Monday 6 July 2020


சயனைடு மீன் வேட்டை

பாக்குவெட்டி
பார்க்கடலில் முக்குளிக்கும் வீரர்களுக்கு மிகவும் பரிச்சயமான மீன்களில் ஒன்று பெருந்திரளை (Humphead Wrasse). அரிய, பெரிய ஆறடி நீளமுள்ள பார்மீன் இது. (இந்த மீனைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு)
180 கிலோ வரை எடைகொண்ட இந்த மீன் மாவோரி (Maori Wrasse), நெப்போலியன் மீன் என்றெல்லாம் கூட ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தமிழில் இதற்கு பாக்குவெட்டி என்றொரு பெயர் உண்டு.
தடித்த உதடுகளைக் கொண்டிருக்கும் இந்த அழகிய பெரிய மீன்பலமான பற்களால், கடினமான ஓடுகள் கொண்ட முட்தோலிகளை முறுக்கைத் தின்பது போல நொறுக்கித் தின்னக்கூடியது. அதனால்தான் இதற்குப் பாக்குவெட்டி என்று பெயர்.

ஒரா (ஓட்டா) போன்ற நஞ்சுமீன்கள், கடமாடு, கூர்ப்பல் உள்ள அஞ்சாலை மீன்,
பார்களை வெகு விரைவாக அழிக்கக் கூடிய முள்முடி (Crown of Thorn) நட்சத்திர உயிர் போன்றவையும் பாக்குவெட்டியின் உணவு.

பெருந்திரளை எனப்படும் பாக்குவெட்டி மனிதர்களுக்கு ஆபத்தற்ற இந்த மீன், கடலுக்குள் முக்குளிப்பவர்களைக் கண்டால் இது மிக அருகில் அவர்களை உன்னிப்பாகக் கவனிக்கும். மனிதர்கள் தடவிக் கொடுப்பதையும் இது விரும்பும். பழகிய நாய் போல மனிதர்கள் கையால் தரும் உணவையும் கூட அது விரும்பி உண்ணும்.
சரி. இனி, டாரஸ் கிரெஸ்கோ என்பவர் எழுதிய டெட்சீ (Dead Sea) என்ற புத்தகத்தைப் பற்றி பார்ப்போம். அந்தப் புத்தகத்தில், மனிதர்களை நம்பி அருகில் வந்து பழகும்  இந்த பாக்குவெட்டி மீன்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுவதைப்பற்றி டாரஸ் கிரெஸ்கோ எழுதியுள்ளார்.

30 முதல் 40 ஆண்டுகாலம் உயிர்வாழக்கூடிய மீன் பாக்குவெட்டி. ஆனால் உணவுக்காக அது உயிருடன் பிடிக்கப்படுகிறது. உயிருடன் பிடித்து  விற்றால் உயர்ந்த விலை. பாக்கு வெட்டியின் தடித்த உதடுகளுக்கு தனிவிலை.

இப்படி உயிருடன் வேட்டையாடப்படும் காரணத்தால் பாக்குவெட்டிகளின் இனம் 1995ல் இருந்து 2003 வரையிலான காலகட்டத்தில், ஏற்கெனவே இருந்த நிலையில் இருந்து ஒரு விழுக்காடாகக் குறைந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார் டாரஸ் கிரெஸ்கோ. (பாக்குவெட்டி மீன் இனம் அழிந்தால் அது பவழப்பாறைகளுக்கும் ஆபத்து. காரணத்தை அறிய முந்தைய வலைப்பதிவைப் படிக்கவும்).

இரண்டாம் உலகப்போரின்போது ஆசியப் பகுதிகளுக்கு வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், கையெறி குண்டை பவழப்பாறைகளின் மேல் போட்டு ‘மீன்பிடிக்கும்’ வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார்கள். பின்னர் அது  வெடிவெடித்து மீன் பிடிக்கும் முறையாக ‘வளர்ச்சி’ கண்டது.

வெடிவெடித்து மீன் பிடிக்கும் முறையை விட ஆபத்தானது சயனைடு முறை மீன்பிடிப்பு. ஹாங்காங் தீவுக்கு எதிரே உள்ள பெட்ரோ பிளாங்கோ பவழப்பாறைப் பகுதியில் இந்த சயனைடு மீன்பிடிப்பு முறை அதிக அளவில் உள்ளது.
நச்சுநீர் தெளிப்பு
பீய்ச்சியடிக்கும் வசதி கொண்ட குப்பி ஒன்றில் சோடியம் சயனைடு வில்லைகளை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டியது. பவழப்பாறைப் பகுதியில் இந்த நஞ்சு நீரைப் பீய்ச்சியடிக்க வேண்டியது.

இதனால் மீன்கள் மலைத்துப்போய் அப்படியே ஆடாமல் அசையாமல் நிற்கும். அவற்றை வலையில் அள்ள வேண்டியது. சில மீன்கள் பாறை இடுக்குகளில் போய் ஒளிந்து கொண்டால் பாதுகாப்பான நீர்மூழ்கி உடைகளை அணிந்துகொண்டு முக்குளித்து அந்த பாறைகளை கையால் உடைத்து மீன்களைப் பிடிக்க வேண்டியது.
வெடிவெடித்து மீன்பிடிப்பதால் பவழப்பாறைகள் உடைந்து சிதறினால் கூட அவை மீண்டும் வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால், சயனைடு நீரைப் பீய்ச்சியடித்தால் எண்ணி ஏழு நாள்களில் அந்த பவழப்பாறை அழிந்து போய்விடும் என்கிறார் டாரஸ் கிரெஸ்கோ.

இப்படி பிடிக்கப்படும் ஒவ்வொரு மீனுக்கும் ஒரு சதுர மீட்டர் பவழப்பாறை காலியாகி விடும் என்கிறார் அவர்.

சயனைடு முறை மீன்பிடிப்பால் அந்த மீனில் உள்ள சயனைடு உடனே நீங்கி விடும். அதனால் மீனை உண்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் சயனைடு நீர் பரவிய பவழப்பாறை பகுதியில் மீனவர்கள் யாராவது தெரியாத்தனமாக நீந்தினால் அவருக்கு ஆபத்து உறுதி.

ஹாங்காங் தீவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள சிறிய பவழப்பாறைத் தீவு டோங்சா. ஒருகாலத்தில் இது கடல்வாழ் இளமீன்களின் மிகப்பெரிய நாற்றங்கால் பகுதியாக விளங்கிய இடம்.

இங்கே 250 டன் சயனைடு, 5 டன் டைனமைட் வெடி வைத்து அங்குல அங்குலமாக வேட்டையாடியதால் இன்று அந்த தீவுப்பகுதி ஒரு கடல் பாலைவனமாக மாறி விட்டது. மீனவர்கள் அங்கே பலநூறு மைல் பயணம் செய்தாலும்கூட ஒரேயொரு மீனைக் கூட பார்க்க முடியாது என்கிறார் டாரஸ் கிரெஸ்கோ.
அடக் கொடுமையே!

No comments :

Post a Comment