Friday, 16 November 2018


குழிமீன் (Stonefish) (Synanceia)

உலகிலேயே மிக நஞ்சுள்ள ஒரு மீன் எது என்றால் அது குழிமீன் என்று அழைக்கப் படும் சாமீன்தான் (Stonefish). ஆங்கிலத்தில் இது கல்மீன் (Stonefish) என அழைக்கப் படுகிறதுஇதுகூட இந்த மீனுக்கு  மிக பொருத்தமான பெயர்தான்.
குழிமீன் அல்லது கல்மீன், கடலடியில் பாறைகளின் அருகே தனிமீனாக காணப் படும். பார்வைக்கு அச்சுஅசலாக ஒரு கல் போலவோ பாறைத் துண்டு போலவோ இது காட்சி தந்து, கண்களை ஏமாற்றும்

குழிமீனின் உடல் முழுவதும் தடிப்புகள், தசைத்துருத்தல்கள் இருப்பதால் பார்வைக்கு இது கல்போலவே தெரியும். போதாக்குறைக்கு, பழுப்பும் சாம்பலும் கலந்த வண்ணத்தில், உடல் முழுக்க சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறத்திட்டுகளுடன் குழிமீன் இருப்பதால் கல் போல நடிப்பது இந்த மீனுக்கு மிகவும் எளிது
பாதி உடல் மணலில் புதைந்த நிலையில், புழுதிபடிந்த ஒரு கல்சிற்பம் போல குழிமீன் காட்சி தரும். சில குழிமீன்கள் மீது பாசி கூட வளர் வதுண்டு. ஆகவே, கைதேர்ந்த முக்குளிப்பு வீரர்களால் கூட இந்த மீனை கடலடியில் கண்டுபிடித்து விட முடியாது. இரை மீன்களாலும் குழிமீனை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த மீனின் உருமறைப்பு (Camouflage) இருக்கும்.
கதிர்த்தூவிகள் கொண்ட நச்சுமீனான குழிமீன், அருகில் வரும் சிறு மீன்களை இரையாக்கி உண்ணக் கூடியது. தன் வாய்க்குள் அடங்கக் கூடிய சிறுமீன்கள் வரும் வரை குழிமீன் பொறுமையாகக் காத்திருக்கும். தன் உடல் எவ்வளவு நீளம் இருக்கிறதோ அந்த அளவு தொலைவுக்குள் இரை வந்ததும், திடீரென உயிர்பெற்று மின்னல் வேகத்தில் இது இரைமீனைத் தாக்கும். சின்ன வாயசைவு மூலம் வாயை மேல் நோக்கி நகர்த்தி கண்ணிமைக்கும் நேரத்தில் இது இரையை விழுங்கும். பலம் வாய்ந்த வாய் கொண்டும், தாடைகளைக் கொண்டும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தி இரையை இது உறிஞ்சி முழுதாக விழுங்கி விடும்.
குழிமீனின் தாக்குதல் வேகம் வியக்க வைக்கக் கூடியது. 0.015 நொடி வேகத்தில் இது இரையைப் பிடிக்கக் கூடியது (!)
குழிமீனால் வேகமாக நீந்த முடியாது என்ற நிலையில், பல மணிநேரம் வரை இது இரைக்காக காத்திருக்கும். இரை தப்பிச் செல்ல முயன்றால் சட்டென வேகம் எடுத்து நீந்தி இரையை இது விழுங்கும். மேல்நோக்கி எகிறியும், தலைகீழாகப் பாய்ந்தும் புழுதிபறக்க குழிமீன் இரைபிடிக்கும்.
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்பதைப்போல மறைந்திருந்து தாக்கும் மர்ம மீன் இது. தன்னைவிட பெரிய மீன்களை குழிமீன் கண்டு கொள்ளாது.
குழிமீன் உலகிலேயே மிக அதிக நஞ்சுள்ள மீன் என முன்பே கூறிவிட்டோம். இந்த மீனின் முதுகுத்தூவியில் 13 கூரிய, வலுவான முட்கள் உள்ளன. தடித்த தோலு றைக்குள் இந்த முட்கள் இருக்கும். ஒவ்வொரு முள்ளின் அடியிலும் ஒன்று அல்லது இரண்டு நஞ்சுப்பைகள் இருக்கும்.
குழிமீனை யாராவது சீண்டினால் உடனே தனது முதுகு முட்களை அது உயர்த்தும். ஆனால், குழிமீன் தனது நிலையை (Position) குழிமீன் மாற்றிக் கொள்ளாது. இரையை பாய்ந்து பிடிக்கும் போது மட்டுமே தனது நிலையை மாற்றும்.
