பிறந்த இடம் தேடி…
ஆமைகளை பெரும் கடலோடிகள் என்பார்கள். பரந்து விரிந்த நீலப்பெருங்கடல்களில் பல ஆயிரம் மைல் தொலைவுக்கு ஆமைகள் பயணப்படக்
கூடியவை. பெண் ஆமைகள் உலகக் கடல்களின் எந்த ஓரத்தில் இருந்தாலும்,
முட்டையிடுவதற்காக, தான் பிறந்த கடற்கரைக்கே மீண்டும்
வரும் என்பது உங்களில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
ஆமைகளிலும் கூட, பெருந்தலை கடலாமைகளே மிகச்சிறந்த கடலோடிகள்.
பல ஆயிரம் கடல் மைல்கள் பயணம் செய்து பிறந்த இடம்தேடி வருவதில் பெருந்தலை
ஆமைகள் மிகவும் பெயர் பெற்றவை.
எடுத்துக்காட்டாக அடிலிட்டா
என்ற பெருந்தலை இனத்துப் பெண் ஆமை ஒன்று, ஆய்வு நடவடிக்கைக்காக மெக்சிகோ நாட்டின் பஜகலிபோர்னியா கடற்பகுதியில் இருந்து
விடுவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மைல்களை அயராமல் நீந்திக் கடந்த
அடிலிட்டா, இறுதியில், தான் பிறந்த வளர்ந்த
ஜப்பான் நாட்டின் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அடிலிட்டா
பயணம் செய்த மொத்த தொலைவு 9 ஆயி
ரம் மைல்கள்!
ஆமைகளால் எப்படி இந்த அரிய
சாதனையை நிகழ்த்த முடிகிறது? இதைப்பற்றி
விளக்குகிறார் கடலியல் ஆய்வாளர் வாலஸ் ஜே. நிக்கோலஸ்.
‘நமது கற்பனைக்கெட்டாத அளவுக்கு
ஆமைகள் திசை கண்டறிந்து பயணப்படக்கூடிய மிகச்சிறந்த மாலுமிகள்’ என்கிறார் வாலஸ் நிக்கோலஸ். ‘கடல்மேல் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீர்தான் தென்படும். மனதில் பதிந்து வைத்துக் கொள்வது மாதிரியான
நிலஅடையாளங்கள் எதுவும் இருக்காது. கடல் அடிக்கடி கலங்கும்.
அப்போது கடலில் தெளிவாகப் பார்க்கக்
கூட முடியாது. வலிய நீரோட்டம் இழுக்கும். இதுபோக, ஆமைகளால் தங்கள் தலையை சில அங்குல உயரத்துக்கு
மேலே தூக்கிப் பார்க்க முடியாது. இத்தனை குறைபாடுகளுக்கு நடுவில்தான்
ஆமைகள் இப்படி வழிதவறாமல் பயணம் செய்வது குறித்த இடத்தை வந்தடைகின்றன.
இது கண்டிப்பாக வேறு அளவிலான திறமை’ என்கிறார்
நிக்கோலஸ். இந்த திறமை ஆமைகளின் உள்ளுணர்வால் வருவது’
என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
கடல் ஆமைக் குஞ்சுகளுக்கு
அவை முட்டையில் இருந்து பொரித்து வெளியே வந்து கடலில் கால்வைக்கும் முன்பே, புவிக்கோளத்தின்
காந்த வயல்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்து விடுகிறது. எந்தத் திசையில் கடல் இருக்கிறது என்பதைத்
தெரிந்து கொண்டு ஆமைக் குஞ்சுகள் கடலை நோக்கி கடகடவென நகர்வது இதனால்தான்.
இதுபோக வளர்ந்த கடலாமைகள்
புவியின் காந்த வயல்கள் மூலம் கடலின் எந்த பகுதியில் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகத்
தெரிந்து கொள்கின்றன. அதற்கேற்ப தமது
பயணத்தை அவை வடிவமைத்துக் கொண்டு, கடல்நீரோட்டம்
அப்பால் பிடித்துத் தள்ளினாலும்கூட, வலசைப் பாதையைத் தொடர்ந்து
விடாமல் பிடித்த வண்ணம் பயணத்தைத் தொடர்கின்றன.
‘இது போக கடலடியில் உள்ள
குன்றுகள், மோப்பத்திறன் போன்றவையும் ஆமைகளின் கடல் பயணத்துக்கு உதவுகின்றன’ என்கிறார் ஆய்வாளர்
நிக்கோலஸ்.
இப்படி பிறந்த இடம் தேடி வரும்
ஆமைகளுக்கு வழிநெடுகிலும் பல வடிவங்களில் ஆபத்துகள் காத்திருக்கும். பெரிய சுறாக்கள், சீற்றம் மிகுந்த கடல் இவற்றுடன் கப்பல்கள், படகுகளில்
அடிபடாமல், மீனவர்கள் விரித்த வலைகள், தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாமல் ஆமைகள் பயணப்பட வேண்டியிருக்கும்.
