சிறுவண்ணாத்தி (Butterfly fish) பெருவண்ணாத்தி (Angelfish)
இந்த இரு அழகிய மீன்களுக்கும் இடையில் உள்ள முக்கிய
வேறுபாடு அளவுதான். சிறுவண்ணாத்தி மீன்கள் சிறியவை.
பொதுவாக 6 அங்குல நீளத்துக்குக் குறையாதவை.
துடிப்புடன் வேகமாக நீந்தக் கூடியவை. பெரு வண்ணாத்திகள்
பெரியவை. மிக மெதுவாக அழகாக நீந்தக் கூடியவை. ஓரடி முதல் இரண்டடி அளவுள்ளவை.
இவ்விரு வகை மீன்களுமே பார் மீன்கள். இவற்றில் எத்தனை இனங்கள் இருக்கின்றன என்பது இன்னும் சரிவர கணிக்கப்படவில்லை.
ஆனால், எண்ணிக்கை எப்படியும் 150ஐத் தாண்டும்.
சிறு வண்ணாத்தி மீன்களில் பெரிய மீன்களும் சிறிய மீன்களும்
ஒரே மாதிரியான தோற்றம் உள்ளவை. ஆனால், பெருவண்ணாத்தி
மீன்களில் பெரிய மீன்களும், சிறிய மீன்களும் ஒன்றுபோல இருப்பதில்லை.
வேறு வேறு இன மீன்கள் போல அவை தோன்றி மதிமயக்கும்.
சிறு வண்ணாத்தி பளீரிடும் அழகிய வண்ணங்களைக் கொண்டிருந்தாலும்
இதன் தலை, உடலில் இருந்து தனித்துவமான நிறத்தில் தோன்றும். பொதுவாக கண்கள் மீது கரியஇருண்ட கோடு ஓட வாய்ப்புண்டு. பெரும்பாலான சிறுவண்ணாத்திகளில் உடலில் கண்போன்ற ஒரு பொட்டு உண்டு.
இந்த வகை மீனை முன்பின் பார்த்திராத கொல்மீன்கள், தலை எது வால் எது என்று தெரியாமல் திகைக்க வாய்ப்புண்டு. சிறுவண்ணாத்தி பின்னோக்கி வேகமாக நீந்தும்போது, கண் என்று
நினைத்து தவறாக கண்போன்ற பொட்டை கொல்மீன் தாக்க வாய்ப்புண்டு. இதனால் சிறுஇழப்புடன் சிறு வண்ணாத்தி தப்பிமறையும்.
சிறுவண்ணாத்திகளில் சிலவகை மீன்களுக்கு நீளமான சாமணம்
போன்ற அலகும், அதன் நுனியில் வாயும் உண்டு. இதன்மூலம் கடல்பார்களின் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் இரைகளை, ஜப்பானியர்களின்
சாப்ஸ்டிக் லாகவத்துடன் சிறுவண்ணாத்தியால் எடுக்க முடியும்.
சிலவகை பெரிய மீன்களில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்றி
அதை இரையாக உண்ணவும் இந்த சாமணஅலகு பயன்படுகிறது.
இப்போது பெருவண்ணாத்திக்கு வருவோம். ஏலவே சொன்னது போல இவை ஓரடி முதல் ஈரடி வரை நீளம் உள்ளவை. பெரும்பாலும் செவ்வக வடிவம் கொண்ட மீன்கள் இவை.
கடலில் முக்குளிப்பவர்களைக் கண்டு பயப்படாமல் அவர்களின்
அருகில் வந்து நீந்தும் பழக்கம் இந்தவகை மீனுக்கு உண்டு. தன் அழகை மற்றவர்களுக்கு இது காட்டத் துடிப்பது போல அப்போது அவை நடந்து கொள்ளும்.
பெருவண்ணாத்தி மீன்களில் பொதுவாக வாயின் வண்ணமும் உடல்
வண்ணமும் ஒன்றுபோல இராமல் மாறுபட்டு இருக்கும். உதட்டுச் சாயம் பூசியது போன்ற வண்ண
வாயுடைய மீன் இது. இதன் முதுகு மற்றும் வால்தூவிகள் பொதுவாக வெண்மை
நிறத்தில் காணப்படும். முதுக்குத் தூவியின் முனைகள் சாட்டை போல
சற்று நீண்டிருக்கலாம்.
பெருவண்ணாத்திகளின் செவுள் மறைவில் தடிமனான முள் இருக்கவும்
வாய்ப்புண்டு.
No comments :
Post a Comment