Wednesday, 20 March 2019


புள்ளி இலத்தி (Common Scat)

புள்ளி இலத்தி
கடலோரங்களில் வாழும் கண்கவர் மீன்களில் ஒன்று புள்ளி இலத்தி. இதை எலத்தி என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். Scatophagus argus என்பது புள்ளி இலத்தி மீனின் அறிவியல் பெயர்.
புள்ளி இலத்தி தட்டையான உடலைக் கொண்டது. ஓரடி நீளம் வரை வளரக்கூடியது. பெரிய கண்களும் சிறிய வாயும் கொண்ட மீன் இது. வட்ட வடிவ தாடையில் பல வரிசைகளாக பற்கள் அமைந்திருக்கும். இதன் தலையின் மேல் ஒரு பெரிய சரிவைக் காணலாம்.
உடல் முழுக்க சிறு சீப்புப்பல் வடிவ (Ctenoid) செதிகள் மூடியிருக்கும்.
புள்ளி இலத்தியில் இளம்மீன்களே மிக
அழகாக இருக்கும். புள்ளி இலத்தி மீன்களை இருவகை வண்ணச்சாயல்களில் காண முடியும். ஒன்று மின்னும் சிவப்பு. மற்றொன்று மிளிரும் பச்சை நிறம்.

இளம் புள்ளிஇலத்தி மீன்களில் மிளிரும் சிவப்பு அல்லது செம்பழுப்பு நிறம் துலங்கும். உடல் முழுக்க கருப்பு நிறத்தில் பெரிய வட்டப்புள்ளிகள் பொலியும். சிறுமீன்களில் 5 முதல் 6 வரை செங்குத்து பட்டைகளும் காணப்படலாம்.
முதிர்ந்த புள்ளி இலத்தி மீன்கள் அவற்றின் நிறம் குன்றி, மாற்று குறைந்து, அழகை இழந்து விடும்.
புள்ளி இலத்தியின் முதுகுத் தூவியில் 10 முதல் 11 முள்களும், 16 முதல் 18 மென்கதிர்களும் காணப்படும். முட்களும், மென்கதிர்களும் சிறிய காடிவெட்டு பள்ளம் ஒன்றினால் பிரிக்கப்பட்டிருக்கும். கீழ்அடிப்புறத் தூவிக்கு சற்று முன்பாக பலமான 4 முட்கள் அமைந்திருக்கும்.
புள்ளி இலத்தியின் முதுகு முள்குத்தும், அடிப்பகுதி முள்குத்தும் கடுமையான வலியையும், மயக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. முள் குத்திய இடத்தை வெந்நீரில் நனைப்பதன்மூலம் ஓரளவு வலியைக் குறைக்கலாம்.
புள்ளி இலத்திகள் கடலோரமாகவும், ஆறுகள் கடலில் சேரும் கழிமுகங்களிலும் வாழக்கூடியவை. சிறுமீன்கள் நன்னீரில் கூட வாழும். முதிர் பருவத்தில் இவை கடலை நாடி வந்து, கடலில் வாழத் தொடங்கும். புள்ளி இலத்திகள் வாழ குறிப்பிட்ட அளவு வெப்பம் தேவை. குளிர்க்கடல்களில் இவற்றால் வாழ முடியாது.
புள்ளி இலத்தி மீனின் உணவுப்பழக்கம் பற்றி சிறு குழப்பம் உள்ளது. இவை அனைத்துண்ணிகள் என்று கருதப்பட்டாலும் சிலர் இவை தாவரம் மட்டுமே உண்டு வாழும் மீன் எனக் குறிப்பிடுகிறார்கள்.
பாசிகளுடன் புள்ளி இலத்திமீன் கழிவுகளையும் உண்ணும் என்பது தெரிய வந்திருக்கிறது. இலத்தி மீனின் அறிவியல் பெயரான Scatophagus argus என்பதில் ஆர்கஸ் என்பது புள்ளிகளைக் குறிக்கிறது. ஆனால், ஸ்கேட்டோபகஸ் என்ற முதல்பெயர், Spotted feces eater என்ற பொருளில் அதாவது ‘சாணம் உண்ணும் மீன்’ என்ற பொருளில் அமைந்தது. ஆகவே இது கழிவை உண்ணும் மீன் எனத் தெரிகிறது. ஆங்கிலத்தில் கூட ஸ்கேட் (Scat) என்பது கழிவைக் குறிக்கும் சொல்தான்.
தலைமேல் சரிவு...
தமிழில் இலத்தி என்ற பெயர் யானையின் சாணத்தைக் குறிக்கும் சொல். அந்த வகையில் தமிழில் நம் முன்னோர்கள் மிகச்சரியான பெயரையே இந்த மீனுக்குச் சூட்டியிருக்கிறார்கள்.
புள்ளி இலத்தி மீனை பெரும்பாலும் மனிதர்கள் உண்ண மாட்டார்கள்.  இதை உண்ணும் பழக்கம் உள்ளவர்களும் கூட, பிடிபட்ட மீன் விரைவில் கெட்டுவிடும் என்பதால் மீனைப் பிடித்ததும் முதல்வேலையாக சுத்தம் செய்து விடுவார்கள்.
புள்ளி இலத்தி மீன் மலையாள மொழியில் நச்சுக்கறி மீன் என அழைக்கப்படுகிறது. நச்சு என்றால் நஞ்சு என்பது எல்லோருக்கும் தெரியும். கறிமீன் என்பது இது உண்ணக்கூடிய மீன் என்பதைக் குறிப்பிடுகிறது.

No comments :

Post a Comment