Wednesday, 10 April 2019


வஞ்சிரமும் சீலாவும்

வஞ்சிரம்
வஞ்சிரம் மீனை சிலர் சீலா மீன் னக் குறிப்பிடுவதைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறு இன மீன்கள். வஞ்சிரத்துக்கும், சீலாவுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன.
சீலாவின் பற்கள் மிகக் கூர்மையானவை. கத்தி
போல வளைந்த எதிர்புதிர் கூர்பற்கள் சீலாவுக்கு உண்டு. வஞ்சிரத்துக்கு சிறிய முக்கோண வடிவ பற்கள் மட்டுமே உண்டு.

சீலாவுக்கு கூரான தாடை உண்டு. அதிலும் சீலாவின் கீழ்த்தாடை மேல்தாடையை விட சற்று முன்னோக்கித் துருத்திக் கொண்டிருக்கும். ஆனால் வஞ்சிரத்துக்கு அதுபோன்ற முன்துருத்திய தாடை இல்லை.
சீலாவின் உடலில் மடவை (Mullet) மீனுக்கு இருப்பதைப் போல செதிள்கள் காணப்படும். வஞ்சிரத்துக்கோ நம் பார்வையில் படும்படி செதிள்கள் இருக்காது. வெறும் தோல் கொண்ட மீன் போலவே வஞ்சிரம் தோன்றும்.
வஞ்சிரத்தின் வால் பெரியது. கவடு போல பிளந்தது. வஞ்சிரத்துடன் ஒப்பிடும்போது சீலாவின் வால் சிறியது.
சீலாவுக்குப் பெரிய கண்கள். வஞ்சிரத்துக்கோ சிறிய கண்கள்.
சீலா மிகப்பெரிய வேட்டையாடி மீன். வஞ்சிரமும் கூட ஒரு  கொன்றுண்ணி மீன்தான் என்றாலும் சீலா அளவுக்கு வஞ்சிரம் பெரிய வேட்டையாடி மீன் அல்ல.
இன்னும் கூறப்போனால் சீலா மீன், வஞ்சிரத்தின் இயற்கையான எதிரியும் கூட. கடலில் வஞ்சிரத்தைக் கண்டால் சீலா அதை விரட்டி வேட்டையாடி உணவாக்கிக் கொள்ளும்.

சீலா
கடலுயிர் அருங்காட்சியகம் ஒன்றில், ஓர் ஆய்வு நடவடிக்கைக்கா சீலாவையும்,   வஞ்சிரத்தையும் ஒரே தொட்டியில் விட்டார்கள். இவை இரண்டுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய கண்ணாடித் தடுப்பை ஏற்படுத்தினார்கள்.
நடுவில் தடுப்பு இருப்பது தெரியாமல் ஒவ்வொருமுறையும் வஞ்சிரத்தைப் பிடிக்க முயன்று சீலா, கண்ணாடிச் சுவரில் மோதிக் கொண்டது. ஒவ்வொரு முறையும் அதன் தாடை கண்ணாடியில் மோதி மோதி வலியை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் வஞ்சிரத்தை நோக்கிப் பாய்ந்து கண்ணாடிச்சுவரில் முட்டிக் கொள்வதை சீலா நிறுத்திக் கொண்டது.
அதன்பின் இந்த இருமீன்களுக்கும் இடையில் இருந்த கண்ணாடிச்சுவர் விலக்கிக் கொள்ளப்பட்டது. என்ன வியப்பு? சீலா அதன்பிறகும் கூட வஞ்சிரம் மீனைக் கொல்லத் துணியவில்லை. இரு மீன்களும் நீண்டகாலம் அந்த தொட்டியில் அமைதியாக வாழ்ந்தன.

No comments :

Post a Comment