Friday, 26 August 2016

கொட்டலசு (அலசு) (Barnacle)

புவிப்பந்தில் பல லட்சம் ஆண்டுகள் பழைமையான ஒரு கடல் உயிர் கொட்டலசு. கடல்அலைகள் தாலாட்டும் பாறைப் பகுதிகள், படகுகளின் அடியில் இந்த அரிய வகை கடல் உயிர்க்கூட்டத்தை அடிக்கடி காணலாம்.
அலைகள் வந்து மூழ்கடிக்கும்போது கொட்டலசின் எரிமலை கூம்பு வடிவ உடலின் மேற்கதவு திறந்து கொள்ளும். அதன் உள்ளே இருந்து இறகு போன்ற மென்மயிர்த்தூவல் போன்ற ஓர் உறுப்பு அடிக்கடி வெளியே வந்து உள்ளே செல்லும். இந்த இறகுப் போன்ற காலால், கடல்நீரில் உள்ள உணவுத் துகள்களை சேகரித்து கொட்டலசு உண்கிறது.
கொட்டலசுகளில் ஏறத்தாழ ஆயிரம் வகைகள் உள்ளன. கருவாலிக் கொட்டை போன்ற கொட்டலசே பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படும்.
கொட்டலசு, நத்தை, சிப்பி போன்றவற்றின் இனம் என்று கருதப்பட்டாலும் உண்மையில் இது நண்டு, இறால் போன்ற உயிர்களுடன் நெருங்கிய உறவு உடையது.
கொட்டலசின், லார்வா எனப்படும் நுண்புழு ஏறக்குறைய நண்டின் நுண்புழு போன்றது. கடல்நீரில் கவர்களுடன் மிதந்தபடி திரியும் இந்த நுண்புழு, அங்குமிங்கும் அலைந்து கடல் பாறைகள், படகுகள், மிதக்கும் கட்டைகளில் சரியான இடத்தைத் தேர்வு செய்து தலைகீழாக ஒட்டிக் கொள்ளும்.
பிறகு, சுண்ணாம்பு போன்ற ஒன்றை சுரக்கச் செய்து, தன்னைச்சுற்றி தகடுபோன்ற கனமான பாதுகாப்பு கவசம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும்.
இதன்மூலம் மீன்போன்ற மற்ற கடல் உயிர்களிடம் இருந்து கொட்டலசு தப்பிக்கும். கடல்அலைகளால் அடித்துச் செல்லப்படாமலும் இது காப்பாற்றப்படும்.
கொட்டலசு ஒருமுறை ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டால், பின்னர் அதன் வாழ்நாள் முழுவதும் அதே இடத்தில்தான் கழியும்.
மிதக்கும் படகுகள், மரத்துண்டுகள், பாறைகளில் மட்டுமில்லாமல் திமிங்கிலம், ஆமை, நண்டு, ஏன் கடல்பாம்புகள் மீது கூட கொட்டலசு ஒட்டிக் கொண்டு உயிர் வாழும்.
கொட்டலசு 6 மாதங்களில் முழுவளர்ச்சி அடையும், 5 முதல் 10 ஆண்டுகள் வாழும். சில கொட்டலசுகள் அதையும் தாண்டி உயிர்வாழக்கூடியவை.
கடல் அலை வந்து நீராட்டிச் செல்லும்போது மேல் திறப்பைத் திறந்து தன் கால்களால் துழாவி இதுகடல்நீரிலுள்ள நுண்சத்துகளைத் திரட்டி வாய்க்குள் நுழைத்து உணவாக்கிக் கொள்ளும்.
இது, ஒரு மனிதன் தலைகீழாக நின்று தன் கால்களால் உணவை சேகரித்து அதை வாய்க்குள் திணிப்பதுபோன்ற வேலை.

கொட்டலசுகளில் ஒன்று வாத்து கொட்டலசு. மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரே கொட்டலசு இதுதான். வாத்துகள் இந்த வகை கொட்டலசில் இருந்துதான் உருவானதாக பழங்காலத்தில் மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். கப்பலின் அடியில் ஒட்டியிருக்கும் வாத்து கொட்டலசு பின்னர் சிறகுகள் முளைத்து வாத்தாக மாறி பறப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள்.
கப்பல், அல்லது தோணியின் அடியில் படரும் கொட்டலசுகள் நாளடைவில் கப்பல், அல்லது தோணியின் பாரத்தை அதிகமாக்கி, அவற்றின் வேகத்தைக் கணிசமாகக் குறைத்து விடக்கூடியவை.
அதனால், காலம்தோறும் கப்பல்கள், தோணிகள் கரையேற்றப்பட்டு அவற்றின் படர்ந்திருக்கும் கொட்டலசுகள் திட்டிக் கொண்டே அகற்றப்படுவது வழக்கம்.

