Thursday, 21 March 2019


திரவி (Spade fish)
 
வட்டத் திரவி
திரவி மீன்கள், எபிபிடே (Ephippidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை வெப்பக்கடல் மீன்கள். அரிதாக குளிர்ந்த கடல்களிலும் இந்த வகை மீன்கள் காணப்படும்.

திரவி மீன் வகைகளில் ஒன்று வட்டத்திரவி (Ephippus orbis). இதற்கு நல்லதொரத்தீ என்ற பெயரும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திரவியில் மற்றொன்று வண்ணாத்தி (Angel) மீனைப் போன்ற தோற்றம் கொண்ட அழகிய மீன்.
திரவி மீன்கள் தட்டுபோன்ற உடலமைப்பைக் கொண்டவை. கடலடியில் சிறுகூட்டமாகத் திரியும் மீன்கள் இவை.
திரவிகளின் வாய் மிகவும் சிறியது. தூண்டிலில் உள்ள இரைகளைத் தின்பதிலும், இரை கிடைக்கும் இடத்தில் காக்கைக் கூட்டம் போலத் திரள்வதிலும் திரவிகள் கைதேர்ந்தவை.
திரவியின் வாய் சிறியது என்பதால் இவற்றால் மனிதர்களைக் கடிக்க முடியாது. மனிதர்களின் உடலை கிள்ள அல்லது உடலில் உள்ள முடியைப் பிடித்து இழுக்க மட்டுமே இந்த மீனால் முடியும்.
திரவி மீன்கள் அனைத்துண்ணிகள். அதாவது கடல்சிற்றுயிர்களுடன் பாசிகள் போன்ற தாவர உயிர்களையும் இவை தின்னக் கூடியவை.
சிறிய சொரி (Jelly) மீன்களையும் திரவிகள் உண்ணும். ஆமைகளுக்கு அடுத்தபடி சொரி மீன்களை உண்ணும் கடலுயிர் திரவிதான்.
கடற்பஞ்சு, கடல்புழுக்கள், மென்மையான பவழம், பாசி, நண்டு, இறால் போன்றவற்றின் லார்வாக்கள் போன்றவற்றையும் திரவிகள் தின்னும்.
திரவிகளைத் தூண்டிலில் பிடிக்க சிறந்த இரை மட்டி (Clam) சதை. அல்லது நண்டு, இறால் இவற்றின் சதை.
திரவிகளில் ஒருவகைத் திரவி, பார்வைக்கு வண்ணாத்தி மீனைப் போல இருந்தாலும், இவற்றுக்கு இரு முதுகுத்தூவிகள் இருக்கும். (வண்ணாத்தி மீனுக்கு முதுகில் ஒரேஒரு தூவி மட்டுமே உண்டு)
இந்த வகை திரவியின் முதுகு முன்பக்க முதல்தூவியில் முட்கள் இருக்கும். அதையடுத்த பின்புற முதுகுத்தூவியில் மென்கதிர்கள் காணப்படும். அதிலும் பின்புற முதுகுத்தூவியின் முதலிரு இழைகள் மிகவும் நீளமானவை.  சிலவேளைகளில் மீனின் வாலையும் தாண்டி, இவை நீளமாகத் திகழும். முதுகின் பின்புறத் தூவியைப் போலவே அதே வடிவத்தில் மீனின் அடிப்புறத்திலும் அதேப்போன்ற தூவி அமைந்திருக்கும்.
இந்த வகை திரவியில் இளம் வயது மீன்களின் வெள்ளி நிற உடலில், மேலிருந்து கீழாக கரும்பட்டைகள் காணப்படும். முதிர்ந்த மீன்களின் இந்த கரும்பட்டைகள் வெளிறி மங்கலாகிவிடும்.
திரவி மீன்கள் மனிதர்கள் உண்ணத்தக்க மீன்கள்தான். ஆனால், சில நாடுகளில் இதை உண்ணும் பழக்கம் கிடையாது.

No comments :

Post a Comment