வாள்மீன் (SWORD FISH)
வாள்மீன் |
கொப்பரக்குல்லா எனப்படும்
கொப்பரனில் கருங்கொப்பரன், நீலக் கொப்பரன், வரிக்
கொப்பரன், வெண் கொப்பரன் என நான்கு வகைகள். கொப்பரக்குல்லா,
தளப்பத்து மீனை விட நீளம் அதிகமானது என்பதுடன் கொப்பரக்குல்லாவின் தலையில்
சிறுதூவி உண்டு. தளப்பத்துக்கோ முதுகில் பெரிய படகுப்பாய் போன்ற தூவி உண்டு.
மயில், அதன் தோகையை விரிப்பது போல இந்த பாய்த்தூவியை விரிக்கவோ மடக்கவோ
தளப்பத்தால் முடியும்.
ஆனால் நாம் இப்போது பேச
வந்திருப்பது கொப்பரக்குல்லாவையோ, அல்லது தளப்பத்தையோ பற்றி அல்ல. (இவற்றைப்
பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு.)
Swordfish என அழைக்கப்படும் வாள்மீனைப், (Xiphias
gladius) பற்றித்தான் இப்போது நாம் பேச வந்திருக்கிறோம்.
வாள்மீன், தளப்பத்து, கொப்பரக்குல்லா போன்ற
மீன்களுடன் சேராத
தனி வகை மீன் இனம் ஆகும். Xiphiidae என்ற குடும்பத்தில் உள்ள ஒரே ஒர் உறுப்பினர் இந்த
வாள் மீன் மட்டும்தான். வாள் மீனுக்கு செதிள்கள் கிடையாது. இதர மூக்கு நீண்ட
மீன்களுக்கும் வாள்மீனுக்கும் உள்ள முதன்மை வேறுபாடு இதுதான்.
வாள்மீன்கள் 5 முதல் 14 அடி நீளம்
கொண்டவை. 46 கிலோ முதல் 536 கிலோ வரை எடையுள்ளவை.
வாள்மீனின் ஈட்டி போன்ற மூக்கு
மிகவும் நீளமானது. தளப்பத்து, கொப்பரான் மீன்களின் கூர்ஈட்டி முனைகளைவிட
வாள்மீனின் வாய்ஈட்டியே வலிமையானது. இதன் அறிவியல் பெயரில் உள்ள gladius என்ற சொல் இலத்தீன் மொழியில் வாளைக்குறிக்கிறது.
மீனின் மொத்த எடையில் இந்த ஈட்டியின்
பங்கு மட்டும் 20 முதல் 30 விழுக்காடு. அகன்ற, தட்டையான இதன் ஈட்டி மூக்கு முழுக்க
முழுக்க தற்காப்புக்கானது. ஆனால், இரையைத் தாக்கவும் இந்த ஈட்டிமூக்கை வாள் மீன்
பயன்படுத்தும்.
அதுபோல வாள் மீனுக்குப் பற்கள்
கிடையாது. இதனால் இரையைக் கடிக்காமல், ஒரே விழுங்காக வாள் மீன் விழுங்கி வைக்கும்.
எல்சால்வடார் நாட்டு அஞ்சல்தலை |
சூரை, வெங்கணா, கணவாய் போன்றவை
வாள்மீனின் முதன்மை உணவு. ஆனால், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து வகை
இரைகளையும் தனதாக்கிக் கொள்ள வாள்மீன் முயற்சிக்கும். சிறிய வகை
திமிங்கிலங்களையும் கூட வாள்மீன் தாக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது.
தனது கூரிய ஈட்டியால் இரைமீனை
குத்துவதற்குப் பதிலாக வாள்மீன் வெட்டும். இந்த வெட்டு காரணமாக இரைமீன் காயமடைந்து
ஓடமுடியாமல் தவிக்கும்போது அதை மேலும் துண்டாடி வாள்மீன் விழுங்கும்.
முதிர்ந்த வாள் மீனுக்கு முதுகில்
பின்னோக்கி வளைந்த நீண்ட தூவி உண்டு. இந்த முதுகுத் தூவி மென்மயிர்களால் ஆனது. இந்த
தூவி, வணங்காமுடியாக எப்போதும் நிமிர்ந்து
நிற்கக் கூடியது. இதை தேவைக்கேற்ப விரிக்கவோ மடக்கவோ வாள்மீனால் முடியாது. முதுகின்
பின்புறம் சிறிய மற்றொரு முதுகுத்தூவியும் உண்டு.
