முரல் (Gar fish)
மெலிதான நீலம் தோய்ந்த பச்சை வண்ண மீன் இது. உடல்
வண்ணம் மட்டுமின்றி முரல் மீனின் எலும்புகளும் கூட பச்சை வண்ணம் தோய்ந்து காணப்படும்,
பகலில் பொதுவாக கடல் அடியில் பாசிகளுக்கு அடியில் இருந்து விட்டு, இரவில் கடல் மேற்பரப்பில்
நீந்துவது இந்த வகை மீனின் பொதுவான பழக்கம். ஆரல் போன்ற சிறுமீன்கள் இதன் இரை.
முரலின் முதுகுத்தூவியும், வால் தூவியும் ஒரே மாதிரியானவை.
இவ்விரு தூவிகளும் உடலின் பின்பகுதியில் வாலையொட்டி எதிரும்புதிருமாகக் காணப்படும்.
முரல் மீனின் வேகமாக உடல் அசைவுகளுக்கு இதுபோன்ற பின்தூவி அமைப்பு பெரிதும் பயன்படுகிறது.
வாலை தண்ணீர் மேற்பரப்பில் அசைத்தவண்ணம் நீர்மேல்
வழுக்கியபடி விரைவது முரல் மீன்களின் இயல்பு. இரவில் வெளிச்சத்தை நோக்கி பாயும் பழக்கமும்
முரலுக்கு உண்டு.
இதன் பற்கள் நிறைந்த நீண்ட அலகு காயத்தையும், சிலவேளைகளில்
உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது. உடலில் குத்திய முரலின் ஊசி போன்ற அலகு, உடைந்து
துண்டுதுண்டாகவும் வாய்ப்புள்ளது.
முழுநிலா காலம், மற்றும் காற்று குறைந்த நிலாவெளிச்சக்
காலங்களில் முரல்கள் கடற்பரப்பின் மேல் அதிக அளவில் மேயும்.
முரல்களில் வடிக்கிலி முரல், வாழியபோத முரல், வாளையா
முரல் (வாளா முரல்), வரயி முரல், கருமுரல், பிள்ளை முரல், கோழியாமுரல், பாம்பு முரல்,
செல்ல முரல், இரங்க முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல், நெடு முரல், பாசி முரல்,
படுக்கா முரல், பரவை முரல், கட்ட முரல், பரவை முரல், கூறைமேதல் முரல், அலமுரல், வாடையா
முரல் என பலவகைகள்..
இதில், கோழியா முரல், வடிக்கிலி முரல் போன்றவை
Half beak என்ற அரை அலகு வகையைச் சேர்ந்தவை. இந்த வகை மீன்களில் கீழ்த்தாடை மட்டும்
கூர்மையாக நீட்டிக் கொண்டு நிற்கும்.
முரல்களில் ஒருவகையான கலிங்கன் மீன்களுக்கு ஒரே அளவிலான
கூரிய மூக்கு உண்டு. இந்த கூர் மூக்கு அலகுகளில் முதலைக்கு இருப்பது போல் கூரிய பற்களும்
இருக்கும். உருளைக் கலிங்கன், கட்டைக் கலிங்கன் போன்ற மீன்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகை மீனுக்கும்
ஒவ்வொரு வகை பெயர் புழங்குகிறது.
அதன்படி கீழ்த்தாடை நீண்ட முரல், பிள்ளை முரல், கட்டை
முரல் என்றும், ஒரே அளவிலான ஊசிபோன்ற மூக்குடைய மீன் நெடுமுரல், வாளா முரல், என்றும் கருதப்படுவதுண்டு.
இதில் கலிங்கன் அல்லது பிள்ளை முரலுக்கு ஆள் பாய்ஞ்சான்
முரல் என்ற பெயரும் உண்டு. கலிங்கனில் சிறியது சாத்தான் மீன். அனைத்து முரல்களிலும்
மிகச்சிறியது பாச்சுவலை முரல். விரல் அளவே உள்ள சிறுமீன் இது.
அலகு நீண்ட முரல்கள், சிறிய மீன்களாக இருக்கும்போது
நீண்ட அலகின்றி காணப்படும். வளர வளரத்தான் இவற்றில் அலகு தோன்றும்.
முரல்கள் பச்சை நிறமாக, பச்சை நிற எலும்புடன் காணப்படுவதால்
பலர் அதை உண்ணத் தயங்குவார்கள். ஆனால் மனிதர்கள் உண்பதற்கேற்ற மிகச்சிறந்த மீன் முரல்.
No comments :
Post a Comment