எதிரிகள் யாராவது மிரட்டினால், அல்லது தெரியாமல் யாராவது குழி மீனை மிதித்துவிட்டால், குழிமீனின் முட்கள் எதிரியின் மீது பாய்ந்து தைக்கும். அப்போது நஞ்சுப் பைகள் நசுங்கி, அதில் உள்ள நஞ்சு, முள்கள் உள்வழியாக மேலேறி, எதிரியின் உடலுக்குள் பாய்ந்துவிடும்.
குழிமீன் இரையைப் பிடிக்க ஒருபோதும் அதன் நஞ்சைப் பயன்படுத்தாது. தன்னை இரையாக்க வரும் சுறா, திருக்கை மீன்களிடம் இருந்து தப்பவே முட்களையும், நஞ்சையும் குழிமீன் பயன்படுத்துகிறது. குழிமீனின் நஞ்சு மிகவும் கொடியது. சிலவேளைகளில் கடலோரம் நீரில் இறங்கி நடக்கும் மனிதர்கள் அணிந்திருக்கும் காலணியையும் தாண்டி குழிமீனின் முட்கள் மனிதர்களின் கால்களை துளையிடக் கூடியவை.
குழிமீனின் நஞ்சு கொடிய வேதனையைத் தருவதுடன், தசைத்திசுக்களை செயலிழக்க வைத்து, மூச்சுவிடுவதில் சிக்கலை ஏற்படுத்தி, இதயத்தை இயங்காமல் செய்யக் கூடியது. குழிமீனின் முட்களால் குத்துப்பட்டவருக்கு வெந்நீர் மூலம் முதலுதவி அளித்தால் வலி சற்று நீங்கும். ஆனாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை. இல்லாவிடில் பாதிக்கப்பட்டவர் ஒரு மணிநேரத்தில் உயிரிழக்க வாய்ப்புள்ளது.
குழிமீனின் முட்கள் முறியாது என்று ஒரு கருத்தும், முள்ளில் உள்ள ஒரு சிறிய கொளுக்கி போன்ற அமைப்பு குத்துப்பட்டவரின் உடலில் தங்கும் எனவும் இருவேறு கருத்துகள் உள்ளன.
சரி, குழிமீனின் தாக்குதலால் ஏற்படும் வலி எப்படி இருக்கும்? அதைப்பற்றி வருணிக்கிறார் ஒருவர். ‘பெரிய சுத்தியல் ஒன்றால் காலில் ஓங்கி அடித்து, உடனே அரம் கொண்டு மாறி மாறி காலில் பலமாகத் தேய்த்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும்‘ என்கிறார்  முள்குத்தை அனுபவித்த ஒருவர். குழிமீன் தாக்குதலுக்குப்பின் நாலைந்து நாள்கள் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்றாலும்கூட அதன் பிறகும் நீண்டகாலத்துக்கு வலி நீடிக்கும்.
குழிமீன்களில் ஐந்து வகைகள் உள்ளன. சில குழிமீன்கள் நஞ்சற்றவை. ஓரடி முதல் ஓரடிக்கும் சற்று கூடுதலாக இவை வளரக்கூடியவை. சிறிய கண்களும், இரண்டு கிலோ வரை எடையும் கொண்ட குழிமீன் இனங்கள், ஆஸ்திரேலியாவின் வடகடலிலும், இந்திய பசிபிக் கடல்களிலும் காணப் படுகின்றன. ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை இவை உயிர்வாழும்.
கல்லிலே கலைவண்ணம் கண்டான், இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை செய்தான்என்ற பாட்டு குழிமீனைப் பொறுத்தவரை கொஞ்சம் கூட பொருத்தமில்லாத பாட்டு.
அதேவேளையில், ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்என்ற பழமொழி வேண்டுமானால் குழி மீனுக்கு சற்றுப் பொருந்தலாம். ஆனால், இந்தப் பழமொழியில் நாய் என்பதற்குப் பதில் மீன் என்ற சொல்லை நாம் சேர்க்க வேண்டும்.
குழிமீன், தண்ணீருக்கு வெளியே ஒரு நாள் (24 மணிநேரம்) வரை உயிர் வாழக் கூடியது என்பது இந்த மீனைப்பற்றிய சிறப்புத் தகவல்.

No comments :

Post a Comment