கொட்டலசு என்ற பெயரே தமிழில் திரிந்து இப்போது ஆங்கில பாணியில் கொட்லாஸ் என அழைக்கப்படுகிறது. விரைவில், கொட்லாஸ் மீண்டும் தமிழில் கொட்டலசாக மாறும் என நம்புவோமாக…

Tuesday, 16 August 2016

கணவாய்



கணவாய்.. இந்த கடலுயிர் ஏறத்தாழ 289 வகைகளைக் கொண்டது. முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், தூண்டில் கணவாய், பேய்க் கணவாய் என கணவாய்களின் உலகம் மிகப்பெரியது.
நாம் இங்கே பேசப்போவது எட்டுக்கால்களைக் கொண்ட பேய்க்கணவாயைப் பற்றி..
அக்டோ என்றால் கிரேக்க மொழியில் எட்டு. அக்டோபர் ஒருகாலத்தில் 8ஆவது மாதமாக இருந்ததால்தான் அக்டோபர் என்று பெயர் பெற்றது. அதேப்போல 8 கால்களை கொண்டு விளங்குவதால் பேய்க் கணவாய் அக்டோபஸ் (Octopus) என்ற பெயருடன் திகழ்கிறது. அக்டோபஸ் என்றால் எட்டு கைகளைக் கொண்டது என்று பொருள்.
நீலநிற இரத்தமும், 3 இதயங்களும் கொண்ட விந்தை உயிரினம் கணவாய். இதன் கண் குருடு என்றாலும், தோலின் மூலம் இது வெளிச்சத்தைப் பார்க்கக் கூடியது..10ல் ஒரு நொடிக்குள், இது நீலம், சாம்பல், பழுப்பு, பச்சை என நிறம் மாறக் கூடியது.
பேய்க்கணவாயின் உடலில் எலும்போ, கடினமான தகடோ கிடையாது. இதன் உடலில் உள்ள ஒரே வலிமையான பாகம், இதன் கிளிபோன்ற கூரிய அலகுதான். எலும்பற்ற உடலைக் கொண்டு விளங்குவதால் பேய்க் கணவாய், கடல் பாறைகளின் சிறிய கீக்கிடங்களில் கூட, உடலைப் பிதுக்கி நுழைந்து ஒளிந்து கொள்ளும்.
கூரிய அலகால் இது சிப்பி போன்றவற்றை பிளந்து அதன் உள்ளே நச்சு உமிழ்நீரை செலுத்தி இரையை செயலற்றதாக்கும். பின்னர் அதை இரையாக்கிக் கொள்ளும்.
இதன் 8 கைகளையும் உணரிழைகள் என்று சொல்லாமல் கைகள் என்றே கொள்ளலாம். பேய்க்கணவாயின் நியுரான்களில் மூன்றில் இருபங்கு அதன் கைகளில்தான் உள்ளது.
இந்த 8 கைகளும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவை. ஒரு கை, பார் இடுக்கில் இரையைத் தேடும்போது, மற்றொரு கை சிப்பியைத் திறக்க முயற்சிக்கும்.
இந்த எட்டுகைகளைப் பயன்படுத்தி, படகுகளில் கூட பேய்க்கணவாய் ஏற வல்லது. பேய்க்கணவாயின் கைகள் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வளர்ந்து விடும்.
