Wednesday, 26 February 2020


திமிங்கிலங்களை ‘குருடாக்கும்’ சூரியப்புயல்
அண்டவெளியில் ஆரஞ்சுநிறப் பழம்போல தகதகக்கும் சூரியனுக்கும், நீலக்கடல்சூழ்ந்த நம் பூவுலகின்  திமிங்கிலங்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா?
சாம்பல் திமிங்கிலம்
ஏன் இருக்கலாமே என்கிறார்கள் அறிவியலாளர்கள். சூரியன் அவ்வப்போது அதிகத்திறன் கொண்ட துணுக்குகளை உமிழ்வது வழக்கம். அவற்றை சோலார் புயல் என்பார்கள். அதிக அளவில் மின்காந்த கதிரியக்கம் கொண்ட அவை அடிக்கடி நமது புவியை வந்து தாக்குவதுண்டு.
ஆனால், நமது புவிப்பந்தை காந்தக்கோளம் ஒரு குமிழ் போல, ஒரு கவசம் போல நின்று சூழ்ந்து நின்று, இந்த சூரியப்புயல் தாக்குதல்களைத் தடுத்து விடுவதால் புவிவாழ் மனிதர்களுக்கு இந்த புயலால் கேடு எதுவும் விளைவதில்லை. மனிதர்களால் ஏவப்பட்டு விண்வெளியில் உலா வரும் செயற்கைக்கோள்கள் மட்டும் அவ்வப்போது சிறிய அளவில் பாதிப்பை சந்திப்பதுண்டு.
இந்த சூரிய மின்காந்தப்புயல்கள் நமது கடல்களில் உள்ள சாம்பல் திமிங்கிலங்கள் அதிக அளவில் தரைதட்டி, கரையேறி உயிரிழக்க காரணம் என அறிவியலாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
சாம்பல் திமிங்கிலங்கள் பெருங்கடல்களில் பத்தாயிரம் மைல் தொலைவுக்கும் மேல் வலசை போகக்கூடியவை. கோடையில் வடக்கு நோக்கிப் புறப்பட்டு அலாஸ்காவின் அலியுசன் தீவுகள் வரை பயணப்படும் இவை குளிர்காலத்தில் தெற்கு நோக்கித் திரும்பி வந்து விடும்.
தரை தட்டிய பேருடல்
சாம்பல் திமிங்கிலங்கள், கடலில் வழிகண்டுபிடித்து பயணிக்க புவியின் மின்காந்த வயல்களைப் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் சூரிய மின்காந்தப்புயல்கள், சாம்பல் திமிங்கிலங்களின் திசையறியும் திறனைக் குழப்பி அவற்றைகுருடாக்கிகடற்கரைகளில் தரைதட்டச் செய்து விடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அண்மைகாலமாக சாம்பல் திமிங்கிலங்கள் தரைத்தட்டி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 215 சாம்பல் திமிங்கிலங்கள் இதுபோல உயிரிழந்து உள்ளன. ஜெசி கிராங்கர் என்ற பெண் ஆய்வாளர் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தரைதட்டிய அனைத்து சாம்பல் திமிங்கிலங்களைப் பற்றியும் ஆய்வு நடத்தினார். அதில், தரைதட்டிய பெரும்பாலான திமிங்கிலங்கள் உணவுப் பற்றாக்குறையாலோ, அல்லது உடல்நலம் குறைந்தோ, கப்பல்களில் மோதி காயமடைந்தோ கரையேறவில்லை என்பதை அவர் கண்டறிந்தார்.
சிலவேளைகளில் மனிதர்கள் கடலில் பயன்படுத்தும் சோனர் கருவிகள், கடலடியில் எண்ணெய் வளத்தைக் கண்டறியப் பயன்படுத்தும் ஏர்கன்கள், போன்றவையும் திமிங்கிலங்களைக் குழப்பலாம்.  ஆனால், பெருமெடுப்பில் திமிங்கிலங்கள் தரைதட்டிய விடயத்தில் சூரிய மின்காந்தப்புயல்கள்தான் உண்மைக் குற்றவாளிகள் என்பதை ஒருவாறு அவர் உறுதி செய்திருக்கிறார்.
ஏற்கெனவே கூறியதுபோல சாம்பல் திமிங்கிலங்கள் நெடுங்கடல்களில் திசையறிந்து பயணப்பட புவியின் மின்காந்த வயல்களையே நம்பியிருக்கின்றன. கடல்களின் ஆழத்தில் மூழ்கியபடி அவை பயணம் செய்வதால் திமிங்கிலங்களால் கண்களைப் பயன்படுத்த முடியாது. மின்காந்த வயல்களையே பயன்படுத்துவதன்மூலம் எங்கே இருக்கிறோம், போக வேண்டிய இடம் எது என்பதை அவை முடிவு செய்து கொள்கின்றன.
இந்தநிலையில் சூரிய மின்காந்தப்புயல்கள் அவற்றைக் குழப்பிவிட்டால், ஆறாவது தெருவில் இருக்கும் அவை தவறுதலாக நாலாவது தெருவில் இருப்பதாக நினைத்து விடுகின்றன. இந்த தவறு அவற்றைத் தரைதட்ட வைத்துவிடுகிறது.
திமிங்கிலங்கள் தவறுதலாக பெரிய மீன்பிடிக் கப்பல்களின் வலையில் சிக்கி மூச்சுத்திணறி இறக்க வாய்ப்புண்டு. கப்பல்களில் மோதி காயமடைவதுண்டு. உடல்நலக்குறைவு, கடலின் சூழல் சீர்கேடு, வரிப்புலியன் சுறா போன்ற எதிரிகளின் தாக்குதல் போன்றவற்றாலும் அவை இறப்பைத் தழுவுவதுண்டு. புவி வெப்பமடைவதால் கடல்சூடாகி திமிங்கலத்தின் வழமையான உணவுப் பற்றாக்குறையாகியும்கூட அவை தவிப்பதுண்டு.
கரையொதுக்கம்
ஆனால், இப்போது சூரிய மின்காந்தப்புயல் என்ற புதிய வில்லன் திமிங்கிலங்களுக்கு எமன் எனத்தெரிய வந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
இதை உறுதிப்படுத்துவது போல, சூரியன் அதிகமாக மின்காந்த புயல்களை உமிழும் நாள்களிலேயே சாம்பல் திமிங்கிலங்கள் தரைதட்டுவது அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
இருந்தும்கூட, ‘சாம்பல் திமிங்கிலங்கள் தரைதட்டுவதற்கு சூரிய மின்காந்தப் புயல்கள் மட்டுமே முதன்மை காரணம் என கூறிவிட முடியாது’ என்கிறார் ஜெசி கிராங்கர்.
உலக அளவில் சாம்பல் திமிங்கிலங்களைப் பொறுத்த அளவில் ஆசியக்கடல்களில் 200 திமிங்கிலங்களும், மேற்குக் கடல்களில் 27 ஆயிரம் திமிங்கிலங்களும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவை அழியும் நிலையில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதல்.

No comments :

Post a Comment