Wednesday, 3 April 2019


நெய்தல் தாவரங்கள்

நெய்தல் மலர்
கடலும் கடல்சார்ந்த பகுதியும் நெய்தல் என அழைக்கப்படுவது தெரிந்ததே. இந்த நெய்தல் நிலத்துக்கு உரித்தான சில தாவரங்கள் உள்ளன.
ஒரு காலத்தில் தமிழக கடற்கரைகளில் புன்னையும், தாழையும் செழித்திருந்தன. புன்னை மரம் கப்பல் கட்டப் பயன்பட்டது. தாழைகள் மலர்ந்து கடற்கரைகள் எங்கும் கமகமவென நறுமணம் வீசின. இன்று புன்னை மரம் இல்லாமல் போய், புன்னைக்காயல் என்ற ஊரின் பெயரில் மட்டும் புன்னை இருக்கிறது. அதுபோல, தாழையும்கூட, பெரிய தாழை, நம்புதாழை, வேதாழை, கூடுதாழை என்று ஊர்களின் பெயர்களில் மட்டுமே இன்று உயிர் வாழ்கிறது. தாழை மரத்தின் இன்னொரு பெயர் கைதை.
தென்னையும், பனையும் கூட கடலோரம் வாழக்கூடிய தாவரங்கள்தான். இந்த வரிசையில் இடம்பெறக் கூடிய இன்னும் சில மரங்கள் ஈச்சை மரம், புங்கை மரம், பூவரசு மரம், வேப்பமரம் (வேம்பு), கீரி மரம், பாலை மரம், வேளை மரம், கண்ணா மரம், வாகை மரம், விராலி மரம், ஒதிய மரம், கிழுவை மரம், சாதாளை, ஊழ்நெல்லி, கறுவா, இலந்தை.
கடற்கரைத் தாவர வகைகளில் வாட்டாளை, கிளாச்சி, இசங்கு, வீறி, தொண்டைக்கொடி, கழிமுள்ளி, சீந்தில், அடம்பன், கோழித்துவரை, கொழுஞ்சி, கீரைக்கிழங்கு, பிஞ்சா, தில்லை, தண்ணீர்க்கீரை, பேய்க்கொமுட்டி, குன்றின்மணி போன்றவையும் அடக்கம்.
அலையாத்தி காடுகளைப் பொறுத்தவரை அங்கு 39 வகையான தாவரங்களைக் குறிப்பிடலாம்.
சுரபுன்னை, மலட்டு சுரபுன்னை, மங்கல், தில்லை, திப்பரத்தை, கண்டல், நரி கண்டல், வெண் கண்டல்,  கருங்கண்டல், சிறு கண்டல், பன்னிக்குச்சி அல்லது பன்னுக்குத்தி, கழுதை முள்ளி, சோமுந்திரி, சோழிக்கால், வங்காவாசி, உமுறி, காலகந்தன் போன்றவை அலையாத்தி தாவரங்களில் சில.
கடலோரங்களில் உள்ள தேரிகள் என்னும் சிறிய மணல்மேடுகளை, காற்றில் கரைந்து விடாமல் அவற்றை கயறு போல அப்படியே கட்டிப்போட்டுக் காப்பதில் ராவணன் மீசை என்ற கழிமுள்ளி பெரும்பங்கு வகிக்கிறது.

No comments :

Post a Comment