Friday, 17 February 2017

கீரிப்பல்லன் சுறா (Thresher Shark) (Alopias Vulpinus)


சுறாக்களில் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் சுறா கீரிப்பல்லன் சுறா. பார்த்த மாத்திரத்தில் இதை அடையாளம் கண்டு கொள்ளலாம். உபயம்: இதன் மிக நீண்ட சாட்டை போன்ற வால்.
மீன்களின் வாலில் உள்ள கீழ்த்தூவிக்கு சுக்கான் தூவி என்பது பெயர். சுறாக்களைப் பொறுத்தவரை இந்த சுக்கான் தூவி, திசை திரும்ப உதவும். வாலின் மேல்தூவி நீந்தப்பயன்படும்.
கீரிப்பல்லன் சுறாவின் வால்மேல்தூவி (Caudal fin upper lobe) மிக நீளமானது. கீரிப்பல்லன் ஏறத்தாழ 14 அடி நீளம் என்றால், வளர்ந்த பெரிய சுறாவின் வால், அதன் உடலில் மூன்றில் இருபங்கு இருக்கும். அதுவே இளம் கீரிப்பல்லனாக இருந்தால், சுறாவின் உடலைக்காட்டிலும் வாலின் நீளம் மிக அதிகமாக இருக்கும்.
1.6 மீட்டர் முதல் 6 மீட்டர் வரை கீரிப்பல்லன் வளரக்கூடும். இதன் மொத்த நீளத்தில் சரிபாதி வாலாக அமையும். 350 முதல் 500 கிலோ வரை நிறையுள்ள சுறா இது.
வாலைக்குழைத்து வரும் நாய்தான் அது மனிதருக்குத் தோழனடி பாப்பா என்றார் பாரதி. ஆனால், வாலைக்குழைத்து வரும் கீரிப்பல்லன் மனிதனுக்கு நண்பனும் இல்லை. எதிரியாகவும் இதைக் கருதுவற்கில்லை. சுறாவின் முன்பக்கம் பெரும்பாலான கடலுயிர்களுக்கு ஆபத்தானது. ஆனால், கீரிப்பல்லனைப் பொறுத்தவரை அதன் முன் பக்கம் மட்டுமல்ல, பின் பக்கமும் கடலுயிர்களுக்கு ஆபத்தானது. காரணம், வாலை வலிமை மிக்க ஆயுதமாக கீரிப்பல்லன் சுறா பயன்படுத்தக்கூடியது.
மீன்கூட்டத்தை அதிலும் சாளை கூட்டத்தைக் கண்டால் கீரிப்பல்லன் சுறா, அந்தக்கூட்டத்தை நோக்கி விரையும். மீன்கூட்டத்தை நெருங்கியதும், முதுகுத் தூவியை ஒரு திருகு திருகி, ஒரு நெளிப்பு நெளித்து அதன்மூலம் திடீரென தன் ஓட்டத்தை நிறுத்தும். இப்படித் திடீரென நிற்கும் போது சுறாவின் தாடை கீழ்நோக்கி சாய்ந்து தலைகீழாக அது கவிழும். அப்படி கவிழும் வேகத்தில் வாலால் மீன் கூட்டத்தை அது அடிக்கும். இந்த அடியால் மீன்கூட்டத்தின் பலமீன்களுக்கு முள் முறியலாம். காற்றுப்பை சிதைந்து பல மீன்கள் கடல்மேல் மிதக்க நேரிடலாம். இந்த தடாலடி தாக்குதலுக்குப்பின் கீரிப்பல்லன் மெதுவாக கடல்மட்டத்துக்கு வந்து அங்கு மிதக்கும் மீன்களை மேய்ந்து உணவாகக் கொள்ளும்.
கீரிப்பல்லனின் இந்த சாட்டையடி மீன்வேட்டை பொதுவாக இரவில்தான் நடைபெறும். மூன்றில் ஒரு தாக்குதலே வெற்றியைத் தரும். மற்ற இரு தாக்குதல்களும் தோல்வியில் முடியும்.
கீரிப்பல்லனில் மொத்தம் மூன்று வகை. ஒன்று பெரிய கண்ட கொண்ட கீரிப்பல்லன்சுறா (Alopias superciliosus). கீரிப்பல்லனில் மிகப்பெரிய சுறா இதுதான். இதைத்தவிர சாதாரண ஒரு கீரிப்பல்லன், ஆழ்கடலில் திரியும் ஒரு கீரிப்பல்லன் ஆகியவை உண்டு. ஆழ்கடல் கீரிப்பல்லன் (Pelagic thresher)தான் இந்த மூன்றுவகை சுறாக்களில் சிறியது.
