முண்டக்கண்ணி (Redcoat Squirrel
fish)
‘முண்டகக் கண்ணி’ என்ற
தமிழ்ச்சொல்லுக்கு ‘தாமரை போன்ற கண்ணுடையவள்’ என்று பொருள். ஆனால், இந்தப் பெயர் காலப்போக்கில் முட்டை போன்ற விழிகளைக் குறிப்பிடும் ‘முண்டக்கண்ணி’ என்று வேறுவிதமாகத் திரிந்து விட்டது.
கடலில் வாழும் ஒரு மீனினத்துக்கும்
இந்த முண்டக்கண்ணி என்ற
பெயர் வந்து வாய்த்துவிட்டது.
முண்டக்கண்ணி என அழைக்கப்படு ம் இந்தவகை
மீன், ஆங்கிலத்தில் சிவப்பு உடை தரித்த அணில்மீன்’ என்ற பொருளில் Redcoat Squirrel
fish என அழைக்கப்படுகிறது.
இதே வகை மீனுக்குத் தமிழில் தங்கபாப்பா
என்ற பெயரும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். Sargocentron rubrum என்பது இந்த
மீனின் அறிவியல் பெயர். Holocentridae குடும்பத்தைச் சேர்ந்த மீன் இது.
சிவப்பு நிறம் கொண்ட முண்டக்கண்ணி மீன்
6 முதல் 10 அங்குல நீளத்துக்கு வளரக் கூடியது. சிவப்பு நிறமுள்ள இந்த மீனின்
உடலில் படுக்கை வசமாக வெள்ளி மற்றும் செம்பழுப்பு நிற வரிகள் காணப்படும்.
சிவப்பு விளிம்பு உள்ள பெரிய
கண்களை உடைய மீன் இது. இந்த பெரிய கண்கள் காரணமாகவே முண்டக்கண்ணி என இந்த மீன்
அழைக்கப்படுகிறது.
முண்டக்கண்ணி மீனின் செவுள்
திறப்புப் பகுதியில் முட்கள் காணப்படும். நஞ்சுள்ள இந்த முட்கள் மனிதர்களுக்கு
வலிநிறைந்த காயங்களை ஏற்படுத்தக்கூடியவை. இந்த செவுள் முட்கள் காரணமாக இந்த வகை
மீன், வலைகளில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
முண்டக்கண்ணி மீனின் வால்தூவி,
அடித்தூவி, கன்னத்தூவி போன்றவையும் சிவப்பு நிறமாகக் காட்சி தரும். இந்த மீனின்
முகத்தைச் சுற்றி வெள்ளைநிற கோடுகள் காணப்படும். கண்களுக்குக் கீழே கண்ணீர்
வடிந்து காய்ந்து போன தடம் போல கோடு காணப்படும்.
முண்டக்கண்ணி மீன், 1 முதல் 60
மீட்டர் ஆழத்தில் காணப்படும். பார்களை அடுத்து வாழும் மீன் இனம் இது. பகலில்
குகைகள், பார் இடுக்குகள், பார் மறைவுகளில் பதுங்கியிருந்து விட்டு இரவில்தான் இது
சிறுகூட்டமாக வெளிவரும். இறால், நண்டு, சிறுமீன்கள் இதன் முதன்மை உணவு.
இந்தியப் பெருங்கடலிலும், மேற்கே
செங்கடல், கிழக்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் பகுதி
போன்றவற்றில் இந்த மீன் இனம் காணப்படுகிறது. பசிபிக் கடலில் உள்ள டோங்கா தீவின்
அருகிலும் அண்மையில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக சூயஸ் கால்வாய்
வழியாக இந்த மீன் இனம், நடுநிலக்கடலில் (மத்தியத்தரைக்கடலில்) ஊடுருவி, அதன்
கிழக்குப் பகுதியில் வாழ்வது தெரிய வந்திருக்கிறது.
முண்டக்கண்ணிகளில் ஏறத்தாழ நூறு வகை
மீன்கள் உள்ளன. இவற்றில் ஓர் இனம் 20 அங்குல நீளம் வரை வளரக்கூடியது.
முண்டக்கண்ணி மீன்கள் மிகவும்
விழிப்பானவை. இவற்றைப் பிடிப்பது கடினம். ஏற்கெனவே கூறியதுபோல, செவுள் முட்கள் வலைகளில்
சிக்கினால் இவை பிடிபடும் வாய்ப்புண்டு.
முண்டக்கண்ணிகளில் வளர்ந்த ஆண் மீன்கள் நீண்ட
தொலைவுக்குச் செல்லாது. கடலின் அடிஆழத்தில் வாழ்வதையே அவை விரும்பும். சிறுமீன்கள் மட்டும் கூட்டமாக நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு புதிய இடங்களுக்குப் பரவ
வாய்ப்புண்டு.
முண்டக்கண்ணி மீன்கள் உண்ணத்தகுந்த
மீன்கள்.
No comments :
Post a Comment