கணவாய்
கணவாய்.. இந்த கடலுயிர் ஏறத்தாழ 289 வகைகளைக் கொண்டது.
முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், தூண்டில்
கணவாய், பேய்க் கணவாய் என கணவாய்களின் உலகம் மிகப்பெரியது.
நாம் இங்கே பேசப்போவது எட்டுக்கால்களைக் கொண்ட பேய்க்கணவாயைப்
பற்றி..
அக்டோ என்றால் கிரேக்க மொழியில் எட்டு. அக்டோபர் ஒருகாலத்தில்
8ஆவது மாதமாக இருந்ததால்தான் அக்டோபர் என்று பெயர் பெற்றது. அதேப்போல 8 கால்களை கொண்டு
விளங்குவதால் பேய்க் கணவாய் அக்டோபஸ் (Octopus) என்ற பெயருடன் திகழ்கிறது. அக்டோபஸ்
என்றால் எட்டு கைகளைக் கொண்டது என்று பொருள்.
நீலநிற இரத்தமும், 3 இதயங்களும் கொண்ட விந்தை உயிரினம்
கணவாய். இதன் கண் குருடு என்றாலும், தோலின் மூலம் இது வெளிச்சத்தைப் பார்க்கக் கூடியது..10ல்
ஒரு நொடிக்குள், இது நீலம், சாம்பல், பழுப்பு, பச்சை என நிறம் மாறக் கூடியது.
பேய்க்கணவாயின் உடலில் எலும்போ, கடினமான தகடோ கிடையாது.
இதன் உடலில் உள்ள ஒரே வலிமையான பாகம், இதன் கிளிபோன்ற கூரிய அலகுதான். எலும்பற்ற உடலைக்
கொண்டு விளங்குவதால் பேய்க் கணவாய், கடல் பாறைகளின் சிறிய கீக்கிடங்களில் கூட, உடலைப்
பிதுக்கி நுழைந்து ஒளிந்து கொள்ளும்.
கூரிய அலகால் இது சிப்பி போன்றவற்றை பிளந்து அதன்
உள்ளே நச்சு உமிழ்நீரை செலுத்தி இரையை செயலற்றதாக்கும். பின்னர் அதை இரையாக்கிக் கொள்ளும்.
இதன் 8 கைகளையும் உணரிழைகள் என்று சொல்லாமல் கைகள்
என்றே கொள்ளலாம். பேய்க்கணவாயின் நியுரான்களில் மூன்றில் இருபங்கு அதன் கைகளில்தான்
உள்ளது.
இந்த 8 கைகளும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவை.
ஒரு கை, பார் இடுக்கில் இரையைத் தேடும்போது, மற்றொரு கை சிப்பியைத் திறக்க முயற்சிக்கும்.
இந்த எட்டுகைகளைப் பயன்படுத்தி, படகுகளில் கூட பேய்க்கணவாய்
ஏற வல்லது. பேய்க்கணவாயின் கைகள் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வளர்ந்து விடும்.
இதன் கைகள் ஒவ்வொன்றிலும் கிண்ண வடிவில் ஏராளமான உறிஞ்சான்கள்
உள்ளன. இந்த உறிஞ்சான்கள் மிகச்சிறந்த அளவில் தொடுஉணர்வு கொண்டவை. உறிஞ்சான்கள் மூலம்
பேய்க்கணவாயால் தொடும் பொருளின் சுவையை அறிந்து கொள்ள முடியும்.
கணவாயின் இரத்தம் நீலநிறமானது என ஏற்கெனவே பார்த்தோம்.
Hemocyanin என்ற தாமிரம் கலந்த புரதச்சத்து
காரணமாக கணவாயின் இரத்தம் நீலநிறமாக இருக்கிறது. உயிர்க்காற்றை ஏற்றும்போது கணவாய்
அடர் நிறமாகவும், உயிர்க்காற்றை விடும்போது வெளிறவும் செய்யும்.
பேய்க்கணவாயின் 3 இதயங்களுக்கு உள்ள முதன்மை வேலை
உடல்பாகங்களுக்கு ரத்தம் பாய்ச்சுவதுதான். ஓர் இதயம், உடல் பாகத்துக்கு உயிரூட்டும்போது,
மற்ற இரு இதயங்கள், பூ அல்லது இணாட்டு எனப்படும் கணவாயின் செவுள்களுக்கு ரத்தம் செலுத்துகிறது.
கணவாய் நீந்தும்போது இப்படி ரத்தம் செலுத்தப்படுவது
தாற்காலிகமாக நிறத்தப்படும். இதனால் கணவாய் களைப்படையும் என்பதால் பெரும்பாலும் நீந்துவதைத்
தவிர்த்து, கடல்தரையில் தத்தி தத்தி தவழ்ந்து செல்வதையே பேய்க்கணவாய் விரும்பும்.
நீந்தும்போது சிபான் (Siphon) என்ற குழாய்க்குள் கடல்நீரை
நிரப்பி, அதை வேகமாக வெளியே தள்ளி அதன்மூலமும் கணவாயால் நீந்த முடியும்.
கணவாய்கள் பொதுவாக இரவிலும் சில அந்திமாலை, அதிகாலை
வேளைகளிலும் இரை தேடும். மீன், சிப்பி, இறால்களுடன் கடல்பறவைகளும் கூட கணவாய்க்கு இரையாகும்.
இரையின் மீது விழுந்து எட்டு கால்களால் அதை அமுக்கி தன் வாய்க்கு இழுத்து கணவாய் அதை
உணவாக்கும்.
எதிரி மிரட்டினால் மை போன்ற கறுப்புத்திரவத்தை பீய்ச்சியடித்து
எதிரியின் கண்பார்வையை கணவாய் மறைக்கும். இந்த மை எதிரியின் பார்வையை மறைப்பதோடு, எதிரியின்
மோப்ப உணர்வையும் செயலிழக்கச் செய்து கணவாயை மோப்பம் பிடித்து பின்தொடர விடாமல் செய்து
விடும். உலகில் மை வேலை தெரிந்த முதல் மந்திரக்கார உயிர் கணவாய்கள்தான் போலும்.
பேய்க்கணவாய் நம் வீட்டுப்பூனை அளவுக்கு அறிவுள்ளது.
தக்கை கொண்டு மூடிவைத்த கண்ணாடி குப்பியை கணவாயால் திறக்க முடியும். மூடியை திருகிதிருகி
திறக்கும் அறிவும் கணவாய்க்கு உண்டு.
கணவாய்கள் 2 லட்சம் முதல் 4 லட்சம் முட்டைகள் வரை
இடக்கூடியவை. தாய்க் கணவாய் உணவு எதுவும் உண்ணாமல் அதன் முட்டைகளை பாசத்துடன் காக்கும்.
கணவாய்களில் ஆஸ்திரேலியக் கடல்பகுதிகளில் காணப்படும்
நீலவளையக் கணவாயின் கடி ஆபத்தானது.
பேய்க்கடம்பன், சிலந்திமீன், நீராளி, சாக்குச் சுருள்
போன்றவை கணவாயின் வேறு தமிழ்ப்பெயர்கள்.
No comments :
Post a Comment