கீரிப்பல்லனின் உடல் கருநீலம் கலந்த கருஞ்சாம்பல் நிறம், அடிவயிறு வெள்ளை நிறம். சிறுகீரிப்பல்லனின் தாடை சிறியது. கண்களும் சிறியது. முழுக்க முழுக்க இது வெப்பக்கடல் மீன். ஆனால், கடலில் ஆழம் காண முடியாத கசம் பகுதியில் குளிர்நிறைந்த நீரோட்ட இடங்களிலும் கீரிப்பல்லன் காணப்படும். இதன் உடலில் சிவப்பு சிற சதையும், சிறுசிறு ரத்தக்குழாய்களும் இருக்கும். அதன்மூலம் குளிர்க்கடலில் தனது உடலை இது சூடுபடுத்திக் கொள்ளும். உண்ட இரையை செரிக்கவும் இந்த உடல்சூடு உதவுகிறது.
கீரிப்பல்லன்சுறா மீன்கூட்டத்தை, தனித்தும் வேட்டையாடும். இணை சேர்ந்தும் வேட்டையாடும். சிறு கூட்டமாகவும் இவை திரியும். கீரிப்பல்லனின் பற்கள் பெயருக்கேற்ப கூர்மையானவை. மரம் அறுக்கும் ரம்பத்தைப் போல கீரிப்பல்லனின் பற்கள் எதிரும்புதிருமான தெற்றுப்பற்கள். அதனால் பிடித்த இரை இதன் வாயில் இருந்து அவ்வளவு எளிதாக நழுவிப் போய்விட முடியாது.
பெரிய கண் கீரிப்பல்லன்
பெரிய கண்கொண்ட கீரிப்பல்லன் சுறாக்கள் மிகக்குறைந்த ஒளியில் மீன் வேட்டையாடக் கூடியவை. அதனாலேயே இவை பெரிய கண்கள் கொண்டவை. பெரிய கண் கீரிப்பல்லனின் விழிகள் ஒரு குழிக்குள் அமைந்திருக்கும். கண்ணை மேல்நோக்கி உருட்ட கீரிப்பல்லனால் முடியும்.
சுறாக்களில் சில இனச் சுறாக்கள் மட்டுமே செங்குத்தாக கடல்அடி ஆழத்துக்கும், மேல்மட்டத்துக்கும் சென்றுவரக்கூடியவை. பெரிய கீரிப்பல்லன் அந்த வகையான சுறா. பகலில் கடல்அடி ஆழத்தில் இருக்கும் பெரியகண் கீரிப்பல்லன், இரவில் இரைக்காக கடல்மட்டத்துக்கு வரும். இந்த செங்குத்துப் பயணம் நாள்தோறும் நடக்கும். இந்த வகை சுறாவின் தலைமேல் ஆழமான இரு வரிப்பள்ளங்களும் அமைந்திருக்கும்.
கீரிப்பல்லன் சுறாக்கள் கடல்நீருக்கு மேல் முழுவதுமாக துள்ளிக்குதிக்கும் பழக்கம் உள்ளவை. அதுபோல அடிக்கடி பவழப்பார்களைத்தேடி வரும் வழக்கமும் கீரிப்பல்லன்களுக்கு உண்டு. பார்களில் வாழும் கிளிஞ்சான் (Wrasse) இன மீன்களை கீரிப்பல்லன் தேடி வரும். கீரிப்பல்லனின் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளையும், செத்த செதிள்களையும் கிளிஞ்சான் மீன் நீக்கி அவற்றை இரையாக்கும். இத்தகைய பேருதவி புரியும் கிளிஞ்சான் மீன்களை கீரிப்பல்லன் சுறாக்கள் ஒருநாளும் இரையாக்காது.
கீரிப்பல்லன் சுறாக்களைப் பற்றி உறுதி செய்ய முடியாத இரண்டு தகவல்கள் இருக்கின்றன. ஒன்று இந்தவகை சுறா, அம்மணி உழுவையின் மீது அமர்ந்து அதை வால் என்னும் சாட்டையால் அடித்தபடி குதிரையேற்றம் செய்யும் என்ற தகவல்.

அடுத்ததாக, கீரிப்பல்லன் சுறாவைப் பிடித்து வந்து கரையில் போட்டு வெய்யிலில் காய விட்டால், அதன் தசை, அம்மணி உழுவையைப் போலவே உருகி ஓடி, தோல் மட்டுமே மிஞ்சும் என்ற தகவல். உறுதி செய்யப்படாத இந்த இரு தகவல்களும் கீரிப்பல்லன் சுறா பற்றிய நமது அறியும் ஆர்வத்தை  மேலும் அதிகப்படுத்துகின்றன

No comments :

Post a Comment