என்று சொல்ல முடியாது.
No comments :
Post a Comment