சோவி.. பெண்மையின் சின்னம்
சோவி.. சோழி… இப்படியெல்லாம்
தமிழில் ஒரு சிறு கடலுயிர் அழைக்கப்படுகிறது. அழகிய ஓட்டுடன்
கூடிய ஒருவகை கடல்நத்தை இது. ஆங்கிலத்தில் இதை காவ்ரி
(Cowri) என்று அழைக்கிறார்கள்.
சோவிகள்.. சோழிகள்.. |
குவிமாடம் போன்ற உருவமும், அடிப்பகுதியில் குறுகலான நீண்ட திறப்பும் கொண்டவை
சோவிகள். இதன் ஓடு பளிங்கு, பீங்கான் போல
பளபளப்பானது. அழகிய பல வண்ணங்களைக் கொண்டது.
சோவிகள் 75 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் பயன்பாட்டில்
இருக்கின்றன. இந்த கண்கவர் கடல்நத்தைக்கூடுகள் நாணயங்களாக,
ஆபரணங்களாக, வசியப்பொருளாக, வரும்பொருள்
உரைக்க (குறிசொல்ல) பயன்படும் மந்திரப்
பொருளாக, பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுக்களுக்கான பகடைக் காய்களாக,
வீட்டு அலங்காரப் பொருள்களாக இன்னும் பலப்பல விதங்களில் மனிதகுலத்துக்குப்
பயன்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்த சோவிகளை பெண்மையின்
சின்னம் எனக் கூறலாம். பிறப்பது,
பூப்படைவது, மணம் முடிப்பது, கருவுறுவதுல், குழந்தைப் பேறு என பெண்களின் எல்லா முதன்மை
கால கட்டங்களிலும் அவர்களது வாழ்வில் ஒன்றரக் கலந்து இருந்திருக்கின்றன இந்த சோவிகள்.
ஜப்பான் நாட்டில் எளிதாக வலியின்றி சுகமாக குழந்தையைப் பெற்றெடுக்க
பெண்கள் குறிப்பிட்ட ஒரு சோவியை தங்களுடன் வைத்துக் கொள்வார்கள்.
அந்த சோவியின் பெயரே ‘எளிதான குழந்தைப்பேறு சோவி’
என்பதுதான். தாயத்து போல சோவிகள் பல்வேறு கட்டங்களில் மகளிருக்கு
உதவுகின்றன.
சோவி பழங்காலத்தில் பசிபிக்
கடல்தீவுகளின் அரசகுலத்தவர் அணியும் ஆபரணமாக இருந்திருக்கிறது. பழங்கால சீனாவில் பணத்தைக் குறிப்பிடும் சித்திர
எழுத்து வடிவம் சோவியின் வடிவத்தில் இருந்தே வந்தது.
பல்வேறு வடிவங்கள்..நிறங்கள்.. |
அதுபோல ஆப்பிரிக்காவின் கானா
நாட்டில் செடி (Cedi) என்ற நாணயத்தில்
சோவியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அகான் மொழியில் செடி
என்பது சோவியைக் குறிக்கும் சொல். மற்றொரு ஆப்பிரிக்க நாடான டோகோவில் இன்றும
கூட கணியம் (சோதிடம்) சொல்லப்பயன்படும் பொருளாக சோவி விளங்குகிறது. நைஜீரியா நாட்டின்
யோருபா இன மக்கள், ‘ஆவிகளுடன் பேச’ சோவியைப் பயன் படுத்துகிறார்கள்.
சீனாவின் பெங்சுயி (Feng Shui) வாஸ்து
கலையின் படி சோவி என்பது வீட்டுக்கு செல்வத்தை கொண்டு வரும் ஒரு பொருள்.
ஆப்பிரிக்க, பசிபிக் கடல் நாடுகள் சீனா,
இந்தியா போன்றவற்றிலும்கூட சோவிகள் பெருவாரியான அளவில் நாணயமாகப் பயன்பட்டிருக்கின்றன.
கையாள எளிது, குறைவான எடை, எளிதில் அழியாத்தன்மை,
ஒரே அளவு போன்ற காரணிகள் காரணமாக சோவிகள் அதிக அளவில் நாணயங்களாக உதவியிருக்கின்றன.
இந்தியாவில் 3,840 சோவிகள் ஒரு ரூபாய்
மதிப்புக்குச் சமமானவை. ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ஒரு கட்டத்தில் அதிகஅளவில் சோவிகளை
ஈட்டிய ஒருவர் அவற்றைச் சுமந்து செல்வதற்கான சுமைகூலி சோவிகளின் மதிப்பைவிட அதிகமாக
இருந்ததால் அந்த சோவிகளைக் கைவிட்டதாக வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதி வைத்துள்ளார்.
‘சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது அல்லவா?
எத்தனை வண்ணம்? |
சோவிகள் ஏன் இத்தனை வண்ணங்களுடன் பளபளப்பாக
இருக்கின்றன? கடலில் வாழும் ஸ்லக் (Slug) என்ற ஒருவகை உயிரினத்தைப் போல தோற்றம் அளிப்பதற்காக
சோவிகள் பல வண்ணங்களில் திகழ்கின்றன.
சரி. சோவிகளின் உணவு என்ன? சிறிய சோவிகள்
பாசிகளையும், மற்ற உயிர்கள் உணவு உண்ணும்போது சிந்தும் துகள்களையும் உண்ணும். வளர்ந்தபின்
சிலவகை கடற்சாமந்திகள், கடற்பஞ்சு உயிர்கள், மென்மையான பவழப்பாறைகளை சோவிகள் உண்ணும்.
சோவி, சிப்பி, ஊத்தி போன்ற கிளிஞ்சல் ரகங்களில்
மொத்தம் 12 ஆயிரம் வகைகள் உள்ளன.
No comments :
Post a Comment