மீன்களற்ற கடல்
|
கொம்பன் சுறா |
நமது புவிப்பந்தின் 70 விழுக்காடு பரப்பு கடலால் நிரப்பப்பட்டு உள்ளது.
எஞ்சியிருக்கும் பகுதியே இப்போது நாம் வாழும் நிலப்பரப்பு.
‘உலகில் உள்ள தானியங்கள்,
காய்கறிகள், ஆடுமாடு போன்ற உயிர்கள் முற்றிலும்
அழிந்து போனால்கூட மனிதகுலத்துக்குத் தேவையான உணவை இன்னும் நூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து
வழங்க கடல் அன்னை தயாராக இருக்கிறாள்.
அண்மையில், இப்படியொரு தகவலை நமது தமிழ் இதழ் ஒன்றில் காண
நேர்ந்தது.
இது உண்மையா? இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு கடல்அன்னை நமக்கு
மீன்களை உணவாக வழங்குவாளா என்று கேட்டால் ‘இல்லை’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
‘வரும் 2048ஆம் ஆண்டில் உலகக் கடல்களில் மீன்களே இல்லாமல் போய்விடும்(!!!)’ என்கிறார்கள் பன்னாட்டு சூழலியல் வல்லுநர்கள்.
2006ஆம் ஆண்டு போரிஸ் வார்ம்
என்ற கடலியல் ஆய்வாளர், அறிவியலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.
ஏழாயிரத்து 800 வகை மீன்களை, கடலுயிர்களை
நான்காண்டு காலம் வரை இந்தக்குழு ஆராய்ந்தது. அந்த ஆய்வின் முடிவில்,
‘வரும் 2048ஆம் ஆண்டில் உலகக் கடல்களில் மீன்களே
இல்லாமல் போய் விடும்’ என்று அந்தக்குழு அதிர்ச்சி அறிக்கையை
வெளியிட்டுள்ளது.
இன்னும் 32 ஆண்டுகளில் இந்த ஆபத்தான நிலைமை இந்த பூவுலகுக்கு
வந்து சேரும் என அவர்கள் கணித்திருக்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டின் சாக்கடல்
எனப்படும் செத்தக்கடலில் மீன்கள் எதுவும் வாழ முடியாது. அந்த சாக்கடல் போல, ‘உலக
மாகடல்கள் அனைத்தும் உயிரிழந்து போய்விடும்’ என்கிறார்கள் அந்த
ஆய்வுக்குழுவினர். ‘இந்த கருத்தை இப்போது சிலர் நம்ப மறுக்கலாம்.
ஆனால், அவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கைக் குரல்.
அவர்கள் விரைவில் விழித்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் ஆய்வுக்குழுவினர்.
புவி வெப்பமாகி உலக கடல்களின்
நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், ஒரு நாள் இந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பும் கடலில் மூழ்கும் காலம் வருகிறது என்று
வைத்துக் கொள்ளுங்கள். அப்போது கடல் உணவுகள் மட்டும்தான் மனிதர்களுக்கு
கைகொடுக்கும் கருவியாக இருக்கும். காக்கும் ஒரே துணையாக இருக்கும். அந்த கடல் உணவுகள்தான்
2048ல் காணாமல் போய்விடும் என்கிறார்கள் அறிஞர்கள்.
ஏன்? என்ன காரணம்?
வருங்காலத்தில் மீனற்ற பெருங்கடல்கள்
உருவாக காரணிகள் எவை எவை என்று ஆராய்ந்தால், அதிக மக்கள் பெருக்கம், அதிக அளவிலான மீன்பிடிப்பு,
சூழல் சீர்கேடு, மீன்களின் இருப்பிட இழப்பு,
புவிவெப்பம் இவைகள்தான் காரணம் என்கிறார்கள் கடலியல் வல்லுநர்கள்.
உலகின் தற்போதைய முக்கியத்
தேவை உணவு. அதிலும் முதன்மையானது
புரொட்டீன் எனப்படும் புரதச்சத்து.