இதன் கைகள் ஒவ்வொன்றிலும் கிண்ண வடிவில் ஏராளமான உறிஞ்சான்கள் உள்ளன. இந்த உறிஞ்சான்கள் மிகச்சிறந்த அளவில் தொடுஉணர்வு கொண்டவை. உறிஞ்சான்கள் மூலம் பேய்க்கணவாயால் தொடும் பொருளின் சுவையை அறிந்து கொள்ள முடியும்.
கணவாயின் இரத்தம் நீலநிறமானது என ஏற்கெனவே பார்த்தோம். Hemocyanin  என்ற தாமிரம் கலந்த புரதச்சத்து காரணமாக கணவாயின் இரத்தம் நீலநிறமாக இருக்கிறது. உயிர்க்காற்றை ஏற்றும்போது கணவாய் அடர் நிறமாகவும், உயிர்க்காற்றை விடும்போது வெளிறவும் செய்யும்.
பேய்க்கணவாயின் 3 இதயங்களுக்கு உள்ள முதன்மை வேலை உடல்பாகங்களுக்கு ரத்தம் பாய்ச்சுவதுதான். ஓர் இதயம், உடல் பாகத்துக்கு உயிரூட்டும்போது, மற்ற இரு இதயங்கள், பூ அல்லது இணாட்டு எனப்படும் கணவாயின் செவுள்களுக்கு ரத்தம் செலுத்துகிறது.
கணவாய் நீந்தும்போது இப்படி ரத்தம் செலுத்தப்படுவது தாற்காலிகமாக நிறத்தப்படும். இதனால் கணவாய் களைப்படையும் என்பதால் பெரும்பாலும் நீந்துவதைத் தவிர்த்து, கடல்தரையில் தத்தி தத்தி தவழ்ந்து செல்வதையே பேய்க்கணவாய் விரும்பும்.
நீந்தும்போது சிபான் (Siphon) என்ற குழாய்க்குள் கடல்நீரை நிரப்பி, அதை வேகமாக வெளியே தள்ளி அதன்மூலமும் கணவாயால் நீந்த முடியும்.
கணவாய்கள் பொதுவாக இரவிலும் சில அந்திமாலை, அதிகாலை வேளைகளிலும் இரை தேடும். மீன், சிப்பி, இறால்களுடன் கடல்பறவைகளும் கூட கணவாய்க்கு இரையாகும். இரையின் மீது விழுந்து எட்டு கால்களால் அதை அமுக்கி தன் வாய்க்கு இழுத்து கணவாய் அதை உணவாக்கும்.
எதிரி மிரட்டினால் மை போன்ற கறுப்புத்திரவத்தை பீய்ச்சியடித்து எதிரியின் கண்பார்வையை கணவாய் மறைக்கும். இந்த மை எதிரியின் பார்வையை மறைப்பதோடு, எதிரியின் மோப்ப உணர்வையும் செயலிழக்கச் செய்து கணவாயை மோப்பம் பிடித்து பின்தொடர விடாமல் செய்து விடும். உலகில் மை வேலை தெரிந்த முதல் மந்திரக்கார உயிர் கணவாய்கள்தான் போலும்.
பேய்க்கணவாய் நம் வீட்டுப்பூனை அளவுக்கு அறிவுள்ளது. தக்கை கொண்டு மூடிவைத்த கண்ணாடி குப்பியை கணவாயால் திறக்க முடியும். மூடியை திருகிதிருகி திறக்கும் அறிவும் கணவாய்க்கு உண்டு.
கணவாய்கள் 2 லட்சம் முதல் 4 லட்சம் முட்டைகள் வரை இடக்கூடியவை. தாய்க் கணவாய் உணவு எதுவும் உண்ணாமல் அதன் முட்டைகளை பாசத்துடன் காக்கும்.
கணவாய்களில் ஆஸ்திரேலியக் கடல்பகுதிகளில் காணப்படும் நீலவளையக் கணவாயின் கடி ஆபத்தானது.

