Monday, 28 October 2019


முத்தான முத்து!



முத்தான முத்தல்லவோ..
கடல்தரும் சிறந்த செல்வங்களில் ஒன்று முத்து (Pearl). தென்பாண்டி கடல் முத்துக்கு ஆங்கிலத்தில் பியர்ல் (Pearl) என்று பெயர். ஆனால், இந்த பியர்ல் என்ற சொல்கூட தமிழின் பரல் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான். அதுபோல வடமொழியான சமஸ்கிருதத்தில் முத்துக்குப் பெயர் முக்தா. சொல்லவே தேவையில்லை. இந்த வட மொழிச் சொல்லும் முத்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து முகிழ்த்ததே. தமிழில் முத்துக்குத் தரளம், நித்திலம் என்ற வேறு வேறு பெயர்களும் உள்ளன.
முத்துக்களில் மொத்தம் பத்து வகைகள். அவற்றில் ஒன்று ஆணிமுத்து எனப்படும் கட்டாணி முத்து. அதுதவிர மக்கை முத்து, மடக்கு முத்து, கனதாரி முத்து, குறல் முத்து, குறவில் முத்து, பீசல் முத்து, களிப்பு முத்து, தூள் முத்து, ஒட்டுமுத்து என முத்துகளில் பத்து வகை.
அம்பு முத்து, புஞ்சமுத்து, பழமுத்து, பருமுத்து, சப்பத்தி, வட்டமுத்து, ஏப்புமுத்து எனவும் முத்துகளை வகை பிரிப்பார்கள்.
சிப்பிக்குள் சிலவேளைகளில் திராட்சைக் கொத்து போன்ற கொத்து முத்துகள் இருக்கும். கடுகு அளவில் இருந்து காட்டு இலந்தை, புறா முட்டை அளவு வரை பல அளவுகளில் முத்துக்கள் இருக்கும்.
முத்துக்களில் குற்றங்களும் காணப்படும். சங்க கால நூல்களின்படி முத்துகளில் 12 விதமான குற்றங்கள் பட்டியலிடப்படுகின்றன.
அந்த குற்றங்களில் ஒன்று ‘காகபாதம்’. காகத்தின் கால்பட்டு நகம் பிறாண்டியதைப் போல முத்தின் மேல் வடு இருந்தால் அது காகபாதம். இதர குற்றங்களில் களங்கம், ஓரை, விந்து போன்றவை சில.
ஆலங்கட்டி போல அதாவது பனிக்கட்டி போல முத்து ஒளிவீசும். வெண்ணீர்மை கொண்ட அந்த நல்முத்து மிகவும் விலை உயர்ந்தது.

No comments :

Post a Comment