Tuesday, 7 April 2020


அழகு மீன்களுக்கு ஆபத்து

ஆபத்தின் விளிம்பில் அழகு மீன்கள்
கடலின் மழைக்காடுகள்’ என பவழப்பாறைகளைக் கூறுவார்கள். பவழப்பாறைகள் கடலடி தோட்டங்கள் என்பதுடன் அவை மிகப்பெரிய உயிர்க்கோளங்களும் கூட.உலகின் மொத்த கடல்பரப்பில் பவழப்பாறைகளின் பங்கு வெறும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவுதான். ஆனால்,கடல் மீன் இனங்களில் இருபத்தைந்து விழுக்காடு மீன் இனங்கள் பழப்பாறைகளில் அல்லது பவழப்பாறைகளை அண்டிய பகுதிகளில்தான் வாழ்கின்றன. இப்போது பவழப்பாறைகளின் முதன்மைத்தன்மை சட்டென உங்களுக்குப் புரிந்திருக்கும்.

பவழப்பாறைகளில் சுற்றித்திரியும் அழகிய சிறுமீன்களை உயிருடன் பிடித்து அவற்றை கண்ணாடித் தொட்டிகளில் அலங்கார மீன்களாக வளர்ப்பவர்களுக்கு விற்கும் தொழில் தற்போது உலக அளவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மிகப்பெரிய உணவகங்கள், மருத்துவமனைகள், வணிக அங்காடிகளில், பெரிய பெரிய  கண்ணாடித் தொட்டிகளில் இந்த மீன்கள் உயிருள்ள காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றன. பரந்து விரிந்த பவழப்பாறைகளில் நீந்தித் திரிந்த மீன்கள், கண்ணாடித் தொட்டிகளே உலகம் என்று வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இப்படி பவழப்பாறை வண்ண மீன்களை உயிருடன் பிடித்து ஏற்றுமதி செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்த முதல் நாடு பிலிப்பைன்ஸ் நாடுதான். பசிபிக் கடல்நாடான பிலிப்பைன்சில், பவழப்பாறை மீன்களை உயிருடன் பிடிப்பதற்காக சோடியம் சயனைடு என்ற ஆபத்தான பொருளை அந்த நாட்டு நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சோடியம் சயனைடு வில்லையை, பீய்ச்சியடிக்கும் வசதியுள்ள ஒரு குப்பியில் இட்டு நீரில் கரைத்து, அந்த குப்பியுடன் இவர்கள் கடலில் இறங்குவார்கள்.
பீய்ச்சப்படுகிறது நச்சுநீர்
வண்ண மீன் ஒன்றைக் கண்டால் அதன்மீது இந்த சோடியம் சயனைடு கலந்த நீரை பீய்ச்சுவார்கள். அந்த நீர் பட்டதும் மீன் ஆடாமல் அசையால் சிலைபோல நிற்கும். அப்போது சிறியவலை அல்லது வெறும் கையால் கூட மீனைப்பிடித்து அதற்கென உள்ள கண்ணாடிப் பாத்திரத்தில் அதை சிறைப்படுத்தி விடுவார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆயிரம் டன் வரை இந்த வகை அலங்கார பார்மீன்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உணவுக்காகப் பிடிக்கப்படும் ஒரு கடல்மீனின் விலையைவிட இந்த அலங்கார பவழப்பாறை மீன்களின் விலை ஐந்து மடங்கு அதிகம். தூண்டில் பயன்படுத்தி அடுத்தடுத்து 2 மீன்களைப் பிடிக்கும் நேரத்தில், நீரில் முக்குளித்து சோடியம் சயனைடைப் பயன்படுத்தி 12 மீன்களை உயிருடன் பிடித்துவிடலாம். ஆகவே, இந்தத் தொழில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படகுகள் மூலம் திருட்டுத்தனமாகவும் வெளிநாடுகளுக்கு மீன்கள் கடத்தப்படுகின்றன.
சிலவேளைகளில் உயிருள்ள அலங்கார மீன்கள் மட்டுமின்றி களவா (Grouper) போன்ற உண்ணத்தகுந்த பார்மீன்களும் சோடியம் சயனைடு கலந்த நீரைத்தூவி உயிருடன் பிடிக்கப்படுகின்றன. ஓர் உணவுத்தட்டின் அளவுக்கு உள்ள பெரிய உயிருள்ள மீனை சுடச்சுட சமைத்து சீனர்கள் விரும்பி உண்பார்கள், அதற்கு விலையும் அதிகம். இதனால் பார்மீன்களான களவா போன்றவையும் உயிருடன் பிடிக்கப்படுகின்றன.
சோடியம் சயனைடு கலந்த நீரினால் திக்குமுக்காடிப்போய் பிடிபடும் களவா போன்ற மீன்கள் சயனைடு கலந்த நீரை கக்கிவிடும் என்பதால் அதை உண்ணும் மனிதர்களுக்கு சயனைடால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
ஃபைண்டிங் நெமோ படத்தில் ஒரு காட்சி
பவழப்பாறைகளில் வாழும் அலங்கார மீன்களில் 98 விழுக்காடு மீன்களை தொட்டிகளில் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய முடியாது. அவை கடலில், அவற்றின் சொந்த உயிர்ச்சூழலில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். எனவே நேரடியாக கடலில் இருந்து அவை அளவுக்கதிகமாகப் பிடிக்கப்படுகின்றன.
கடந்த அரை நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாடு மட்டும் மில்லியன் கிலோ சோடியம் சயனைடை அந்த நாட்டுப் பவழப்பாறைகளில் கலந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இப்படி சோடியம் சயனைடை கடலில் பீய்ச்சியடிப்பதால் பவழப்பாறைகள், பாசியினங்கள் பெரிய அளவில் பாதிப்படைகின்றன. ஓர் உயிருள்ள மீனை பிடிப்பதற்காகப் பீய்ச்சியடிக்கப்படும் சோடியம் சயனைடால் ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள பவழப்பாறைகள் அழிவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டைப் பின்பற்றி உலக அளவில் பல்வேறு நாடுகள் இப்படி சோடியம் சயனைடைப் பயன்படுத்தி அலங்கார பவழப்பாறை மீன்களை உயிருடன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடல் சூழல்சீர்கேடு அடைந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி வருகிறது.

No comments :

Post a Comment