வஞ்சிரம் (Narrow barred Spanish Mackerel)
|
வஞ்சிரம் |
தமிழ் கூறும் நல்லுலகில் வஞ்சிரம் என்ற மீனின் பெயரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. கடல்மீன்களில் புகழ்பூத்த தாரகையாக மிகவும் மெச்சிப் போற்றப்படும் மீன் இது. கடல்மீன்களில் மிக விலையுயர்ந்த சுவை நிறைந்த மீன்களில் வஞ்சிரமும் ஒன்று
அயலையைப் போல வஞ்சிரமும் மேக்கரல் வகையைச் சேர்ந்த மீன்தான்.
இந்தியன் மேக்கரல் என அயலை மீன் அழைக்கப்படுவது போல ‘ஸ்பானிஷ் மேக்கரல்‘ என்ற பெயரால் வஞ்சிரம் அழைக்கப்படுகிறது.
‘ஸ்பானிஷ் மேக்கரல்’ மீன்களில் அட்லாண்டிக் ஸ்பானிஷ் மேக்கரல் உள்பட பல்வகை வஞ்சிரம் மீன்கள் இருக்கும்நிலையில், இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் குறுகிய பட்டைகள் கொண்ட ஸ்பானிஷ் மேக்கரல்
மீனினம் ஒன்று வாழ்கிறது.. ஆங்கிலத்தில் இதை Narrow barred Spanish Mackerel என்று அழைக்கிறார்கள். அதை நாம் இங்கே வஞ்சிரம் என்று அழைக்கிறோம்.
வஞ்சிரத்துக்கு அறுக்குளா, மாவுலாசி போன்ற பெயர்களும் உள்ளன. கேரளத்தின் தென்பகுதியில் இதன் பெயர் நெய்மீன். கேரள வடபகுதியில்
இதன் பெயர் அயக்கூரா.
தமிழில் வஞ்சிரம் என்ற இந்த
மீனின் பெயர் நெடும்பஞ்சூரன், வஞ்சூரன் என்று பெயர்களில் இருந்து மருவி வந்திருக்கலாம் என்று ஒரு கணிப்பு உண்டு. வஞ்சூரன் என்ற பெயர் இது சூரை குடும்பத்து மீன் என்பதைச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது.
சிலர் வஞ்சிரமும் சீலா மீனும் ஒன்றுதான் என்று கூறுவார்கள். இப்படி கூறுவது முழுக்க தவறானதுமல்ல. முற்ற முழுக்க சரியானதும் அல்ல.
சீலா என்பது ஆங்கிலத்தில் பாரகுடா (Barracuda) என அழைக்கப்படும் மீன் இனம். (நம் வலைப்பூவில் சீலா பற்றிய பதிவு உண்டு)
வஞ்சிரமோ நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல மேக்கரல் வகையைச் சேர்ந்த, ஸ்கோம்பிரிடே (Scombridae) குடும்பத்து மீன்.
ஆனால், நமது தமிழகக் கடல்களில் சுற்றித்திரியும் வஞ்சிரத்துக்கு (Narrow barred Spanish Mackerel)
நெட்டையன் சீலா என்று ஒரு பெயரும் உண்டு. ஆகவே, வஞ்சிரத்தை சீலா என சிலர் அழைப்பது முழுக்க தவறாகாது.
நெட்டையன் சீலா என அழைக்கப்படும் நமது வஞ்சிரம் 38 முதல் 70 கிலோ வரை எடையிருக்கக் கூடியது. 200 செ.மீ. நீளத்துக்கு, அதாவது ஆறடி நீளத்துக்கும் மேல் வளரக் கூடியது. ஆண் மீனை விட பெண் மீன் பெரிதாக இருக்கும்.
|
விரட்டி வேட்டை... |
சீலாவைப் போலவே வஞ்சிரமும் வெள்ளிநிறம் தோய்ந்த உடலைக் கொண்டது. வஞ்சிரத்தின் உடல் மங்கலான நீலம் கலந்த அடர்பழுப்பு நிறமாகத் தோன்றும். அடிவயிற்றை நோக்கி வரும்போது நிறம் வெளிறும். மீனின் இருபக்க அடிப்புறங்களிலும் பட்டையான செங்குத்து கோடுகள் காணப்படும். வஞ்சிரத்தின் வால் சற்றுப் பெரிதாக
கவடு போலப் பிளந்திருக்கும்.
வஞ்சிரம் மீன், கண்டச்சுவர்களின் அருகிலும், மிதமான பார்ச்சரிவுப்பகுதிகளிலும் காணப்படும். உப்புத்தன்மை குறைந்த கலங்கலான கடல்பகுதிகளில் இது விரும்பி வாழும்.
நெத்தலி போன்ற மீன்களே வஞ்சிரத்தின் முதன்மை உணவு. மீன்களுடன் ஒப்பிடும் போது குறைவான அளவில் இறால், கணவாய்களையும் இது உணவாகக் கொள்ளும். வஞ்சிரத்தின் முதன்மை எதிரி சீலா மீன்தான்.
ஸ்கோம்பிரோமோரஸ் காமர்சன் (Scomberomorous Commerson) என்பது வஞ்சிரத்தின் (Narrow barred Spanish Mackerel) அறிவியல் பெயர்.
ஆங்கிலத்தில் Seer Fish, King Fish எனவும் வஞ்சிரம் பெருமையுடன் அழைக்கப்படுகிறது.