2017ஆம் ஆண்டுக்கும்,
2050ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பூவுலகில் வாழும் மனிதர்களின்
எண்ணிக்கை 29 விழுக்காடாக அதாவது 9.8 பில்லியனாக
(980 கோடியாக) உயரும் என பன்னாட்டு மன்றம்
(ஐ.நா.அவை) கணித்துள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 760 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை
980 கோடியாக உயரும் நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற பின்தங்கிய பகுதிகளிலேயே
இந்த மக்கள் பெருக்கம் அதிகமாக இருக்கும். உலகின் பின்தங்கிய
மூன்றாம் நாடுகள் செறிந்துள்ள இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் முதன்மை உணவுகளில்
கடலுணவும் அடங்கும்.
உலகின் மக்கள் தொகை 980 கோடியாக உயரும்போது, கூடவே புரதச்சத்தின் தேவையும் 32 விழுக்காட்டில் இருந்து
78 விழுக்காடாக அதிகரிக்கும். இதை ஈடுகட்ட ஆண்டுக்கு
62 முதல் 159 மில்லியன் மெட்ரிக் டன் புரதம் தேவைப்படும்.
இந்த புரத தேவையே கடல்மீன்களுக்கு ஆபத்தாகிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கடலில் தற்போது மூன்றரை டிரில்லியன்
மீன்கள் வசிப்பதாக கடல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மிகப்பெரிய இழுவை மடிகளைக்
கொண்டு இயங்கும் மீன்பிடிக் கப்பல்கள் கடலில் ஒரு மிதக்கும் தொழிற்சாலை போலவே இப்போது
செயல்படுகின்றன. உலகம் முழுவதும் கடலின்
அடி ஆழம் வரை தரையைக் கிளறி உயிருள்ள எல்லா பொருள்களையும் துடைத்து அள்ளும் பணியில்
அவை ஈடுபட்டுள்ளன
.
|
கடலே...கடலே... |
ஒவ்வொருமுறை மடியிழுக்கும்
போது ஒரு மீன்பிடிக் கப்பல் ஏறத்தாழ 400 டன் மீன்களைப் பிடிக்கிறது. அவற்றில் தேவையில்லாத
40 விழுக்காடு மீன்கள் கப்பலின் ஒருபுறம் கொட்டப்படுகின்றன. அவை துடிதுடித்து உயிரிழந்தபின் கடலில் வீசியெறியப்படுகின்றன. இதுபோன்ற ‘மீன்பிடிப்பு’ நம்மை
ஆபத்தில் கொண்டு போய்விட உள்ளது.
அதுபோல, தற்போது ஒவ்வோர் ஆண்டும் 8.8 மில்லியன் டன் (88 லட்சம் டன்) பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.
‘2050ஆம் ஆண்டில் கடலில்
குப்பையாகக் கொட்டப்பட்டு சேரும் பிளாஸ்டிக்குளின் எடை கடலில் உள்ள மொத்த மீன்களின்
எடையை விட அதிகமாகிவிடும்’ என்று ஹெலன் மக்ஆர்தர் அறக்கட்டளை
அதன் அறிக்கையில் கணித்துள்ளது. கணித்துள்ளது என்பதைவிட எச்சரித்துள்ளது
என்ற சொல்லே சரியானது.
2050ல் உலகக் கடல்களில்
895 மில்லியன் டன் மீன்கள் இருந்தால், அதே கால
கட்டத்தில் கடலில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை 937 மில்லியன்
டன்னாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது மீன்களின்
எடையைவிட பிளாஸ்டிக் குப்பைகளின் எடை அதிகமாக இருக்கும்.
உலகின் பெருங்கடல்கள் தற்போது
அதிக வெதுவெதுப்பாகி, சூடாகி,
மீன்களற்ற ஓர் எதிர் காலத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன.
உலகுக்கு உணவூட்டும் ஒரு பெரிய வகிபாகத்தை நாம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.
புவி வெப்பமடைவதால் கடல்களும்
வெப்பமடைகின்றன. இதனால் மீன்கூட்டங்கள்
புதிய குளிர் நிறைந்த இடங்களைத் தேடி இடம்பெயர்கின்றன. இதனால்
அவற்றின் இனப்பெருக்க ஆற்றல் பாதிக்கப்படுகிறது. புரியாத புதிய
இடத்தில் அவை எளிதாக பிற பெரிய இரைகொல்லி மீன்களுக்கு இரையாகின்றன.