பேய்க்கடம்பன், சிலந்திமீன், நீராளி, சாக்குச் சுருள் போன்றவை கணவாயின் வேறு தமிழ்ப்பெயர்கள்.

Wednesday, 10 August 2016

சொறி மீன் (JellyFish)

ஏறத்தாழ 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கடலில் முன்தோன்றிய மூத்த இனம் சொறி இனம். இழுது மீன் எனவும் அழைக்கப்படும் சொறி மீன் உண்மையில் மீன் இனம் அல்ல. என்றாலும் இவை மீன்கள் என்றே அழைக்கப்படுகின்றன. சொறி

மீன்களில் ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. குடை முதல் குண்டூசித்தலை வரை பல அளவுகளில் சொறிமீன்கள் காணப்படுகின்றன.
ஜெல்லி போன்ற கொழகொழ உருவத்தில் இருப்பதால் இந்த இன மீன்களுக்கு ஜெல்லி மீன் என்பது ஆங்கிலத்தில் பெயர்.
நீரும், புரோட்டினும் கலந்து செய்த கலவையான சொறிமீன்கள், ஒருவகை மிதவை உயிரினங்கள். தன்னிச்சையாக இவற்றால் நீந்தமுடியும் என்றாலும் மிக வேகமாக நீந்தமுடியாது. கடலின் நீரோட்டத்தின்படி வழிந்து செல்லக்கூடிய சொறிமீன்கள், குடைபோன்ற அதன் தலையை அசைத்து அசைத்து நீந்தக் கூடியவை. குடையின் அடியில் உள்ள வாயால் கடல்நீரை வெளியே பீய்ச்சி அதன்மூலமும் சொறி மீனால் நீந்த முடியும்.
கடலில் மிதக்கும் கவர்கள், பாசிகளுடன் கலந்து மிதக்கும் சிறு மீன்முட்டைகள், சிற்றுயிர்கள் சொறி மீனின் உணவுகள். வாயால் உணவு உண்டு, அதே வாயால் வேண்டாதவற்றை இவை வெளியே தள்ளும். வயிற்றுக்குள் இரை இருக்கும்போது சொறிமீனால் மிதக்க முடியாது என்பதால், உண்ட வேகத்தில் உணவை இவை செரித்துவிடும். சிலவகை சொறிமீன்கள் தன் இனத்தையும் கூட உண்ணக்கூடியவை.
பெண்ணின் சேலை முந்தானை போல சொறிமீனைத் தொடர்ந்து கடலில்மிதந்தபடி வரும் அதன் விழுதுபோன்ற உணர்இழைகள், இரையைப் பிடிக்க உதவுகின்றன. இரையின் உடலில் நஞ்சை செலுத்தி அதை செயலிழக்க வைத்து உணவாக்கவும் இந்த உணர்இழைகள் பயன்படுகின்றனசொறிமீனை நாம் தொடும்போது அதன் நஞ்சு நம் தோலுக்குள் ஊடுருவி வேதனையைத் தருகிறது.
சொறிமீன்களில் எல்லா இனங்களும் நஞ்சுள்ளவை அல்ல. இருந்தாலும் எந்த சொறிமீனையும் ஆய்வு நோக்கில் நாம் தொட்டுப்பார்க்காமல் இருப்பதே நல்லது.
சில வேளைகளில் அதிக மீன்பிடிப்பு காரணமாக சொறிமீன்களை இரையாக்கும் மீன்கள், ஆமை போன்றவை குறைந்து போவதாலும், கடலில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றத்தாலும், ஊட்டமிக்க உணவு அதிகம் கிடைப்பதாலும் சொறிமீன்கள் அளவுகடந்து அதிக அளவில் பெருகும். இரு நீரோட்டங்கள் இணையும் இடத்தில் இதுபோன்ற சொறிமீன் கூட்டம் திடீரென பல்கிப் பெருகும். சொறிமீன்கள் பெருகினால் கடலில் கண்ணில் கண்ட இரைகளை எல்லாம் தின்று மீனவளத்தைக் குறையச் செய்யும்,
சில வேளைகளில் கூட்டம் கூட்டமாக சொறிமீன்கள் கரையொதுங்கவும் செய்யும்.
தமிழில் சொறிமீன் இனங்களுக்கு பலப்பல பெயர்கள் உள்ளன. அழுவைச் சொறி, காக்காய்ச் சொறி, வழுப்பினி சொரி, இட்லி சொறி, மணிச்சொறி, தவிட்டுச் சொறி, குவ்வரவுச் சொறி, நுங்குச் சொறி, குடுக்கைச் சொறி, வௌச் சொறி, கூரமா சொறி, வெளிர் சொறி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
காக்காய்ச் சொறி என்பது நீலநிறமான நீண்ட வால் உள்ள சொறி. நுங்குச் சொறி சதுரவடிவம் கொண்டது. கூரமா சொறி புள்ளிகள் உள்ளது. இது நம்மீது பட்டால் தீப்பட்டது போன்ற வலியுணர்வைத் தரும்.
வௌச்சொறியும், குடுக்கைச் சொறியும் பனை நுங்கைப் போன்றவை. தவிட்டுச் சொறி என்பது குவ்வரவு சொறி போன்றது. அதாவது கேழ்வரகு மாவின் நிறம் கொண்டது.
சொறிகளில் மிகநஞ்சுள்ளவைக்கு 2 புள்ளிகளும் நஞ்சு குறைந்தவற்றுக்கு ஒரு புள்ளியும் நாம் வழங்குவோமானால், வௌச்சொறி, குடுக்கைச் சொறி இரண்டும் ஒரு புள்ளி பெறும். தவிட்டுச் சொரி, குடுக்கச் சொறி போன்றவை தலா 2 புள்ளிகள் பெறும்.
சொறிமீன்களால் இயற்கைக்கு என்னதான் நன்மை. இவை கடல் ஆமைகளுக்கும், சிலவகை மீன்களுக்கும் உணவாகின்றன. சிலவகை மீன்கள் பெரிய கொல்மீன்களிடம் பிடிபடாமல் தப்பிக்க சொறிமீன்கள் காப்பரண்களாகப் பயன்படுகின்றன.
சீனா போன்ற நாடுகளில் சிலவகை சொறிமீன்கள் உணவாகவும் பயன்படுகின்றன.


Tuesday, 26 July 2016

மூரை (Sea Urchin)

தமிழக தென்பகுதி கடலோரத் தேரிகளில் காணப்படும் முள்ளிப்பூ போன்ற உருவம் கொண்ட கடல் உயிரினம் மூரை.

