Saturday, 1 April 2017

ஆவுளியா (Dugong)

வெண்நுரை பெருக்கும் கடல் அலைகள், கடற்கரையை நெருங்கும்போது அதிக ஆரவாரம் செய்தால், அந்த அலைகளுக்கு அடியில் பாறைகள் இருக்கின்றன என்று பொருள். மாறாக ஆர்ப்பரிப்பு இன்றி அலைகள் மெதுவாகத் தவழ்ந்தால், கடலடியில்கோரைப்புரம்என அழைக்கப்படும்பசும் புல்வெளிஇருக்கலாம்.
ஆரவாரமற்ற இந்த அமைதிப் பெருவெளியில் பசும்புல் மேயும் ஓர் அமைதியான கடல்உயிரினம் ஆவுளியா.
ஆவுளியா பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. வெளிர்சாம்பல் நிறமும், தடித்த இரண்டரை அங்குல தோலும்கொண்ட ஆவுளியா, ஏறத்தாழ 3 மீட்டர் நீளமும், 400 கிலோ வரை எடையும் கொண்டது. முன்புறம் இரு தூவிகளைக் கொண்ட ஆவுளியாவுக்கு பின்தூவிகள் எதுவும் இல்லை. இதன் வால் ஓங்கலின் வால் போன்றது. ஆவுளியாவின் மேல் உதட்டில், குதிரை குளம்பு போன்ற, உணர்விழைகள் கொண்ட தடித்த மெத்தை போன்ற ஓர் உறுப்பு உண்டு. இந்த உறுப்பு, கடலடியில் புல்தரையைத் தேடிக் கண்டறியவும், புல் மேயவும் ஆவுளியாவுக்கு உதவுகிறது. கடலடியில் புல், பாசிகளை மேயும் போது தலையை ஓர் உலுக்கு உலுக்கி, அதன்மூலம் புல், பாசிகளில் உள்ள மண்ணை உதறி ஆவுளியா உண்ணும்.
ஆவுளியாவின் கண்கள் சிறிய பாசிமணி போன்றவை. இந்த கடல் பாலூட்டியின் தலையில் மூச்சுவிடுவதற்கான துளை உண்டு. 8 மணித்துளிகளில் இருந்து அரைமணிக்கு ஒருமுறை இது கடல்மட்டத்துக்கு மேலே வந்து மூச்செடுக்கும். மிகவும் ஆழம் குறைந்த பகுதிகளில் புல்மேயும் போது, வாலைத் தரையின் ஊன்றி, கழுத்தை மட்டும் வெளியே நீட்டி, நீர்யானையைப் போல ஆவுளியா தோற்றம் தரும்.
கடற்கரைக்கு மிக அருகில் இருந்து கடலடியில் 33 மீட்டர் ஆழம் வரை ஆவுளியா புல்மேயும். கடற்புற்கள் செழித்த கடலடித்தரையில் ஆவுளியா புல்மேய்ந்து கொண்டே செல்லும் வழித்தடம், நாளடைவில் சிறு பள்ளமாக மாறலாம். இந்த வழித்தடம், ஆவுளியாக்களை வேட்டையாட வரும் பிற கடலுயிர்களுக்கு வழிகாட்டியாகவும் உதவலாம்.
ஆவுளியா பெரிதும் யானையை ஒத்தது. ஆண் ஆவுளியாவுக்கு கோடு, மருப்பு என்றெல்லாம் தமிழில் அழைக்கப்படும் தந்தம் போன்ற வெட்டுப்பற்கள் இருக்கும். ஆசிய பெண் யானைக்கு தந்தம் இல்லை என்பதுபோல, பெண் ஆவுளியாக்களுக்கும் இந்த வெட்டுப்பல் தந்தம் கிடையாது.
ஆவுளியா ஒரு பாலுட்டி என்பதை முன்பே பார்த்தோம். குட்டியை முன்புறத் தூவியால் இறுக அணைத்து, தூவிகளுக்கு இடையே உள்ள மார்பகங்களால் ஆவுளியா பால் கொடுக்கும். ஆவுளியாவின் கர்ப்பக் காலம் ஓராண்டு. ஒரே ஒரு குட்டியை இது ஈனும். குட்டி பிறக்கும்போதே மூன்றடி நீளம் இருக்கும். ஆவுளியாவின் வாழ்நாள் 40 முதல் 70 ஆண்டுகள்.
ஆவுளியாவின் முதன்மை எதிரிகள் வரிப்புலியன் சுறா மற்று சிலவகை திமிங்கிலங்கள். இதன் இன்னொரு முதன்மை எதிரி மனிதர்கள்தான். ஆவுளியாவின் இறைச்சி உயர்ரக மாட்டிறைச்சி போல சுவை உடையது என்பதாலும், இதன் பல், தலை, தூவி, தோல் போன்றவை பல்வேறு மருந்துகள், பொருட்கள் செய்யப் பயன்படுவதாலும் ஆவுளியாக்கள் மனிதர்களால் அடிக்கடி வேட்டையாடப்படுகின்றன. ஆவுளியாவின் தசையைத் தவிர அதன் வார்ப்பகுதிகளும் சுவை மிகுந்தவை. இதன் நெய் நிறைந்த வார்களை சமைத்து சுவைத்தால், அவை பூசணி அல்வா போல வாய்க்குள் எண்ணெய்யாக நிரம்பி வழியும்.

ஆவுளியாவின் முதன்மை உணவான கடல்புற்கள் பூக்கக் கூடியவை. ஆவுளியாக்களும், கடல்ஆமைகளும் புல் மேய்வதால், கடல்புல் அவ்வப்போது கத்தரிக்கப்படுகின்றது. இதன்மூலம் கடல்புல் செழித்து வளர ஆவுளியாக்களும், கடல் ஆமைகளும் பெரிதும் உதவுகின்றன.

No comments :

Post a Comment