மனிதர்களின் உணவுத்தட்டுகளில்
முதன்மையாக இடம்பெறும் மீன்களான சூரை
(Tuna), அயலை, பொனிட்டோ போன்ற மீன் இனங்களின் எண்ணிக்கை
1970 முதல் 74 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளன.
‘பருவநிலை மற்றும் சூழல்
மாற்றம் போன்றவை உலக மீன்சந்தைகளின் சவப்பெட்டியில் அடிக்கப்போகும் கடைசி ஆணியாக இருக்கும்’
என மலின் எல். பின்ஸ்கி என்ற கடல்சூழல் ஆய்வாளர்
வேறு கணித்துள்ளார்.
‘நாளுக்கு நாள் தட்பவெப்பநிலை ஏறுமுகமாக இருந்தால், கடல்நீர் வெப்பமடைந்து பல்வேறு கடலுயிர்கள் வாழமுடியாத இடமாக மாறிவிடும்.
ஏராளமான கடலுயிர்கள் போதிய அளவு உயிர்க்காற்றைப் பெற முடியாத சூழ்நிலை
உருவாகும். இப்போதிருக்கும் பலவகை மீன்களை நமது வருங்கால வாரிசுகளுக்கு
நாம் கடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்’ என்கிறார் மலின் எல்.
பின்ஸ்கி.
உலகக் கடல்களில் வெறும் 13 விழுக்காடு கடற்பகுதியே இன்னும் பழைமை மாறாமல்
தூய்மை கெடாமல் இருப்பதாக நடப்பு உயிரியல் (Current Biology) என்ற அறிவியல் இதழ் கட்டுரை வரைந்துள்ளது. உலகக் கடல்களில்
மீதமுள்ள 87 விழுக்காடு பகுதி சீர்கேடை ஏற்கெனவே சந்தித்திருப்பதாக
அந்த இதழ் கூறியுள்ளது.
கடலில் தூய்மை கெடாத அந்த
13 விழுக்காடு பகுதி ஆழ்கடல்களில் அமைந்துள்ளது.
இந்தநிலையில் இந்த 13 விழுக்காடு பகுதியிலும் விரைவில்
மீன்பிடிப்புப் போட்டிகள் நடந்து அந்தப்பகுதிகளும் அழிவை எட்ட வாய்ப்பிருப்பதாக நடப்பு
உயிரியல் இதழ் கூறுகிறது.
|
வரிப்புலியன் சுறா |
பெருங்கடல்களில் உயிர்க்காற்று
என நம்மால் அழைக்கப்படும் ஆக்சிஜன் குறைந்து வருகிறது கொஞ்சம் கொஞ்சமாக அல்ல. படபடவென சரிந்து வருகிறது. இப்படி ஆக்சிஜன் குறைந்த இடங்கள் செத்த பகுதிகளாக மாறி வருகின்றன.
பெருங்கடல்களில் இதுபோல நூற்றுக்கணக்கான தண்ணீர்ப் பாலைவனங்கள் உருவாகி உள்ளன.
இதனால் பெருங்கடல்களின் மேற்பரப்பில்
மேய்ந்து திரியும் மீன் இனங்களாக சுறா, சூரை, கொப்பரன் (Marlin), மோளா
போன்ற பெரியவகை மீன்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
உலகில் இனி அடுத்து வரப்போகும்
போர்கள், எதிரி நாடுகளின் நிலத்தைக் கைப்பற்றவோ,
அவர்களது செல்வத்தை கைப்பற்றவோ நடக்காது. தண்ணீர்,
மழைமேகம் போன்றவற்றுடன் கடல்மீனுக்காகவும் போர்கள் வெடிக்கும்.
கடந்த 17 ஆண்டுகளாக ‘பயங்கரவாதத்துக்கு’
எதிராக போர் நடத்திய அமெரிக்கா கூட தனது போக்கை மாற்றிக் கொண்டு கடல்மீனுக்காக
போராடும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
2048ஆம் ஆண்டு என்பது மிக
தொலைவில் இல்லை. எனவே விழிப்புடன் இருங்கள் மக்களே. குறிப்பாக நெய்தல் நில மக்களே!