உடும்பன் சுறா (Coral Catshark) (Atelomycterus marmoratus)
பூனை போன்ற கண் |
சுறாக்களில் பூனை போல கண்கள் உள்ள சுறாக்களில் எண்பது வகைகள்
உள்ளன. மூன்றடிக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த சுறாக்களுக்கு, ‘பூனைச்சுறாக்கள்’
(Catsharks) என்று யாரோ ஒரு புண்ணியவான் பெயர் சூட்டிவிட்டார்.
இந்த வகை பூனைச்சுறாக்கள் ஒருவகையில் கடலடி தரையில் வாழும்
சுறாக்கள். குறிப்பாக பவழப்பாறை களில் இவை வாழக்கூடியவை.
அதுபோன்ற பூனைச் சுறாக்களில் ஒன்றுதான் உடும்பன் சுறா (Coral
Catshark). முதல் பார்வைக்கு இது பூனைபோலவும் இல்லை, சுறா போலவும் இல்லையே என்று
தோன்றலாம். உண்மைதான். பார்வைக்கு இது அழகிய பாம்பு போலவும் விலாங்கு போலத் தான் தோன்றும். ஆனால் இது சுறா இனம்தான்.
உடும்பன் சுறாக்கள் திருவாளியன் எனப்படும் Leopard Sharkகுகளின்
சிறிய சந்ததிகள் போல பார்வைக்குத் தோன்றும். இதன் குழாய் போல நீண்ட வெளிர்சாம்பல்
நிற உடலில் வெள்ளை நிற புள்ளிகளும், கருப்புநிற புள்ளிகளும் காணப்படும். உடும்பன்
சுறாவுக்கு இரண்டு முதுகுத் தூவிகளும், இரண்டு பக்கத் தூவிகளும் உள்ளன.
முதுகுத்தூவிகள் பின்பக்கமாக வளைந்திருக்கும்.
உடும்பன் சுறா |
குறுகிய வாலும், தலையும் கொண்ட இந்த சுறா, பார் இடுக்குகளிலும்,
பொந்துகளிலும் மறைந்து வாழக் கூடியது. இதன் நீண்ட உடல் இண்டு இடுக்குகளில் மறைந்து வாழ
உதவுகிறது. உடலின் வண்ணம், பார்களில் உருமறைப்பு செய்து கொள்ள உதவுகிறது.
உடும்பன் சுறாவின் அறிவியல் பெயர் Atelomycterus marmoratus.
கிரேக்க மொழியில், இந்தப் பெயருக்கு ‘சரி வர அமையாத மூக்கு’ என்பது பொருள்.
உடும்பன் சுறா, ஒன்றரை அடி முதல் இரண்டரை அடி வரை நீளம் கொண்டவை. மனிதர்களுக்கு தீங்கு செய்யாத சுறா
இது. மட்டிகள், கிளிஞ்சல்கள், இறால்கள், சிறு மீன்கள் உடும்பன் சுறாவின் உணவு.
மீனவர்களின் வலையில் தவறுதலாக உடும்பன் சுறா சிக்குவதுண்டு.
உப்பிட்ட உணவாகவும், எண்ணெய் எடுக்கவும் இது பயன்படக்கூடியது. கடலில் வெடிவெடித்து
மீன் பிடிப்பதால் அதிக அளவில் பாதிக்கப்படும் மீன் இனங்களில் உடும்பன் சுறாவும் ஒன்று.
No comments :
Post a Comment