திருவாளியன் சுறா (Leopard Shark). (Triakis Semifasciata)
கடலில் ஊர்மங்கும் தொலைவில் சுற்றித்திரியும் ஒருவகை சுறா இனம் திருவாளியன். ஆங்கிலத்தில்
சிறுத்தைச்சுறா என்ற பொருளில் இது அழைக்கப்படுகிறது. காரணத்தை எளிதாக ஊகித்து விடலாம்.
ஆம். சிறுத்தையைப் போல உடலில் புள்ளிகள் இருப்பதால் இது சிறுத்தைச் சுறா எனப்படுகிறது.
ஆ னால் தமிழில் திருவாளியன் என்பதுதான் இதன் திருநாமம்.
கொஞ்சம் சிறியவகை சுறா இனம் இது. ஆனி ஆடி மாசி மாதங்களில் கடல் குளிர்ந்திருக்கும்
காலத்தில் திருவாளியன் சுறாவின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அடர் மஞ்சள் நிற உடல்
பின்னணியில் அங்கங்கே கறுப்புத்திட்டுகளுடன் இது காணப்படும். குதிரைக்கான சேணம் அதன்முதுகில்
இருபுறமும் தொங்குவதுபோல, திருவாளியன் சுறாவின் முதுகின் மீது கறுப்புத்துணியைக் காய
வைத்தது போல, சேணவடிவ கறுப்புப் பட்டைகள் காணப்படும். அடிவயிறு உடல்நிறத்தை விட வெளிர்வானது.
தட்டையான தலையும், கட்டையான வட்டத்தாடையும் கொண்ட மீன் இது. 1.2 முதல் 1.5 மீட்டர்
வரை இது வளரலாம். பெண் திருவாளியன் ஒன்று 1.8 மீட்டர் வரை வளர்ந்திருக்கிறது. அதிக
அளவாக இந்த சுறா 19 கிலோ வரை எடையிருக்கலாம்.
திருவாளியன் சுறாவின் மெல்லிய நீண்ட உடல் அது நன்றாக நீந்த உதவுகிறது. உடலும்,
வாலும் ஏதோ களிமண்ணால் செய்தது போல சொர சொரவென சாணைக்கல் போலக் காணப்படும். முதுகில்
ஏறத்தாழ ஒரே அளவுள்ள இரு தூவிகள் இருக்கும். முதல்முதுகுத் தூவி நடுமுதுகிலும், 2ஆவது
தூவி போதிய இடைவெளி விட்டு அதன் பின்னாலும் காணப்படும். இதன் நீண்ட வால், நீந்தும்போது
முன்னும் பின்னும் அழகாக அசையும்.
திருவாளியன் சுறாவின் சாம்பல் நிற நீள்வட்டக்கண்கள் பார்வைத்திறன் மிகுந்தவை. வாசனை
அறியும் திறனும் திருவாளியன் சுறாவுக்கு அதிகம். பகலிலும், இரவிலும் இந்த சுறாவின்
நடமாட்டத்தைப் பார்க்க முடியும்.
திருவாளியன் சுறாவுக்கு அரம் போன்ற பற்கள் உண்டு. பெரிய திருவாளியன்கள் மீன் இனங்களை யும்,
குட்டி திருவாளியன்கள், நண்டு, மட்டி, இறால், கடல்புழு போன்றவற்றையும் உணவாகக் கொள்ளும்.
மட்டி (Clam) சிறிதாகத் திறந்து அதன் Sipon என்ற நாக்குப்போன்ற உறுப்பு வெளியே
நீட்டிக் கொண்டிருக்கும்போது, திருவாளியன் சுறா, அந்த நாக்கை மிக வேகமாக வாயால் கவ்வி
வெளியே இழுத்து இரையாக்கக் கூடியது. மணற்பாங்கான கடல்தரையில் தரையை விட்டு ஓரடி உயரத்தில்
நீந்தியபடி திருவாளியன் சுறா இரைதேடும். தடித்த கடற்புழுக்களை அவற்றின் துளைகளில் இருந்து
வாயால் உறிஞ்சியும் திருவாளியன் உணவாக்கிக் கொள்ளும். எப்போதாவது தவறுதலாக இது பாசிகளையும்
உட்கொள்ளும்.
