Wednesday, 22 February 2017

வரிப்புலியன் சுறா (Tiger shark) (Galeo cerdo)

காட்டுக்கு வேங்கைப்புலி எப்படியோ? அப்படியே கடலுக்கு வரிப்புலியன் சுறா.. கடலின் புலி என்ற பெயரும் இதற்கு உண்டு. வரிப்புலியனின் இன்னொரு பெயர் வல்லுலன் சுறா.
சுறாக்களில் பெரியண்ணன்கள் யார் யார் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவைக்கே முதல் இடம் கிடைக்கும். அந்தப் பெருஞ்சுறாக்களின் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பெறக்கூடியது வரிப்புலியன் சுறா.
நீலமும் பச்சையும் கலந்த, மாழை (Metal) போன்ற மிளிரக்கூடிய உடல் பின்னணியும், அதன்மேல் அடர் மற்றும் வெளிர்சிவப்பு கோடுகளும் உள்ள சுறா இது. சில வரிப்புலியன்களின் உடல் சாம்பல் நிறமாகவும், அதன்மேல் வெளிர்சிவப்பு நிறக் கோடுகளும் காணப்படலாம். வயிறுப்பகுதி வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக விளங்கலாம்.
வரிப்புலியன் சுறாவின் குட்டிகள் பிறக்கும்போது புள்ளிகளுடன் பிறகும். வளர வளர வரிகள் உருவாகும். முதிர்ந்த வயதுடைய வரிப்புலியனின் வரிகள் மங்கத் தொடங்கும். புலிகளின் வெள்ளைப்புலிகள் இருப்பது போல வரிப் புலியன்களில் வெண்புலியன்களும் உண்டு என்று சிலர் கூறுவார்கள். ஆனால், முதிர்ந்த வரிப்புலியனின் வரிகள் வெளிரத் தொடங்குவதால் அவை வெண்புலியன்களாக ஒருவேளை கருதப்பட்டிருக்கலாம்.
வரிப்புலியன், ஏழரை மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இதன் பொதுவான நீளம் 3 முதல் 4.2 மீட்டர். தாடையில் இந்த சுறாவுக்கு கூரிய பலஅடுக்குப் பல்வரிசை உண்டு. கன்னத்தின் இருபுறங்களிலும் ஐந்தைந்து செவுள்கள் இருக்கும். முதுகுத்தூவி சற்றுப்பெரியது. வரிப்புலியனின் நிறை 385 முதல் 635 கிலோ வரை.
வரிப்புலியனின் இரு, வால்தூவிகளில் மேல்தூவி சற்று பெரியது. கூரிய கண் பார்வையுடன், அதிக அளவு மோப்பத்
திறமையும் வரிப் புலியனுக்கு உண்டு.
காட்டில் புலி எப்படி புதர்களில் மறைந்திருந்து இரையைப் பிடிக்கிறதோ அதுபோல வரிப்புலியன் சுறா, கடல்
புற்களின் நடுவே மறைந்திருந்து உருமறைப்பு (Camouflage) செய்து, அங்கே புல்மேய வரும் ஆவுளியாவை (கடல்பசுவை) இரையாக்கும். கூரிய பற்களால் கடல்ஆமைகள், சிப்பிகளை பிளந்து இது இரைகொள்ளும். ஓங்கல், கணவாய், கடல்பாம்பு, சிறுசுறாக்கள் ஏன்? செத்த திமிங்கிலம் கூட வரிப்புலியனுக்கு இரையாகும். காயமடைந்து நகர முடியாமல் தவிக்கும் திமிங்கிலங்களை வரிப்புலியன் குறிவைத்து தாக்கி உணவாக்கும்.
காட்டுப்புலியைப் போலவே, வரிப்புலியனும் இரவில்தான் வேட்டையாடும். வரிப்புலியன் தனித்து வாழும். அடிக்கடி இடம்மாறும். ஒரிடத்தில் நிலையாகத் தங்காது. இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே, புலியைப் போலவே இணையுடன் சேர்ந்து திரியும்.
இதன் உடல்கோடுகள், கலங்கிய கடலில் வேட்டையாட மிகவும் உதவும். வரிப்புலியன் மிக வேகமாக நீந்தாது. புலியைப் போலவே இதுவும் இரையை முடிந்த அளவு மிகவும் அருகில் நெருங்கி திடீர் வேகத்தில் பாய்ந்து கொல்லும். புலியைப் போலவே, தப்பியோடும் இரையை இது துரத்திக் கொண்டு ஓடாது. அந்தப் பழக்கம் வரிப்புலியனுக்கும் இல்லை. மிக வேகமாக நீண்டநேரம் நீந்த வரிப்புலியனால் முடியாது.