 முள்பந்து போன்ற இதன் உருவம், முள்ளம்பன்றியை நினைவுபடுத்தக்கூடியது. ஆங்கிலத்தில் Urchin என்ற பெயர் மூரைக்கு வந்தது இதனால்தான்.
மூரைகளில் ஏறத்தாழ 200 இனங்கள் இருக்கின்றன. கறுப்பு, சிவப்பு, பழுப்பு, இளஞ்சிவப்பு, ஊதா என பலவகை நிறங்களில், பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் இவை காணப்படும்
சிரட்டை முதல் தேங்காய் அளவிலான மூரைகள் உள்ளன. பனிக்கடலான துருவக் கடல்களைத் தவிர மற்ற எல்லாக் கடல்தரைகளிலும் மூரையைப் பார்க்க முடியும். சகதி, பார்களில் இவை அதிகம் தட்டுப்படும்.
மூரைகளின் உடலைச்சுற்றி முள்கள் காணப்படும். இவை அசையக் கூடியவை. மூரையை ஒருவர் தொட்ட மாத்திரத்தில் அந்த இடத்தை நோக்கி முள்கள் சிலிர்க்கக் கூடியவை.
உடலின் மேல் பகுதியில் இருக்கும் முள்கள் கீழ்நோக்கி வரவர சிறிய முள்களாக மாறும். 
மூரையின் முள்கள் மூரையை பாதுகாப்பது மட்டுமின்றி, மெதுவாக இடம்விட்டு இடம் நகரவும், உருமறைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. கடல்பார்களை மூரை ஒட்டிப்பிடித்துக் கொள்ளவும் முட்கள் பயன்படுகின்றன. மூரையின் முறிந்த முட்கள் மீண்டும் வளரக்கூடியவை. அதிக சேதம் ஏற்பட்டால் மட்டுமே முட்கள் மீண்டும் வளராது. முள்களின் முனையில் நகம் போன்ற அமைப்பும் உண்டு.
மூரையின் உடல் சுண்ணாம்புபோன்ற கடினத் தகடால் ஆனது. சிரட்டையைவிட சற்று தடிமன் குறைந்த தகடால் மூரை மூடப்பட்டிருக்கும். 
முட்களைத் தவிர நீண்ட குழாய் போன்ற கால்களும் மூரைக்கு உள்ளது. இந்த உறிஞ்சுக் கால்கள் மூலம் மூரை நகரவும், தன்னைச் சுற்றியுள்ள கடல்நீரில் மிதக்கும் உணவுத் துணுக்குகளை உறிஞ்சி உணவாக்கவும் செய்கிறது. உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இந்த உறிஞ்சுக்கால்கள் உதவுகின்றன.
மூரையின் வாய் அதன் அடிப்பகுதியிலும், மலத்துளை உடலின் மேற்பகுதியிலும் காணப்படும். இதன் வாய், அரிஸ்டாட்டிலின் விளக்கு என வித்தியாசமாக அழைக்கப்படுகிறது. 5 பற்கள் கொண்ட தகடு போன்ற வாயால் மூரை உணவை உட்கொள்கிறது. சிப்பி போன்றவற்றின் தோடுகளை உடைத்து உண்கிறது.
மூரைகள் ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் உயிர்வாழக்கூடியவை, செங்கடல் மூரை இனம் 200 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.
மூரைகள் கூட்டமாக கடல்பார்களில தங்கும். இது ஓர் இரவு நடமாட்ட விலங்கு. பகலில் பார் இடுக்குகளில் மறைந்திருந்து இரவில் இவை இரை தேடி வெளிவரும். ஒளியை விரும்பாத மூரை, இருள் மற்றும் நிழலைத் தேடி ஒதுங்கும். ஒரே பாரில் குடியிருக்கும் மூரைகள் பையப் பைய பாரை அரித்து தாங்கள் ஒளிந்து வாழ ஓர் இருப்பிடத்தைத் தேடிக் கொள்ளும்.
மூரை ஓர் அனைத்துண்ணி. கடல்பாசிகள், கடற்புல், பூண்டுகளைத் தவிர இறந்த நண்டு, மீன், சிப்பி, கடற்பஞ்சு, கொட்லாஸ் போன்றவை இதன் முதன்மை உணவு. ஒரு மூரை இன்னொரு மூரையை உண்ண வல்லது. இரை இருப்பதை மோப்பத்தால் அறிந்து ஒரே நேர்க்கோட்டில் பயணித்து இரை இருக்குமிடத்தை மூரை அடையும்.
மூரையின் முதன்மை எதிரி நட்சத்திரமீன் மற்றும் கிளாத்தி மீன்கள்தான். நட்சத்திர மீன் மூரையை ஆரத்தழுவி அதை இரையாக்கிக் கொள்ளும். கிளாத்தி மீன் வேகவேகமாக மூரையின் முள்களை நொறுக்கி, ஓட்டை உடைத்து உணவாக்கிக் கொள்ளும்.
ஒரு பார்க்கடல் செழித்துகாணப்படுகிறது என்பதற்கான அடையாளங்களில் ஒன்று மூரை. மூரை மாசற்ற கடல்களில் வாழக்கூடியது. மூரை இருக்குமிடம் பார் செழிக்குமிடம்.
கடல் மாசுபட்டால் அங்கு முதலில் இறக்கும் உயிரினங்களில் ஒன்று மூரை. அதேப்போல மூரை உயிர் வாழ சிலவகை ஒட்டுண்ணிகள் கண்டிப்பாக வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை நீக்கினால், முள்கள் உதிர்ந்து மூரை மெல்ல மடிந்து போகும்.
மூரையின் உள்ளிருக்கும் அரைதிரவ மஞ்சள்நிற பொருள் உண்பதற்கு மிகவும் ஏற்றது. கடலில்மிதக்கும் படகில் இருந்தபடி மூரையை பிளந்தால் அந்த வாசனைக்கு சுறா வர வாய்ப்புண்டு. கரையில் தீமூட்டி மூரையை சுட்டுத்தின்னும் பழக்கம் கடலோரத்தில் உண்டு.
கடலடியில் மூரையை ஒருவர் தொட்டதும் மூரை எச்சரிக்கையடைந்து பாரை இறுகப் பற்றிக் கொள்ளும். பிறகு கடப்பாரையில் அதை உடைத்து பிய்த்தெடுக்க மட்டுமே முடியும். மாறாக மூரையைத் தொட்டவுடன் தூக்கினால் எளிதாக அதை பாரில் இருந்து அப்புறப்படுத்தி விடலாம்.
மூரையின் முள்களுக்கு மூராங்குச்சி என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும். கடற்கரை சிற்றூர்களில் அ, ஆ, இ என சிறார்களுக்கு எழுத்தறிவித்த பெருமை மூரையின் முள்களுக்கு உண்டு.

