Friday, 24 July 2020


ராணிச்சங்கு (Lobatus gigas)


ராணிச் சங்கு
சங்குகளை ஆங்கிலத்தில் கோங் (Conch) என்பார்கள். நமது பெருங்கடல்களில் 60 வகையான சங்குகள் இருக்கின்றன. 
அதில் ராணிச்சங்கு (Lobatus gigas) என்பது கரிபியன் கடற்பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற சங்கு.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஃபுளோரிடா மாநிலம் முதல் பெர்முடா தீவு, பிரேசில் உள்பட பல்வேறு நாட்டுக் கடற்பகுதிகளில் ராணிச் சங்கு மிகுதி. பழங்கால கப்பல் ஒலிப்பான் போலத் தோன்றும் இந்த பிங்க் நிற அழகிய சங்கு கரிபியன் கடற்பகுதியின் பண்பாட்டில் முதன்மையான அங்கம். பகாமாஸ்நாட்டு அரசுச்சின்னத்தில் கூட ராணிச் சங்கு இடம்பிடித்துள்ளது.  
பெர்ர்ர்ரிய... சங்கு
சங்குகள் ஒரு விந்தையான உயிர்கள். அவற்றுக்கு கண்கள் உள்ளன,. ஒருவகையான மூக்கு உள்ளது. வாய் உள்ளது. ஒற்றைக்கால் உள்ளது. ஒரு குழாயின் முனையில் அமைந்துள்ள வாயில் ஒரு நாக்கும் கூட உண்டு. கடற்புற்களின் மேல் படர்ந்துள்ள கடற்பாசிகளைச் சுரண்டித் தின்ன இந்த நாக்கு பயன்படுகிறது. சங்கு அதன் கண்களை இழந்து விட்டால் அதற்கு இழப்பு ஒன்றுமில்லை. கண்கள் மீண்டும் தானாகவே வளர்ந்து விடும்.

கடல்நீரில் உள்ள கார்பனேட் அயன்களையும், கால்சியத்தையும் பயன்படுத்தி ராணிச் சங்கு அதன் அழகிய பிங்க் நிறத்தைப் பெறுகிறது. சங்குகளின் உடற்கூடு மிகவும் வலிமையானது. சிமெண்ட்டை வலுப்படுத்த இது பயன்படுகிறது. சங்கின் ‘ஒற்றைக்கால்’ கடல் தரையில் தத்தித் தத்திச் செல்ல உதவுகிறது. சங்கால் மிக வேகமாக நகர முடியாது. ஆகவே சங்கு தேடி முக்குளிப்பவர்கள் மிக எளிதாக சங்கைப் பிடித்து விடுவார்கள்.

1 comment :

  1. Is there any books contains all fish names in Tamil and English and origin . kindly send file.

    ReplyDelete