Friday, 1 November 2019

பலத்த கடி!

தலையில் கடி! தப்பிய சுறா!

அக்டோபர் 4ஆம்தேதி!
அட்லாண்டிக் கடலின் வடபகுதியில், நோவா ஸ்காஷியா அருகே ஒரு பெரிய ஆண் வெள்ளைச் சுறாவை ஆய்வாளர்கள் உயிருடன் பிடித்தனர். 528 கிலோ எடையுள்ள சுறா அது. அதன் நீளம் 12 அடி 9 அங்குலம். (3.8 மீட்டர்).
அந்தச் சுறாவின் தலையில் இருந்த இரண்டு காயங்கள் ஆய்வாளர்களை அதிர வைத்து விட்டன. அவ்வளவு பெரிய சுறாவின் தலையில் பலமான இரு கடிகாயங்கள். கீழ்த்தாடைப் பகுதி யில் இருந்த காயம் நாள்பட்ட காயம். அது நன்கு ஆறியிருந்தது. தலைமேல் இருந்த காயம் புத்தம் புதியது.
பிடிபட்ட ஆண் சுறாவுக்கு விமி என பெயரிடப்பட்டது. கழுத்தில் அடையாளப்பட்டியுடன், விமி எங்கே சென்றாலும் அதை கண்டுபிடிக்க வசதியாக டிராக்கர் கருவி ஒன்றும் பொருத்தப்பட்டது. அதன்பிறகு விமி கடலில் விடப்பட்டது.
அவ்வளவு பெரிய விமியை யார் கடித்திருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் ரொம்ப நேரம் மண்டையைப் போட்டுக் குடைந்து கொள்ளவில்லை.
கடலின் மிகப்பெரிய கொல்விலங்கான ஒரு வெள்ளைச் சுறாவை வேறு யார் கடித்திருக்க முடியும்? வேறு ஒரு வெள்ளைச்சுறாதான் கடித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள்.
அதிலும் விமியின் தலையில் இருந்த கடி, கடித்த விலங்கின் பல்அமைப்பை பளிச்செனக் காட்டியபடி இருந்தது. அந்த பல்பதிவுத் தடத்தை வைத்து, விமியைக் கடித்தது, அதைவிட பெரிய மற்றொரு வெள்ளைச் சுறாதான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துவிட்டனர்.
விமி என்ற வெள்ளைச்சுறா
வெள்ளைச் சுறாக்களின் உலகம் வன்முறை நிறைந்த உலகம். உணவுக்காக சில வேளைகளில் வெள்ளைச் சுறாக்களுக்குள் சண்டை மூளும்.
சிலவேளைகளில் பெண் மீனுடன் யார் உறவு கொள்வது என்பதில் ஆண் சுறாக்களுக்குள் போட்டி ஏற்பட்டு அது சண்டையாக உருமாறும். விமி அப்படி ஒரு இணை சேர்க்கைப் போட்டியில் இறங்கி, அதனால் தான் அதை விட பெரிய ஆண் சுறாவிடம் கடி வாங்கியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய் வாளர்கள்.
வெள்ளைச் சுறாக்களில், உடல்முழுக்க கடிகாயங்களுடன் திரியும் சுறாக்கள் அதிகம். சில சுறாக்கள் பிய்ந்து போன முதுகுத்தூவிகளுடன் சுற்றித் திரியும். ‘விழுப்புண்கள்’ இல்லாத வெள்ளைச் சுறாக்களைப் பார்ப்பது சற்று அரிதானது.
அதுபோல கருங்குழவி ஓங்கல்கள்  எனப்படும் கில்லர் வேல்களாலும் (Killer Whale) வெள்ளைச் சுறாக்களுக்கு ஆபத்து நேர்வதுண்டு.
ஆழ்கடல் அறிவியல் தற்போது அநியாயத்துக்கு முன்னேறி விட்ட நிலையில், சுறாவின் ‘லப்டப்’ இதயத்துடிப்பைக் கூட அல்ட்ரா சவுண்ட் கருவிகள் மூலம் ஆய்வாளர்கள் இப்போது அறிந்து கொள்கிறார்கள்.
பதற்றமற்ற  வேளையில் சுறாவின் இதயம் நிமிடத்துக்கு பத்துமுறை துடிக்குமாம். அதுபோல வெள்ளைச்சுறாக்கள் பெருங்கடல்களில் மிக நீண்ட தொலைவுக்கு வலசை செல்வதும், கடலின் அடியில் 1,128 மீட்டர் (3,700 அடி) ஆழம் வரை அவை செல்வதும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
வெள்ளைச் சுறாக்கள் சில வேளைகளில் ஒரு குறிப்பிட்ட, தனிப்பட்ட வெள்ளைச் சுறாவை கூட்டமாக சேர்ந்து குதறுவதும் உண்டு. அண்மையில் ஆஸ்திரேலியாவில் ஒரு வெள்ளைச் சுறா தூண்டிலில் பிடிபட்டது. அதை வெளியே எடுத்தபோது அதன் தலை மட்டுமே(!) வெளி வந்தது. உடலைக் காணவில்லை. அதே இனத்தைச் சேர்ந்த சுறாக்கூட்டம் ஒன்று, அந்த சுறாவின் உடலைத் தின்று தீர்த்து விட்டது தெரிய வந்தது.
அந்த வகையில் பார்த்தால் நம் விமியை அதிர்ஷ்டக்கார சுறா என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட பெரிய அண்ணன்கள் பலருடன் போட்டி போட்டும் தலையில் மட்டும் கடி வாங்கிக் கொண்டு தப்பியிருக்கிறது நமது விமி.

No comments :

Post a Comment