Wednesday, 12 April 2017

முட்கள்...முரட்டுப் பற்கள்... (கிளாத்தி Trigger fish)

முரட்டுப்பற்களும், முதுகில் முட்களும் கொண்ட மீன் கிளாத்தி. கடல் அடித்தரையில் தூவியால் விசிறி அதன்மூலம் மணலை விலக்கி உள்ளே ஒளிந்திருக்கும் நண்டு, கடற்புழுக்களை இது இரையாக்கும். வாய் நிறைய கடல்நீரை எடுத்து, அதைத் துப்பி, அதன்மூலம் மணலை விலக்கி, இது இரை தேடுவதும் உண்டு. இரை தேடுவதில் பலமணிநேரத்தை கிளாத்தி செலவிடும்.
நீலம், கறுப்பு, மஞ்சள், வெள்ளை, சாம்பல் என பல வண்ணங்களைக் கொண்ட மீன் கிளாத்தி மீன். இதன் பலநிற உடலும், உடலில் திகழும் பல வண்ணக்கோடுகளும், புள்ளிகளும், பார்க்கடலில் இது இயற்கையோடு இயைந்து, இரண்டற கலந்து வாழ உதவுகிறது.
தனிமையை விரும்பும் கிளாத்தி மீன்கள், இனப்பெருக்கக் காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றுகூடும். முழுநிலாவும், கடலின் ஏற்ற வற்றங்களும் இதன் இனப்பெருக்கக் காலத்தை முடிவு செய்கின்றன. கடல் தரையில் பெண் கிளாத்திகள் பல ஆயிரம் முட்டைகளையிட்டு அதற்குள் உயிர்க்காற்றை ஊதி, முட்டைகளைக் காக்கும்.
இந்த காலகட்டத்தில் முட்டைகளை நெருங்கும் வேறு மீன்கள், முக்குளிக்கும் மனிதர்களை கிளாத்திமீன் கடித்து விரட்டும்.
எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் திடுதிப்பென வந்து நிற்பது கிளாத்தி களின் பழக்கம். சிலவகை கிளாத்திகள் முக்குளிப்பவர்களை விரட்டும் முன் ஒருபக்கம் சாய்ந்தும், தூவிகளை உயர்த்தியும், விழியை உருட்டி வெள்ளை விழி தெரியச் செய்தும் எச்சரித்தபின் தாக்கும்.
கிளாத்தி, முரட்டுப்பற்கள் கொண்ட மீன் என்றாலும் இதன் கடி, மனித உயிரைப் போக்கும் அளவுக்கு ஆபத்தானது அல்ல.
மீன்கள் நினைவாற்றல் குறைந்தவை. நிகழ்வுகளை நீண்டநேரத்துக்கு நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் மீன்களுக்கு இல்லை. ஆனால், Trigger Fish எனப்படும் கிளாத்தி மீன்கள் இதற்கு விதிவிலக்கு.
கிளாத்தியில் ஒரு வகையான,  ஓலைக்கிளாத்தியின் கண்களுக்கும் வாய்க்கும் இடையே 6 அங்குலம் வரை இடைவெளி இருக்கும். கிளாத்தியால் அதன் இரு கண்களையும் தனித்தனியே அசைக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
கிளாத்தியின் முதுகுமுட்கள் எதிரியை அச்சுறுத்தப் பயன்படுகின்றன. நிலைமை சிக்கலானால் பார்ப்பொந்துக்குள் கிளாத்தி ஒளிந்து கொண்டு, அதன் முதுகுமுள்ளை பார்ப்பொந்தின் கூரையில் நிலைநிறுத்திக் கொண்டு அதன் மூலம் எதிரியிடம் சிக்காமல் தப்பிக்கும்.
கிளாத்தி மீனின் தோல் கடினமானது. பன்றி கிளாத்தி எனப்படும் ஒருவகை கிளாத்தியின் தோல், செருப்பு தைத்துப் போட்டுக் கொள்ளும் அளவுக்குக் கடினமானது.

கிளாத்தி மீனைப் பற்றி இன்னும் ஓர் அரிய தகவல். அது வேறு ஒன்றும் இல்லை.கிளாத்தி மீனைப்பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே ஒரு பதிவு உள்ளது என்ற தகவல்தான்.

No comments :

Post a Comment