Sunday, 30 April 2017

சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்) (Sousa Chinensis) (Indo Pacific Humpbacked Dolphin)

ஓங்கல் எனப்படும் டால்பின்களில் பலவகை. அதில் ஒன்று சீன ஓங்கல் என்று அழைக்கப்படும் வெள்ளை ஓங்கல். (சீனி ஓங்கல் எனவும் இது வழங்கப்படுகிறது)
ஆழம் குறைந்த கரையோரங்கள், மணல்திட்டுகள், பவழப்பார்கள், கடற்கழிகள், குடா மற்றும் ஆற்று கழிமுகப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஓங்கல் இது. இந்தவகை ஓங்கலை 25 மீட்டர் ஆழத்துக்கு மேல் கடலில் காண முடியாது. பெரும்பாலும் 20 மீட்டர் ஆழத்தில் இதுசுற்றித்திரியும். கரைக்கு அருகிலேயே இது வாழும்.
சீன ஓங்கல் சற்று புதிரானது. மற்ற ஓங்கல் இனங்களிடம் காணப்படும் விளையாட்டு குணத்தை சீன ஓங்கலிடம் நாம் காண முடியாது. ஓங்கல்களில் மிக மெதுவாக நீந்தும் ஓங்கல் இனமும் இதுதான். மணிக்கு 4.8 கிலோ மீட்டர் வேகத்தில் இது நீந்தும்.
சீன ஓங்கல், 3 முதல் 25 எண்ணிக்கை கொண்ட கூட்டமாகச் சுற்றித்திரியும். படகுகளைச் சுற்றிவந்து அதில் இருந்து வீசப்படும் மீன்கழிவுகளை உண்ணவும் இது தயங்காது. அதுபோல, மீன்பிடி வலைகளில் சிக்கிய மீன்கள், வலையில் இருந்து காயத்துடன் தப்பத்துடிக்கும் மீன்களையும் இது உணவாக்கும்.  
இதனால் வலைஞர்கள், சீன ஒங்கலை நற்குறியாக கருதாமல் துர்க்குறியாகக் கருதுவதுண்டு.
நிறப்பிறழ்ச்சி காரணமாக வெளிறியது போல காணப்படும் சீன ஓங்கல், அதன் உடல்நிறத்தால் அல்ல, உடலின் ரத்தநாளங்கள் காரணமாக பிங்க் கலந்த வெண்ணிறமாகத் தெரிவதாகவும் ஒரு கருத்தாக்கம் உள்ளது.
சீன ஓங்கல் பிறக்கும்போது கறுப்புநிறமாகவும் பின்னர் சாம்பல் நிறமாகவும் மாறும். பிறகு பிங்க் நிறத்துக்கு மாறி நன்கு முதிர்ந்த்தும் வெள்ளை நிறமாக திகழும்.
நீருக்குள் 2 முதல் 8 மணித்துளிகள் (நிமிடங்கள்) வரையே இது தங்கியிருக்கும். நீர்மேல் தோன்றி 20 முதல் 30 நொடிகளில் மூச்செடுத்து பின்னர் மீண்டும் மூழ்கும். சீன ஓங்கலின் குட்டிகள், பெரிய ஓங்கல்களை விட அதிக முறை கடல்மேல் வந்து மூச்செடுக்கக் கூடியவை. காரணம் குட்டி சீன ஓங்கல்களால் 1 முதல் 3 நிமிடங்களுக்கு மேல் நீருக்குள் தரித்திருக்க முடியாது.
சீன ஓங்கல் ஆறடியில் இருந்து 11 அடி வரை வளரக்கூடியது. நிறை 150 முதல் 280 கிலோ. வாழ்நாள் காலம் 40 ஆண்டுகள். (ஓங்கல்களின் பற்கள் மூலம் அவற்றின் ஆயுளைக் கணக்கிடலாம்)
சீன ஓங்கலின் ஈரடுக்கு முகுத்தூவி குட்டையானது. ஓங்கலின் கூனல் முதுகின்மேல் இந்த முதுகுத்தூவி ஒய்யாரமாகக் கொலு வீற்றிருக்கும். சீன ஓங்கலின் துருத்திய கண்கள், கடலுக்குள்ளும், வெளியிலும் பார்க்கக் கூடியவை.
தலையை கடல்மட்டத்துக்கு மேல் தூக்கி, தூவிகளால் கடல்மேற்பரப்பை அடித்து இது அக்கம்பக்கத்தைக் கண்காணிக்கும். வாலை கடல்மேல் அடித்தபடி இது பயணிக்கும். செங்குத்தாக இது கடல்மேல் குதிக்கும் விதம் அலாதியானது.

சீன ஓங்கலின் முதன்மை எதிரி சுறாக்கள்தான். சுறாக்களுக்கு உணவாகக் கூடிய சீன ஓங்கல்கள், சிலவேளைகளில் சுறாவை துணிவுடன் விரட்டவும் செய்யும். 

No comments :

Post a Comment