ஆமைகள் பிறந்த நாட்டில் பல நூறு கடற்கரைகள் இருக்கின்றன. இருந்தும்கூட
அவற்றில் தான் பிறந்த கடற்கரையை மட்டும் ஆமை ஏன் தேர்வு செய்கிறது.
ஏன் வேறு கடற்கரைகளைத் தேர்வு செய்வதில்லை? இதற்கும் விளக்கம்
சொல்கிறார் நிக்கோலஸ்.
‘சில குறிப்பிட்ட கடற்கரைகள்,
பல நூற்றாண்டு காலமாக சரியான தட்பவெப்பம்,
நில அமைப்பு, எதிரிகள் இல்லாத சூழல் போன்றவற்றுடன்
விளங்குகின்றன. இதுபோன்ற கடற்கரை ஒன்றில் பிறந்த ஆமைகளுக்கு அவற்றின்
மரபணுக்களில் இந்தத் தகவல் ஒட்டிக் கொள்கிறது. இதனாலேயே குறிப்பிட்ட ஒரு கடற்கரையை ஆமைகள் நாடி வருகின்றன’ என்கிறார் நிக்கோலஸ்.
ஆமைகள் முட்டையிடும் கடற்கரை
மனித நடமாட்டமின்றி இருக்கவேண்டும். அந்த கடற்பகுதியில் சுறாக்கள் இல்லாமலும், கரையில் நாய்,
நரி போன்றவையும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்தக்
கடற்கரை கடலில் இருந்து சற்று உயர்ந்து எழுந்த ஒரு மணல்மேட்டின்மேல் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பு. அத்துடன் சரியான ஈரப்பதம்,
தட்பவெப்பநிலை கொண்ட கடற்கரையாக அது இருந்தால்தான் ஆமை முட்டையிடும்
கடற்கரையாக அது திகழும்.
கடற்கரை சற்று மணல்மேடாக இருந்தால்
அங்கு அலைகள் மேலெழுந்து வர வாய்ப்பில்லை. ஆகவே மணலில் பள்ளம் பறித்து இடும் முட்டைகள் அலையால் இழுத்துச் செல்லப்படாமல்
பத்திரமாக இருக்கும் என்பது ஆமைகளின் கணிப்பு. ஆமை முட்டைகள்
இருக்கும் பகுதி வரை அலைகள் வந்து சென்றால் முட்டைகள் அவற்றின் வெப்பநிலையை இழந்து
உருக்குலைந்து விடும். அவற்றில் குஞ்சுகள் பொரிக்காது.
ஆமை முட்டையிடும் மணற்கரை
உடைந்து சரிந்து விழ வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆமை உறுதி செய்து கொள்ளும். அதுபோல ஆமை முட்டையிடப் போகும் கரையில் மணல்
தேரிகளும், கடற்கரையோரமாக பவழப்பாறைகளும் இருந்தால் மிகவும் நல்லது.
ஆமை முட்டைகளையிடும்போது கடலுக்கு
மிக அருகில் இடாது. அதுபோல கடலுக்கு
வெகு தொலைவிலும் இடாது.
கடலருகே முட்டைகள் இட்டால்
அலைஅபாயம் இருக்கும். தொலைவில்
இட்டால் முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடலுக்கு வந்து சேரும் முன் காக்கை,
பருந்து போன்றவற்றுக்கு இரையாகிவிடும். அதுபோல
கடலுக்கு தொலைவில் முட்டைகள் இட்டால் கடலோர தாவரங்களின் வேர்கள் ஆமையின் முட்டைகள்
இருக்கும் பகுதிக்குள் ஊடுருவி முட்டைகளைப் பாதிக்க வாய்ப்புண்டு.
ஒரு குறிப்பிட்ட கடற்கரையில்
பிறக்கும் கடல் ஆமைக்குஞ்சு வளர்ந்து பெரிதானதும்,
‘தன் அம்மாவின் தேர்வு எப்போதும் சரியாக இருக்கும்’
என்று நம்புகிறது. எனவே அதே கடற்கரையைத் தானும்
தேடிச்சென்று முட்டையிடுகிறது. பல லட்சம் ஆண்டுகளாக இது தொடர்ந்து
நடக்கிறது. மனிதர்கள் என்னும் அறிவுமிக்க உயிர்கள் கடலையும், கடற்கரைகளையும்
பாழ்படுத்துகிறார்கள் என்பது ஆமைக்குத் தெரியாது.
இந்த நவீன உலகத்தில் புதுப்புது
ஆபத்துகளை எதிர்கொண்டாலும் கூட ஆமை அம்மாக்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பிறந்த இடம்
தேடி நீந்துகின்றன. வருங்காலத்திலும்
இந்த பாசப் பயணம் தொடர்கதையாகத் தொட்டுத்தொட்டுத் தொடரும்.
No comments :
Post a Comment