Tuesday, 4 April 2017

செம்மீனே.. செம்மீனே

மன்னர் சாலமனிடம் இளவரசி சேபா கேட்ட ஒரு கேள்வி.
அது கடலில் நுழையும். ஆனால் அது நனையாது. அது என்ன?‘
மன்னர் சாலமன் அளித்த பதில்: ‘சூரிய ஒளி‘.

ஆழக் கடலின் அடியில் திரியும் பல மீன்கள் சிவப்பு நிறமான மீன்கள். மழுவன் (இதை சிவப்புக் களவா என்றும் சொல்லலாம்), செம்பாலை, சங்கரா அல்லது செம்பரா, செம்மீன் என இந்த சிவப்பு மீன் பட்டியல் சற்றே நீளமானது.கடலடி மீன்களில் பல சிவப்பு நிறமாகத் திகழ காரணம் என்ன? இந்த கட்டுரை ஆராய்கிறது.
கடல்நீர்ப்பரப்பில் இருந்து ஆழத்தை நோக்கி நாம் பயணித்தால் ஒளியின் அளவும், தரமும் மாறும். சூரிய ஒளியில் வானவில்லின் ஏழு வண்ணங்களும் உள்ளன. அதுதான் சிறுவயதில் நாம் படித்த ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு‘. (சுருக்கமாக ஊகநீபமஆசிஆங்கிலத்தில் VIBGYOR). இந்த அனைத்து நிறங்களும், குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோல ஒட்டு மொத்தமாக ஒன்றுகூடினால் வெள்ளை நிறமாகத் தோன்றும்.
ஒளிகளில் மிகநீண்ட அலைநீளம் கொண்ட நிறம் சிவப்பு. ஏழு வண்ணங்களில் மிகக் குறைவான ஆற்றல் (Energy) கொண்ட வண்ணமும் இதுதான். நீங்கள் சிவப்பில் இருந்து ஊதாவை நோக்கி நகர்ந்தால், அலைநீளம், மாத சம்பளம் வாங்குபவரின் வங்கிக் கணக்குத் தொகை மாதிரி குறைந்து கொண்டே போகும். ஆனால் நிறத்தின் ஆற்றல் (Energy) அதிகரித்துக் கொண்டே செல்லும்.
சிவப்பு ஒளியிலிருந்து நீலஒளி நோக்கிச் செல்லும்போது, அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது மட்டுமல்ல, நீருக்குள் ஊடுருவிச் செல்லும் ஒளியின் ஆற்றலும் குறைந்து  கொண்டேபோகும். நீலஒளி நீருக்குள் மிகச்சிறப்பாக ஊடுருவக் கூடியது. இரண்டாவதாக பச்சை ஒளி சிறப்பானது. மூன்றாவதாக மஞ்சள் ஒளி. அதைத் தொடர்ந்து ஆரஞ்சு எனப்படும் தோடை ஒளி. கடைசியாக சிவப்பு ஒளி.. ஆழம் கூடக்கூட, சிவப்பு ஒளி, நீரில் மிகவேகமாக வடிகட்டப்படவும் செய்யும்
எல்லா பொருள்களுமே ஒளிஊடுருவக்கூடிய பொருள்கள் அல்ல. எல்லா பொருள்களுமே தங்கள் மீது படும் ஒளியை ஈர்த்துக் கொள்வதோ, அல்லது பிரதிபலித்து விடுவதோ இல்லை.
அந்த வகையில் ஓர் ஆழ்கடல் சிவப்பு மீன், அனைத்து வண்ணங்களும் கொண்ட வெள்ளை ஒளி அதன்மீது படும்போது, சிவப்பை பிரதிபலித்து, மற்ற வண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளும். (பசும்புல் எப்படி பச்சை வண்ணத்தை பிரதிபலித்து மற்ற வண்ணங்களை உள்ளே ஈர்த்துக் கொள்கிறதோ அப்படி) ஒரு பொருள் வெள்ளையாகத் தெரிய காரணம், அது ஒளியின் அத்தனை நிறங்களையும் பிரதிபலிப்பதுதான். அதுபோல ஒரு பொருள் கறுப்பாகத் தோன்றுவது ஏன் என்றால், ஒளியின் அத்தனை நிறங்களையும் நிதிநிறுவனம் போல அது உள்வாங்கிக் கொள்வதுதான்.
இப்போது சிவப்பு மீனுக்கு வருவோம். ஒரு சிவப்பு மீன், கடல் மேற்பரப்பில் நீந்தும்போது அது சிவப்பாகத் தோன்றும். ஏனெனில் அது செந்நிற ஒளியைப் பிரதிபலிக்கிறது. அதேவேளையில் நாமும், அந்த சிவப்பு மீனும், ஆழத்துக்குச் செல்ல செல்ல சிவப்புமீனின் சிவப்புநிறம் குறையும். காரணம், மீனின்மேல் பட்டு பிரதிபலிக்க அங்கே போதுமான சிவப்புஒளி இல்லை.
100 மீட்டர் ஆழத்துக்கு மேல் சிவப்புநிற ஒளி ஊடுருவாது. ஆகவே, அந்த ஆழத்தில் சிவப்பு மீன் கறுப்பாகத் தோன்றும். காரணம் அங்கே மீன் பிரதிபலிக்க செவ்வொளி இல்லை. சிவப்பு அங்கே இல்லை என்பதால், வண்ணத்தின் மற்ற அனைத்து அலைநீளங்களையும் சிவப்பு மீன் தன்வயம் ஈர்த்து கறுப்பாகத் தெரியும்..
சூரிய ஒளி தொடாத பகுதிகளில் வாழும் கடல்உயிர்களில் எண்ணற்றவை கறுப்பு அல்லது சிவப்பு நிறம் கொண்டவை. அந்த ஆழத்தில் கண்களால் இவற்றைப் பார்ப்பது கடினம். கறுப்பு நிற உயிர்கள், ஒளியின் அத்தனை வண்ணங்களையும் கொடு கொடுஎன்று வாங்கி வைத்துக் கொள்ளும். சிவப்பு உயிர்களோ, பிரதிபலிக்க அங்கே சிவப்பு ஒளி இல்லை என்பதால், எஞ்சிய வண்ணங்களை உள்வாங்கிக் கொண்டு கறுப்பாகத் திரியும். அதன்மூலம் கொல்ல வரும் எதிரிமீன்களின் கண்களில் படாமல் இவை தப்பிப் பிழைக்கும். எனவே, கடலின் 100 அடிஆழமும், அதற்கு கீழுள்ள பகுதிகளும், இந்த கறுப்பு சிவப்பு கடலுயிர்களின் அரசாட்சிப் பகுதிகளாகத் திகழ்கின்றன.

நீலஒளி தண்ணீரில் மிக நன்றாகவே ஊடுருவும். ஆனால், கடலின் நடுப்பகுதி ஆழத்தில், நீலஒளியை பிரதிபலித்து, நீலநிறமாகப் பொலியும் நிறைய உயிர்கள் கிடையாது. பளிச்சென நீல நிறத்தில் மின்னி, பெரிய எதிரிமீன்களில் கண்களில் வம்பாக சிக்கிக் கொள்ள, எந்த கடல்உயிர்தான் தயாராக இருக்கும்?

No comments :

Post a Comment