Thursday, 21 July 2016

சிறுவண்ணாத்தி (Butterfly fish) பெருவண்ணாத்தி (Angelfish)


இந்த இரு அழகிய மீன்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடு அளவுதான். சிறுவண்ணாத்தி மீன்கள் சிறியவை. பொதுவாக 6 அங்குல நீளத்துக்குக் குறையாதவை. துடிப்புடன் வேகமாக நீந்தக் கூடியவை. பெரு வண்ணாத்திகள் பெரியவை. மிக மெதுவாக அழகாக நீந்தக் கூடியவை. ஓரடி முதல் இரண்டடி அளவுள்ளவை.
இவ்விரு வகை மீன்களுமே பார் மீன்கள். இவற்றில் எத்தனை இனங்கள் இருக்கின்றன என்பது இன்னும் சரிவர கணிக்கப்படவில்லை. ஆனால், எண்ணிக்கை எப்படியும் 150ஐத் தாண்டும்.
சிறு வண்ணாத்தி மீன்களில் பெரிய மீன்களும் சிறிய மீன்களும் ஒரே மாதிரியான தோற்றம் உள்ளவை. ஆனால், பெருவண்ணாத்தி மீன்களில் பெரிய மீன்களும், சிறிய மீன்களும் ஒன்றுபோல இருப்பதில்லை. வேறு வேறு இன மீன்கள் போல அவை தோன்றி மதிமயக்கும்.
சிறு வண்ணாத்தி பளீரிடும் அழகிய வண்ணங்களைக் கொண்டிருந்தாலும் இதன் தலை, உடலில் இருந்து தனித்துவமான நிறத்தில் தோன்றும். பொதுவாக கண்கள் மீது கரியஇருண்ட கோடு ஓட வாய்ப்புண்டு. பெரும்பாலான சிறுவண்ணாத்திகளில் உடலில் கண்போன்ற ஒரு பொட்டு உண்டு.
இந்த வகை மீனை முன்பின் பார்த்திராத கொல்மீன்கள், தலை எது வால் எது என்று தெரியாமல் திகைக்க வாய்ப்புண்டு. சிறுவண்ணாத்தி பின்னோக்கி வேகமாக நீந்தும்போது, கண் என்று நினைத்து தவறாக கண்போன்ற பொட்டை கொல்மீன் தாக்க வாய்ப்புண்டு. இதனால் சிறுஇழப்புடன் சிறு வண்ணாத்தி தப்பிமறையும்.
சிறுவண்ணாத்திகளில் சிலவகை மீன்களுக்கு நீளமான சாமணம் போன்ற அலகும், அதன் நுனியில் வாயும் உண்டு. இதன்மூலம் கடல்பார்களின் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் இரைகளை, ஜப்பானியர்களின் சாப்ஸ்டிக் லாகவத்துடன் சிறுவண்ணாத்தியால் எடுக்க முடியும்.
சிலவகை பெரிய மீன்களில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்றி அதை இரையாக உண்ணவும் இந்த சாமணஅலகு பயன்படுகிறது.

இப்போது பெருவண்ணாத்திக்கு வருவோம். ஏலவே சொன்னது போல இவை ஓரடி முதல் ஈரடி வரை நீளம் உள்ளவை. பெரும்பாலும் செவ்வக வடிவம் கொண்ட மீன்கள் இவை.
கடலில் முக்குளிப்பவர்களைக் கண்டு பயப்படாமல் அவர்களின் அருகில் வந்து நீந்தும் பழக்கம் இந்தவகை மீனுக்கு உண்டு. தன் அழகை மற்றவர்களுக்கு இது காட்டத் துடிப்பது போல அப்போது அவை நடந்து கொள்ளும்.
பெருவண்ணாத்தி மீன்களில் பொதுவாக வாயின் வண்ணமும் உடல் வண்ணமும் ஒன்றுபோல இராமல் மாறுபட்டு இருக்கும்உதட்டுச் சாயம் பூசியது போன்ற வண்ண வாயுடைய மீன் இது. இதன் முதுகு மற்றும் வால்தூவிகள் பொதுவாக வெண்மை நிறத்தில் காணப்படும். முதுக்குத் தூவியின் முனைகள் சாட்டை போல சற்று நீண்டிருக்கலாம்.