வாள்மீனின் முதுகும், உடலில்
இருபகுதி மேற்புறங்களும் கரிய தாமிரம் போலத் திகழும். உடலின் அடிப்புறம் கிரீம் நிறம்.
முதுக்குத்தூவிகள், கன்னத்தூவிகள், அடிப்புறத்தூவிகள் யாவும் அடர்வண்ணம் கொண்டவை.
வாள்மீனின் கண்கள் சற்றுப்பெரியவை.
பெரிய விழிகள் காரணமாக கரிய இருளிலும், வாள்மீனால்
பார்க்க முடியும். கொழுப்புச் சத்து நிறைந்த வாள்மீனின் உடல், அதிக ஆழத்தில் கூட
முக்குளித்து இரையை வேட்டையாட உதவுகிறது.
வாள்மீனின் விழிகளுக்கு அருகில் உள்ள
சிறிய தசைத்திசுக்கள் மூளையுடன் தொடர்புடையவை. இதனால் குளிர்ந்த கடலிலும் கூட தனது
உடல் வெப்பத்தை வாள்மீனால் தக்கவைத்து, கதகதப்பாக்கிக் கொள்ள முடியும். இந்த
தசைத்திசுக்களின் உதவியால் விழிகளைச் சூடாக்கி, அடியாழத்தில் கூட, விழிகளின்
பார்வைத்திறனையும் வாள்மீனால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மிக ஆழத்தில், குறைந்த அளவு
உயிர்க்காற்றைப் பயன்படுத்தி வாள்மீன் இயங்கக்கூடியது.
இரவில் இது செங்குத்தாக மேலே எழுந்து
கடல்மட்டம் நோக்கி இரைதேடி வரக்கூடியது. இரவில் இரையுண்ணக் கூடியது.
வாள்மீன் கடலைவிட்டு அடிக்கடி
துள்ளிப்பாயும். மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். அந்தவகையில்
கொப்பரான் மீன்களுக்கு அடுத்தபடி கடலில் மிகவிரைவாக நீந்தும் மீன் வாள்மீன்தான்.
வாள்மீன் கடலில் மேற்பரப்பில் நீந்திவரும்போது
அதன் வளைந்த முதுகுத்தூவி கண்டிப்பாக பார்ப்பவர்களின் கண்களில் தட்டுப்படும்.
தூண்டில் மீனாக மீனவர்களிடம் இது சிக்கும்.
துள்ளி..துள்ளி.. |
தூண்டிலில் சிக்கும் வாள்மீன்கள்
மிகவும் கடுமையாக 4 மணிநேரம் வரை போராடும். நீருக்கு மேலே துள்ளிக்குதித்து
தப்பிக்கப் பார்க்கும். சிறிய ஓய்வுக்குப்பின் மீண்டும் புத்துணர்வு பெற்று போராட்டத்தைத்
தொடரும். வாள்மீனின் வாய் மென்மையானது என்பதால் தூண்டில் மாட்டி, இதன்
வாய்கிழிந்து விட வாய்ப்புண்டு.
வாள்மீன்களில் ஆணை விட பெண்ணே
பெரியது.
நீண்ட ஈட்டிமூக்கு காரணமாக
வாள்மீனுக்கு எதிரிகள் குறைவு. எனினும் குறிப்பிட்ட வகை சுறாக்கள், பெரிய கருப்பன்
எனப்படும் கில்லர்வேல் (Killerwhale) ஓங்கல்களால் வாள்மீனுக்கு ஆபத்து உண்டு.
அதிலும் மேக்கோ (Mako) வகை சுறா,
அதன் வேகம் மற்றும் கூர்மையான பல அடுக்குப் பல்வரிசையால் வாள்மீனை வெற்றி கொள்ள
வாய்ப்புண்டு. இந்தப் போராட்டத்தின் போது வாள்மீனின் ஈட்டிமுனை மேகோ சுறாவின்
தலையில் பாய்ந்து முறிய வாய்ப்புண்டு. அப்படி
தலையில் பதிந்து முறிந்த ஈட்டியைப்
பதக்கம் போல சூடிக்கொண்டு மேகோ சுறாக்கள் கடலில் வலம் வருவதும் உண்டு.
No comments :
Post a Comment