நெத்தலி மீன்கூட்டத்தைக் கண்டால் வாயைத் திறந்தபடி கடிகார முள்ளுக்கு எதிர்திசையில்
சுற்றி, கடிகாரச் சுற்றுத்திசையில் வரும் நெத்தலி மீன்களைத் தனது திறந்த வாய்க்குள்
திருவாளியன் விழவைக்கும்.
திருவாளியன் தன்னின மீன்களுடன் மட்டுமின்றி, வெள்ளுடும்பன் சுறாக்கள், வாவல் திருக்கைகளுடனும்
கூட்டணி சேர்ந்து திரியும். திருவாளியன் சுறாக்களில் சில, ஒரேஇடத்தில் தங்கி வாழக்கூடியவை.
சில, கடலில் இருந்து ஊர்மங்கும் தொலைவில், இடம்விட்டு அங்குமிங்கும் அலைந்து திரியக்கூடியவை.
பெரிய இரையை வாயால் கவ்விப் பிடிக்கும்போது முதலையைப் போலவே உருள்வது திருவாளியன்
சுறாவின் பழக்கம். மீன்வலைகளில் இது சிக்கிக் கொண்டால் மிகவேகமாக வலையை முறுக்கும்.
இந்த திருக்கல், முறுக்கல் காரணமாக, திருவாளியன் சுறாவை வலையில் இருந்து விடுவிக்க
முயல்பவர்களின் கை,கால்கள் உடையக்கூட வாய்ப்புள்ளது.
மீன்களுக்கு இருப்பதைப் போல பள்ளை
என்ற காற்றுப்பை, மற்ற சுறாக்களைப் போல திருவாளியன் சுறாவுக்கும் கிடையாது. பதிலாக, எண்ணெய்ப்பசை நிறைந்த பாலை என்ற ஈரல் உண்டு. இந்த
ஈரல் எண்ணெய், சுற்றியுள்ள கடல்நீரை விட கனமானது. இதனால், நீந்தாமல் நிற்கும் சுறாவால் எளிதாக, விரைவாக
கடலடியில் மூழ்கவும், முக்குளிக்கவும் முடியும்.
திருவாளியன் சுறாவின் வாழ்நாள் ஏறத்தாழ 30 ஆண்டுகள். புதிதாகப் பிறந்த திருவாளியன்
பருவமடைய பத்தாண்டுகள் ஆகும். குட்டிகள் பிறந்தவுடனேயே தாயின் துணையின்றி வாழக்கூடியவை.
கடல்அருங்காட்சியகம் ஒன்றில் பெண் திருவாளியன் ஒன்று, ஆண் துணையில்லாமலேயே சூல் கொண்டு,
குட்டி ஈன்று, அத்தனைப் பேரையும் மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்திருக்கிறது.
திருவாளியன் சுறா, மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் தராத சுறா. கடலில் இதைக் கண்ணால்
காண்பதை நற்குறியாக பரதவர்கள் கருதுவார்கள். திருவாளியன் சுறாவைக் கண்ணால் கண்டால்
மீன்பிடிப்பு அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல பிடிபட்ட திருவாளியன் சுறாவை
படகின் முன்அணியத்தில் தொங்க விட்டால் நல்லதிர்ஷ்டம் வாய்க்கும் என்ற நம்பிக்கையும்
காலம் காலமாக உள்ளது. (ஆனால், பிடிபட்ட திருவாளியனுக்கு அதிர்ஷ்டம் இல்லை போலும்)
function disableSelection(target){
if (typeof target.onselectstart!="undefined") //IE route
No comments :
Post a Comment