பெருவண்ணாத்திகளின் செவுள் மறைவில் தடிமனான முள் இருக்கவும் வாய்ப்புண்டு.

Saturday, 25 June 2016

எக்காள மீன் (Cornet Fish)

மிக நீண்ட குழாய் போன்ற தோற்றமுடைய பல வண்ணம் கொண்ட ஒரு பார் மீன் இது. குழாய் போன்ற வாயும், வாலடியில் தனித்து தெரியும் சாட்டை போன்ற அமைப்பும், நீள்வட்ட கண்களும் எக்காளத்தின் தனித்துவமான அடையாளம். முரல்களுக்கு இருப்பது போலவே எக்காளத்தின் வால் அருகே ஒரே மாதிரியான ஒரே அளவிலான முதுகு மற்றும் அடித் தூவிகள் அமைந்திருக்கும். இந்த தூவிகள் ஊடுருவிப் பார்க்க கூடிய அளவுக்கு

கண்ணாடி போன்றவை. மீனின் வாலும் கிட்டத்தட்ட தூவி போன்ற அமைப்புடையது. வாலுக்கு அப்பால், உடலின் தொடர்ச்சி போல நீண்டு நிற்கும் சாட்டை போன்ற அமைப்பு உண்டு. இந்த சாட்டையால் இரை மீன்களை இது உணர்வதாக கருதப்படுகிறது. இதன் சாட்டை, உணர்வு உறுப்புப் போல பயன்படுவதாக நம்பப்படுகிறது..
பார் அடுத்த மணல்வெளி, கடல்தாழை, பவளப்பாறைப் பகுதிகளில் வாழும் எக்காளம், தனியாகவும், சிறு கூட்டமாகவும் திரியும். இரை மீனைப் பிடிக்கப்போகும்போதும், எதிரிமீன் துணுக்குற செய்யும் போதும் இது வேகமாக நிறம் மாறக்கூடியது. இரவில் இந்த மீனின் உடலில் வரிகள் தென்படலாம்..
குழாய் போன்ற வாயால் எக்காளம், சிறுமீன்களை உறிஞ்சக் கூடியது. சேவல்கோழி மீன் இதன் முக்கிய இரை. செதிள்கள் அற்ற எக்காளம் மீன் கடல்குதிரைகளின் உறவுக்கார மீன்.
எக்காளம் ஏறத்தாழ 6 அடி நீளம் கூட வளரக்கூடியது. மிகநீண்ட மெல்லிய உடல் இருப்பதால், என்னதான் ஆறடி நீளம்வரை இருந்தாலும் இந்த மீனின் எடை பிறந்த குழந்தையின் எடையைவிட குறைவுதான்.
இந்த மீன் நீந்தினாலும்கூட நீந்துவது போல தெரியாமல், நீரோட்டத்தில் வழிந்து செல்வது போலவே தோன்றும். மனிதர்களுக்கு ஆபத்தற்ற மீன் எக்காளம். முக்குளிக்கும் மனிதர்களை இந்த மீன் கண்டுகொள்ளாது.
எக்காளத்தில் சிவப்புநிற எக்காளம் இந்திய பசிபிக் பெருங்கடல்களுக்கு உரித்தான மீன்.
டிரம்பட் (Trumpet) மீன், ஏறத்தாழ எக்காளம் போலவே இருந்தாலும் இந்த இரு வகை மீன்களுக்கும் இடையில் சில வித்தியாசங்கள் உள்ளன.
டிரம்பட் மீன்களுக்கு எக்காளத்துக்கு இருப்பதுபோல வால்நுனியில் சாட்டை கிடையாது. டிரம்பட் மீன்களின் முதுகில் 12 வரை முட்கள் காணப்படும். டிரம்பட் மீன் சிறியது. மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்த மீன் இரண்டுஅடி நீளம் வரை வளரலாம்.
டிரம்பட் மீன்கள் பழுப்பு, வெளிர் பழுப்பு, மஞ்சள் நிறமாகக் காணப்படலாம்.
எக்காளத்தைப் போல இந்த வகை மீனால் நிறம்மாற முடியாது. ஆனால் மிக அழகாக உருமறைப்பு செய்ய முடியும்.

எக்காளம் போலவே டிரம்பட் மீன்களும் நீரோட்டத்தில் வழிந்து செல்வதைப்போலத் தோன்றும். இவற்றின் தூவிகளும் ஒளிஊடுருவக் கூடியவை. டிரம்பட் மீன் மிகவேகமாக நீந்தும்போது அதன் அசைவைக் கண்டுகொள்வது கடினம்.
டிரம்பட் மீன் சிலவேளைகளில் அதன் தாடையை பாரில் ஊன்றி ஓய்வெடுத்துக் கொள்ளும். இந்தவகை மீன் வேட்டையாடும் விதமும் தனித்துவமானது. பெரிய கிளிஞ்சான் மீனுக்குப்பின் மறைந்து கொண்டு தன் நீள உடல்வெளியே தெரியாமல் டிரம்பட் மீன் நகர்ந்து வரும். கிளிஞ்சான் ஆபத்தற்ற மீன் என்பதால் அதை இரை மீன் கவனத்தில் கொள்ளாது. இந்தவேளையில் கிளிஞ்சானுக்குப்பின்னால் அதை ஒட்டி உருமறைப்பு செய்தபடி வரும் டிரம்பட்மீன் உரியவேளையில் மறைவில் இருந்து வெளிவந்து இரையை கொள்ளும்.

