Thursday, 9 July 2020


கடலின் கோழி

கடல் அட்டைகள் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவு உண்டு. இது கூடுதல் பதிவு.
கடல் அட்டைகளைப் பார்த்தால் ஏதோ அவை முள்ளெலிக்கும், கத்தரிக்காய்க்கும் பிறந்த விந்தையான உயிர் போலத் தோன்றும். அவற்றைக் கையில் பிடித்தால் சட்டென சுருங்கிக் கொள்ளும். இன்னும் சீண்டினால், குடல் உள்பட உடலின் உள்ளிருக்கும் அனைத்து உறுப்புகளையும் நமக்கு அன்பளிப்பாக வெளியே தள்ளிவிடும்.

இதுஒரு வகை தந்திரம்தான். பூனை பல்லியைப் பிடிக்கும்போது பல்லி அதன் வாலை கழற்றிவிடும் ஓடுவதும், துடிக்கும் அந்த வாலை காலால் பிடித்தபடி பூனை ஏமாந்து நிற்பதும் இயல்பு இல்லையா? அதைப்போல தன்னை உண்ண வரும் கடலுயிர்களிடம் இருந்து தப்பவே கடல் அட்டை இப்படி குடலை வெளியே தள்ளுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கடற்பறவை கடல் அட்டையை உண்ண முயன்றால் இந்தவகை தந்திரத்தை கடல்அட்டை கடைபிடிக்கும். கடல் அட்டையின் சுவையான குடலை இரையாக உண்ணும் கடற்பறவை அட்டைடையை விட்டுவிடும். இழந்த குடலுறுப்புகள் கடல் அட்டைக்கு மீண்டும் வளர்ந்து விடும்.

கடல்அட்டையால் மனிதர்கள் அடையும் பயன்கள் என்னென்ன? வெறும் ருசியான உணவாக மட்டுமில்லாமல் பற்பசை, மசாஜ் கிரீம், குளிர்பானம் போன்ற பல வடிவங்களில் கடல் அட்டைகள் பயன்படுகின்றன. ஸ்பெயின் நாட்டின் கேடலோனியா பகுதியில் கடல் அட்டையை சுட்டுச் சாப்பிடுவார்கள். இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் கடல்அட்டை, ‘கடலின் கோழி’ என அழைக்கப்படுகிறது.



சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆடம்பர உணவகங்களில், மிகமிக விலை உயர்ந்த உணவாக, கடல்அட்டைகள் சேவையாற்றுகின்றன. இதனால்தான் இந்தியா, பிலிப்பின்ஸ், எகிப்து போன்ற நாடுகளில் கடல்தரையை ஆராய்ந்து அதிக அளவில் கடல்அட்டைகள் பிடிக்கப்படுகின்றன. தென்பசிபிக் கடல் அடியில் வாழ்ந்த அட்டைகள் சூறையாடப்பட்ட பிறகு இப்போகு குலேபகாஸ் தீவுப்பகுதியில் கடல் அட்டைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. 1992ஆம் ஆண்டுவாக்கில் தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் 30 மில்லியன் கடல்அட்டைகள் அள்ளப்பட்டிருக்கின்றன. மீன்கள், கடற்பறவைகளின் முதன்மை உணவான கடல்அட்டைகள் இப்படி கண்டபடி களவாடப்படுவது எதிர்காலத்தில், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

-டாரஸ் கிரெஸ்கோ எழுதிய ‘டெட்சீஸ்’ என்ற நூலில் இருந்து

No comments :

Post a Comment