Thursday, 4 April 2019


அயலை (Indian Mackerel)

கூட்டமாக ஓர் உலா
தென்பாண்டி நாடான திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கும், கேரளத்துக்கும் இடையே எப்போதும் ஒரு விட்ட குறை தொட்ட குறை உறவு உண்டு
கேரளம் பழங்கால சேரநாடு என்பதால் இவ்விரு பகுதிகளிலும் வாழும் உயிரினங்களின் பெயர்கள் ஒன்றுபோலவே இருக்கும்.
எடுத்துக்காட்டாக கடம்பை எனப்படும் கடமானை எடுத்துக் கொள்வோம். கேரளத்தில் இந்த மானின் பெயர் மிளவு. திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இந்த மானின் பெயர் மிளா
அதேப்போல சருகுமானுக்குக் கேரளத்தில் புழங்கும் பெயர் கூரான். நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கூட இந்தமானுக்கு இதே பெயர்தான்.
சரி. மீனைப் பற்றி பேச வேண்டிய இடத்தில் ஏன் மானைப்பற்றி பேச வேண்டும் என்ற கேள்வி எழலாம். அயலை என தென்பாண்டி மற்றும் தென்கடலோர பகுதிகளில் அழைக்கப்படும் மீனுக்கு கேரளத்தில் வழங்கும் பெயர் அய்லா.
ஆனால், இதே மீனுக்கு சென்னை போன்ற வடதமிழகப் பகுதிகளில் கானாங்கெழுத்தி என்பது பெயர். (தமிழில் ‘ய’வுக்கு ‘ச’ போலி என்பதால் அயலையை அசலை என்பவர்களும் இருக்கிறார்கள்)
கானாங்கெழுத்தி என்பது மேக்கரல் (Mackerel) வகையைச் சேர்ந்த பலவகை மீன்களுக்கான பொதுப்பெயர். (கெழுத்தி குடும்பத்தைச் சேராத சூரை குடும்பத்தைச் சேர்ந்த இந்தவகை மீன்களுக்கு ஏன் கானாங்கெழுத்தி என்ற பெயர் வந்தது என்பது ஆய்வுக்குரியது.)
இந்த மேக்கரல் வகை மீன்களில் ஒன்றுதான் அயலை. இந்த மீனுக்கு பங்கடை என்ற பெயரும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அயலை அதன் குடும்பத்தின் பெரியண்ணன்களான சூரையைப் போல மிகப்பெரிதாக வளரும் மீன் அல்ல. அயலை ஓரடிக்கும் சற்று குறைவாக வளரும். சில அயலைகள் ஓரடியைத் தாண்டி 35 அல்லது 38 செ.மீ. நீளம் வரை கூட வளரலாம்.
அயலை மிதமான தட்டைவடிவ உடலைக் கொண்ட மீன்.
அயலை

அயலையின் செவுள்திறப்புக்கு பின்புறம் கொஞ்சம் செதிள்கள் இருக்கும். கன்னச்செவிப்பக்கம் உள்ள தூவிக்கு அருகே கருப்புநிற புள்ளி கிடக்கும். உடலின் மேற்பகுதியில் நீளவாக்கில் சிறு பட்டைகள், கோடுகள், புள்ளிகள் தென்படும்.
அயலையின் மேல் பகுதியில் தெரிவது போல, வானத்தில் சிறுவெண்மேகக் கூட்டம் தவழ்ந்தால் அதை ‘மேக்கரல் ஸ்கை’ (Mackerel Sky) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
அயலையின் முதுகுத்தூவி, கன்னத்தூவி, வால்தூவி போன்றவை மஞ்சள் நிறமாகத் திகழும். முதுகுத்தூவியின் நுனிகள் கருப்பு நிறத்தில் தோய்த்து எடுத்ததைப் போலத் தோன்றும். மற்ற தூவிகள் சற்று கருநிறம் கொண்டவை. தூவிகளின் நிறங்கள் இடத்துக்கு ஏற்ப மாறுபடவும் வாய்ப்புண்டு.
அயலை மீனின் சதை, மற்ற சூரை இன மீன்களின் சதைகளைப் போல முரடாக இல்லாமல் மென்மையாக, இளம்சதையாக இருக்கும். அயலை மீனின் அடிப்புறச் சதை கருப்புநிறமாக இருக்கும் என சிலர் கூறுவார்கள்.
வாயைத் திறந்தபடி நீச்சல்
வளர்ந்த அயலை மீன்கள் சிறு கூட்டமாக கடலில் திரியும். அயலைகள் நீந்தும்போது வாயை அகலத்திறந்து வைத்துக் கொண்டு நீந்தும். அதன்மூலம் கடல்நீரில் உள்ள மிதக்கும் நுண்ணுயிர்களான கவுர்களை வாயால் அரித்து இவை உணவாக்கிக் கொள்ளும். ஆனால் இளம் அயலைமீன்கள் சிறுமீன்கள், கடல் உயிர்களை உணவாகக் கொள்ளக் கூடியவை.
அயலை மீன் அதன் முட்டைகளை வெளியிட்ட பிறகு அந்த முட்டைகள் வெளியில் கருவுறக் கூடியவை. முட்டைகளில் இருந்து வெளிவரும் அயலைக் குஞ்சுகளை தாய்மீன் பேணிக் காப்பாற்றாது. குஞ்சுகள் அவற்றின் போக்கில் வளர்ந்து கொள்ள விட்டுவிடும்.
அயலை இந்தியப் பெருங்கடல், மேற்கு பசிபிக் கடற்பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் மீன். தெற்காசிய நாடுகளில் அதிகம் பிடிக்கப்பட்டு, மக்களால் அதிகம் உண்ணப்படும் மீன்களில் அயலையும் ஒன்று. Rastrelliger kanagurta என்பது அயலை மீனின் அறிவியல் பெயர்.

No comments :

Post a Comment