Thursday, 23 June 2016

முரல் (Gar fish)

மெலிதான நீலம் தோய்ந்த பச்சை வண்ண மீன் இது. உடல் வண்ணம் மட்டுமின்றி முரல் மீனின் எலும்புகளும் கூட பச்சை வண்ணம் தோய்ந்து காணப்படும், பகலில் பொதுவாக கடல் அடியில் பாசிகளுக்கு அடியில் இருந்து விட்டு, இரவில் கடல் மேற்பரப்பில் நீந்துவது இந்த வகை மீனின் பொதுவான பழக்கம். ஆரல் போன்ற சிறுமீன்கள் இதன் இரை.

முரலின் முதுகுத்தூவியும், வால் தூவியும் ஒரே மாதிரியானவை. இவ்விரு தூவிகளும் உடலின் பின்பகுதியில் வாலையொட்டி எதிரும்புதிருமாகக் காணப்படும். முரல் மீனின் வேகமாக உடல் அசைவுகளுக்கு இதுபோன்ற பின்தூவி அமைப்பு பெரிதும் பயன்படுகிறது.
வாலை தண்ணீர் மேற்பரப்பில் அசைத்தவண்ணம் நீர்மேல் வழுக்கியபடி விரைவது முரல் மீன்களின் இயல்பு. இரவில் வெளிச்சத்தை நோக்கி பாயும் பழக்கமும் முரலுக்கு உண்டு.
இதன் பற்கள் நிறைந்த நீண்ட அலகு காயத்தையும், சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது. உடலில் குத்திய முரலின் ஊசி போன்ற அலகு, உடைந்து துண்டுதுண்டாகவும் வாய்ப்புள்ளது.
முழுநிலா காலம், மற்றும் காற்று குறைந்த நிலாவெளிச்சக் காலங்களில் முரல்கள் கடற்பரப்பின் மேல் அதிக அளவில் மேயும். 
முரல்களில் வடிக்கிலி முரல், வாழியபோத முரல், வாளையா முரல் (வாளா முரல்), வரயி முரல், கருமுரல், பிள்ளை முரல், கோழியாமுரல், பாம்பு முரல், செல்ல முரல், இரங்க முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல், நெடு முரல், பாசி முரல், படுக்கா முரல், பரவை முரல், கட்ட முரல், பரவை முரல், கூறைமேதல் முரல், அலமுரல், வாடையா முரல் என பலவகைகள்..
இதில், கோழியா முரல், வடிக்கிலி முரல் போன்றவை Half beak என்ற அரை அலகு வகையைச் சேர்ந்தவை. இந்த வகை மீன்களில் கீழ்த்தாடை மட்டும் கூர்மையாக நீட்டிக் கொண்டு நிற்கும்.
முரல்களில் ஒருவகையான கலிங்கன் மீன்களுக்கு ஒரே அளவிலான கூரிய மூக்கு உண்டு. இந்த கூர் மூக்கு அலகுகளில் முதலைக்கு இருப்பது போல் கூரிய பற்களும் இருக்கும். உருளைக் கலிங்கன், கட்டைக் கலிங்கன் போன்ற மீன்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகை மீனுக்கும் ஒவ்வொரு வகை பெயர் புழங்குகிறது.
அதன்படி கீழ்த்தாடை நீண்ட முரல், பிள்ளை முரல், கட்டை முரல் என்றும், ஒரே அளவிலான ஊசிபோன்ற மூக்குடைய மீன் நெடுமுரல், வாளா முரல்,  என்றும் கருதப்படுவதுண்டு.
இதில் கலிங்கன் அல்லது பிள்ளை முரலுக்கு ஆள் பாய்ஞ்சான் முரல் என்ற பெயரும் உண்டு. கலிங்கனில் சிறியது சாத்தான் மீன். அனைத்து முரல்களிலும் மிகச்சிறியது பாச்சுவலை முரல். விரல் அளவே உள்ள சிறுமீன் இது.
அலகு நீண்ட முரல்கள், சிறிய மீன்களாக இருக்கும்போது நீண்ட அலகின்றி காணப்படும். வளர வளரத்தான் இவற்றில் அலகு தோன்றும்.
முரல்கள் பச்சை நிறமாக, பச்சை நிற எலும்புடன் காணப்படுவதால் பலர் அதை உண்ணத் தயங்குவார்கள். ஆனால் மனிதர்கள் உண்பதற்கேற்ற மிகச்சிறந்த மீன் முரல்.