கடலின் குப்பைக்கூடை என்ற வித்தியாசமான பெயரும் வரிப்புலியனுக்கு உண்டு. எந்த ஒரு பொருளையும், அது உண்ணத் தகுந்ததா என்றுகூட ஆராய்ந்து பார்க்காமல் அதை இரையாக்குவது வரிப்புலியனின் வழக்கம். இறந்த வரிப்புலியனின் வயிற்றில் மிதவைகள், படகுகளின் துண்டுகள், மீன்பிடி கருவிகள் ஏதாவது இருந்தால் அதற்காக நாம் வியப்படையக்கூடாது.
வரிப்புலியன் 10 அடி முதல் 3 ஆயிரம் அடி ஆழம் வரை காணப்படும். திடுதிப்பென ஆழம் குறைந்த கடலோரங்கள், பவழப்பாறைகள், துறைமுகம், கடற்கழிப் பகுதிகளில் வரிபுலியன் வந்து நின்றால் நீங்கள் ஆச்சரியப் படக்கூடாது.
மனிதர்களைத் தாக்கி கொல்லக்கூடிய மீன் வரிப்புலியன். சீண்டாமல் கூட இது மனிதர்களைத் தாக்கும். மனிதர்களை உணவாகவும் உண்ணும். இரை கிடைக்காவிட்டால் பல வாரங்களுக்கு இது பட்டினி கிடக்கவும் செய்யும்.
வரிப்புலியன்கள் சிலவேளைகளில் கூட்டமாக கூடும். அப்போது பெறப்படும் இரையை பெரிய வரிப்புலியன்கள் முதலில் உண்ணும். அவை வயிறாற உண்டு முடிக்கும் வரை சிறிய வரிப்புலியன்கள் இரையை நெருங்க முடியாது. நெருங்கவும் கூடாது. இதனால் வரிப்புலியன் கூட்டங்களில் சண்டை வர வாய்ப்பில்லை.
வரிப்புலியன் சுறா 12 முதல் 27 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஒரே இணையுடன் வாழாமல் இவை இணையை மாற்றிக் கொள்ளும். பெண் வரிப்புலியன் 8 வயதில், அதாவது ஏறத்தாழ எட்டடி நீளம் வளர்ந்த பிறகு பருவமடையும். ஆண்வரிப்புலியன் 7 வயதில், அதாவது ஏழடி நீளம் வளர்ந்ததும் பருவம் எய்தும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரிப்புலியன்கள் உறவுகொள்ளும் என்று உறுதிசெய்யப்படாத ஒரு தகவலும் உள்ளது.
வரிப்புலியனின் கர்ப்பம், காட்டின் புலி, சிங்கம், சிறுத்தைகளைப் போலவே ரத்தக்கர்ப்பம். அதாவது உறவின்போது பெண் வரிப்புலியனுக்கு சிறுகாயங்கள் ஏற்படும். ஆனால், அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும். வரிப்புலியனின் கர்ப்பக் காலம் 14 முதல் 16 மாதங்கள்.
சிலவகை சுறாக்களின் குட்டிகள், தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூரிய பற்களுடன் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது உண்டு. எளியதை வலியது இரையாக்குவதும் உண்டு. வரிப்புலியனும் இதற்கு விதிவிலக்கல்ல.
பெண் வரிப்புலியனின் வயிற்றில் உள்ள குட்டிகள் இப்படி கூரிய பற்களுடன் சண்டையிட்டுக் கொள்ளும். ஒன்றையொன்று இரையாக்கவும் செய்யும். 7 முதல் 85 குட்டிகள் வரை வரிப்புலியன் ஈனும்.
புள்ளிகளுடன் பிறக்கும் வரிப்புலியன் குட்டிகள் மெலிந்த தோற்றத்துடன் இருக்கும். தாயின் அரவணைப்பு எதுவும் தேவையின்றி பிறந்தவுடனேயே இவை தங்கள் வாழ்க்கையை தாங்களே  நடத்தக்கூடிய சிறப்பு கொண்டவை.

வரிப்புலியன் போலவே உள்ள இன்னொரு சுறா, சிறுத்தை சுறா (Leopard Shark). Triakis Semifasciata என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் திருவாளியன் சுறா. இந்த சிறுத்தை சுறா வேறு, வரிப்புலியன் வேறு. இரண்டையும் ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ள கூடாது.

No comments :

Post a Comment