Tuesday, 18 April 2017

கடல்விலாங்கு (Eel)

கடல் எனக்குஎன சொந்தம் கொண்டாடும் பல்லாயிரம் கடலுயிர்களில் கடல்விலாங்கும் ஒன்று. மீன் இனத்தைச் சேர்ந்தது கடல் விலாங்கு. கடல் விலாங்குகளில் 4 சென்டி மீட்டர் முதல் 4 மீட்டர் நீளம் வரையிலான மொத்தம் 800 வகை விலாங்குகள் உள்ளன.
கடல்விலாங்கு, 13 ஆயிரம் அடி ஆழம் வரை காணப்படும். பார் இடுக்குகளும், சகதியுமே இந்த மீனின் முக்கிய வாழ்விடம். உடல்முழுக்க ஒருவகை வழுவழுப்புத்தன்மை கொண்ட கடலுயிர் இது. இந்த வழுவழுப்புத்தன்மை கடல்விலாங்கு, பார் இடுக்குகளில் நுழையும்போது அதன் உடலில் சிராய்ப்பு ஏற்படாமல் காக்கிறது.
கூர்மையான பற்களும், பலமான தாடையும் கொண்ட உயிரினமான கடல்விலாங்கு, பெரும்பாலும் றுப்பு, வெளிர் மஞ்சள் அல்லது சாம்பல் நிறமாக காணப்படும். முதுகில் சாவாளை மீனுக்கு இருப்பதைப்போல மிக நீண்ட தூவியையும், செதிகள்கள் அற்ற மென்மையான தோலையும் இது கொண்டிருக்கும்.  
கடலில் முன்னும் பின்னும் நீந்தக்கூடிய ஓர் உயிரினம் கடல்விலாங்கு. இது இரவில் நடமாடி பகலில் ஓய்வெடுக்கும். கண் பார்வை மிகக் குறைவு. ஆனால், வாசனை அறியும் திறன் இதற்கு மிகஅதிகம். கல்இறால், மீன், கணவாய், நண்டு, கடல்நத்தை போன்றவை கடல்விலாங்கின் இரைகள்.
கடல்விலாங்கு உறவு கொள்ளும்போது வாயைத் திறந்தபடிபடி பெண்ணுடன் பின்னிப்பிணையும். பெண், முட்டையிட்ட பிறகே இது பிடியை விடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை விலாங்குகளில் கருவிலாங்கும், குழி விலாங்கும் முதன்மையானவை.
கடல்விலாங்கின் வாழ்நாள் 85 ஆண்டுகள்.
கடலில், கடல்பாம்பு, கடல்விலாங்கு, அஞ்சாளை போன்ற மூன்று உயிரினங்களில் எது கடல்பாம்பு? எது கடல்விலாங்கு? எது அஞ்சாளை என குழப்பம் தோன்றலாம். கடலில் சற்று ஆழத்தில் காணப்படுவதும், ஒரே நிறமாகத் தோன்றுவதும், உடல்அளவுக்கு மிகநீண்ட தூவியைக் கொண்டிருப்பதும் கடல்விலாங்கின் தனித்துவ அடையாளங்களாகக் கொள்ளலாம்


No comments :

Post a Comment